– திரிலோக சஞ்சாரி
”காலிலே கேன்வாஸ் ஷு மாட்டிக்கிட்டு வேகமா புறப்படறாங்க! எங்கே போறாங்கன்னு பின்னாலேயே போனா வீட்டுக்கு வந்துடறாங்க! கேட்டா வாக்கிங்னு சொல்றாங்க! இன்னும் சில பேர் நேரமாயிடுச்சு, நேரமாயிடுச்சுன்னு டென்ஷனா கிளம்பறாங்க! கேட்டா, டென்ஷனை குறைக்கறதுக்கு யோகா க்ளாஸ் போறாங்களாம்” இப்படி வெடிச்சிரிப்புகளை வீசிக்கொண்டே
வாழ்வை ரசிக்கவும் வாழ்வில் ஜெயிக்கவும் சொல்லித்தரும் நகைச்சுவைத் தென்றல் டாக்டர் கு.ஞானசம்பந்தன் உரையுடன் தொடங்கப் போகிறது வெற்றி வாசல்!
இந்த ஆண்டு வெற்றிவாசல் நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பம்சம், ”சாதனைச் சுடர்” விருது வழங்குதல்!! இந்த விருதைப் பெற இருப்பவர், காப்பீட்டு முகவர்களின் கால்முளைத்த களஞ்சியம் லுகி அமைப்பின் தலைவர் திரு.பி.ஸ்ரீநிவாசன் அவர்கள்.
தன் பெயரை ஸ்ரீநிவாசன் என்று உச்சரிக்க வேண்டும் என்பதில் தொடங்கி மனிதர் எல்லாவற்றிலும் அபாரமான அசாத்தியமான ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்! (சீனிவாசன் என்றால், சீனியில் வாசம் செய்யும் எறும்பைக் குறிக்கும் என்கிறார்). ஆனால் அந்த எறும்பின் சுறுசுறுப்பை இந்த வயதிலும் இவரிடம் பார்க்கலாம்!
வெற்றிவாசலின் அடுத்த அலை மனநல நிபுணர் குமாரபாபுவின் உரை. பல பிரபல மனநல நிபுணர்களை உருவாக்கியவர். பல முன்னணி நிறுவனங்களின் பயிற்சியாளர். 20000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு தியானம் சொல்லித் தந்திருக்கிறார். கூர்மையான நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரும் அசத்தப் போகிறார். மதிய உணவுக்குப் பிறகு மயக்கமா கலக்கமா என்று தயக்கம் வேண்டாம்.
ஒவ்வொருவரையும் உலுக்கி நிமிர்த்தும் உற்சாக உரை வீச்சாளர் பர்வீன் சுல்தானா பட்டையைக் கிளப்பப் போகிறார். உலக நாடுகள் பலவற்றில் உலாப் போனால்கூட வெற்றி வாசல் நிகழ்ச்சியில் பேசுவது வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்று என்று பரவசத்துடன் சொல்கிற பர்வீன் சுல்தானா, நெட் பிராக்டீஸ் செய்யும் கிரிக்கெட் வீரர்கள்போல வெற்றிவாசலுக்காகவே தயாராகிக் கொண்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்!!
நான்காவது பேச்சாளராக நம்மிடையே வர இருப்பவர் பதினெண்கவனகர் இராம. கனகசுப்புரத்தினம். இவரும் சுயமுன்னேற்ற உலகில் தனி முத்திரை பதிப்பவர். ஒரே நேரத்தில் பதினாறு விஷயங்களைப் பளிச்சென்று செய்யும் பேராற்றல் கொண்டவர். உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட இந்த சாதனை மனிதர், வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு முதன் முறையாக வருகை தருகிறார்.
இந்த வைபவத்தை நான்கு பேரையும் அடுத்தடுத்து நாற்பத்தைந்து நிமிஷங்கள் பேச வைத்து அரை நாளில் முடித்துவிடலாம்தான். ஆனால், வெற்றிவாசல் நிகழ்ச்சியின் அழகே வாசகர்கள் அதிகாலை முதல் வருகை புரிந்து, முன் பதிவு செய்து, ஒவ்வொரு பேச்சுக்கு நடுவிலும் தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை என்று ஆற அமர அனுபவிப்பதில்தான் இருக்கிறது.
இந்த ஆண்டும், பாவை கல்வி நிறுவனங்கள், நமது நம்பிக்கை மாத இதழுடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்குகின்றன. இவற்றின் தலைவர் ஆடிட்டர் நடராசன் அவர்களும் தாளாளர் மங்கை நடராசன் அவர்களும் தங்கள் பரபரப்பான வேலைகளுக்கு நடுவிலும் வெற்றிவாசல் ஏற்பாடுகள் பற்றி அடிக்கடி ஆர்வமாக விசாரிக்கிறார்கள்.
சக்தி பைனான்ஸ் லிமிடெட், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ், சி.ஆர்.ஐ., நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ், சாவித்திரி ஃபோட்டோ ஹவுஸ் போன்ற நிறுவனங்கள் விருந்தோம்பலில் கைகோர்க்க, பங்கேற்பாளர்களுக்கான பம்பர் பரிசுகளுடன் எந்த நேரமும் இந்தக் கூட்டணியில் இணையப் போகிறது ஐஸ்வர்யம் மார்க்கெட்டிங். வாழ்க்கை கொடுக்கும் புதிர்களை, தொடுக்கும் சவால்களை, வெற்றிகளை, ஏன் சின்னச்சின்ன தோல்விகளை, அவற்றுக்குப்பிறகு வரக்கூடிய அபார முன்னேற்றங்களை கொண்டாடும் நிகழ்ச்சிதான் வெற்றிவாசல்.
”மார்கழி மாதங்களில் வைணவக் கோயில்களில் செழிக்க வாசல் திறக்கிறது. அதேபோல் சுயமுன்னேற்றச் சிந்தனையாளர் களுக்கு ஒவ்வொரு மார்கழியிலும் கோவையில் ”வெற்றிவாசல் திறக்கிறது” என்றார் நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா.
வெற்றிவாசல் நிகழ்ச்சியில் காலை மாலை தேனீர், மதிய உணவு, பயிலரங்கப் பொருட்கள், நமது நம்பிக்கை இதழின் ஆண்டு சந்தா, புத்தம் புதிய புத்தகம் ஒன்று எல்லாம் உட்பட பதிவுக் கட்டணம் ரூ. 750/ மட்டும்.
புத்தாண்டைப் புத்துணர்வுடன் எதிர்கொள்ள வேண்டிய சக்தி தரும் வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்துவிட்டீர்கள் தானே??
Leave a Reply