– மரபின்மைந்தன் முத்தையா
வாழ்க்கை விடுக்கும் சவால்களை பெரிய மலையாகக் கற்பனை செய்யும்போது, அந்த சவாலை ஏறிக்கடக்கவோ சுற்றிக்கொண்டு கடக்கவோ முடிவு செய்கிறோம். அப்படி முடிவு செய்து முதலடி எடுத்து வைப்பதிலிருந்தே நம்முடன் வருகிற நண்பர் ஒருவர் உண்டு. அந்த நண்பரின் பெயர்தான் “அச்சம்”.
அச்சத்தை முற்றாகக் களைந்தெறிவது முடியாத காரியம். அச்சத்தின் நல்ல அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தால், முட்டுக்கட்டை போடும் அச்சமே முன்னேற்றத்தின் உந்து சக்தியாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. அச்சம் நமக்கு நட்பாக மாறும்போது நல்லதையே செய்கிறது. அதிரடியான குரலில் அனைத்தையும் தடுக்கும் அடாவடி நண்பனைப் போன்றதுதான் அச்சம். ஆனால் காலப்போக்கில் அதன் குரல் தணிந்து தணிந்து எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் எச்சரிக்கையை ஒரு சங்கீதம்போல் எழுப்பிக் கொண்டே கூட வருகிறது.
இலக்கை நோக்கிப் போகிறவர்கள், அச்சத்தை எதிரியென்று அறிவித்துவிட்டால், இலக்கை எட்டும் போராட்டம் மட்டுமின்றி அச்சத்துடனான போராட்டத்தையும் சேர்ந்தே மேற்கொள்ள நேரிடும். ஆனால் அச்சத்தை நண்பனாக்கி, அதன் எச்சரிக்கைக் குரலைமட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இலக்கை எட்டுவது இன்னும்…. இன்னும்…. எளிதான விஷயமாகிவிடுகிறது.
எவ்வளவு பெரிய விஷயத்தையும் கடந்து வருவதற்கு நமக்குத் துணைபுரியும் மற்றுமோர், முக்கிய அம்சம், தகுதி. நம் தகுதிகளை நம்மைவிடவும் தகுதிக் குறைவானவர்களுடன் மட்டுமே ஒப்பிட்டு திருப்திப்பட்டுக் கொண்டால் தகுதியை வளர்க்கவே முடியாது.
வீதியோரங்களில் சுவரில் கரிக்கட்டையால் கோடுவரைந்து அதையே ‘ஸ்டம்ப்’ என்று சொல்லி, கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களில் ஒருவராய் சச்சின் இருந்திருக்கக்கூடும். அவர்களுடன் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தால் அவர் தகுதி வளர்ந்திருக்காது. மாவட்டம் – மண்டலம் – மாநிலம் என்று தன்னினும் தகுதியானவர்களுடன் விளையாடி தன்னைத் தகுதி படுத்தி, தேசிய அணியில் இடம் பெற்று சர்வதேசப் புகழ்பெற்ற விளையாட்டு வீரராய் வளர்ந்தார்.
நம்மினும் வல்லவர்களை எதிர்கொள்வதும், அதில்வரும் ஆரம்ப கட்டத் தோல்விகளை ஏற்றுக்கொள்வதும், அந்த அனுபவங்களை அடித்தளமாக்கிக்கொண்டு அதிலிருந்து முன்னேறுவதும், தடைகளைத் தகர்க்கிற வழி.
அச்சம் என்பது எதிர்மறை உணர்வு. அதை சரியான கோணத்தில் உள்வாங்கினால், அது நமக்குத் துணை செய்கிறது. தோல்வி என்பது எதிர்மறையான ஒன்று. அதை சரியான விதத்தில் புரிந்து கொண்டால் அது நமக்குப் பாடங்களைச் சொல்லி பலப்படுத்துகிறது.
சவால்களை நம் பயணத்தின் பாதையிலிருந்து நகர்த்திவிட்டு சுலபமாக முன்னேற இந்த இரண்டுமே அவசியம்.
அதே போல நம்மை உற்சாகத்துடன் வழிநடத்துவதில் இன்னோர் அம்சமும் பெரும் பங்கு வகிக்கிறது. அதற்குத்தான் “உள்ளுணர்வு” என்று பெயர்.
ஒரு மலைமேல் ஏறுகிறபோதுகூட, பாறைகள் உருண்டுவருவதை, மழை தொடங்கப் போவதை புறச் சூழலில் ஏற்படும் ஓசைகளும் மாறுதல்களும் உணர்த்துவது போலவே உள்ளுணர்வும் சில சமிக்ஞைகள் மூலம் அடுத்து நடக்கப் போவதை அறிவித்துக் கொண்டேயிருக்கும்.
உள்ளுணர்வில் இருக்கிற இன்னொரு வசதி, அது பயங்காட்டுவதோடு நின்றுவிடாது. நம்முடைய பலங்களையும் இன்னதென்று பட்டியல்போட்டு உணர்த்திக் கொண்டேயிருக்கும். அந்த பலங்களை நம்பத் தொடங்கும்போது, மலைகளைக்கூட புரட்டக்கூடிய புத்துணர்வை நம் உள்ளுணர்வே நமக்கு வழங்கும்.
அப்படி வாழ்ந்த ஓர் இளைஞனின் கதை, எகிப்திய நாட்டின் பழைய நம்பிக்கையாய் நிலவுகிறது.
தன் தந்தைக்குப் பதினான்காவது மகனாகப் பிறந்த அந்தச் சிறுவன், தன் மூத்த சகோதரர்களால் மொத்தமாக வெறுக்கப்பட்டான். அதனாலேயே அவனுடைய தந்தைக்கு அவன் மேல் கூடுதல் பிரியம். அவன் சின்னஞ் சிறுவனாய் இருந்தபோதே கனவுகளை ஆராய்ந்து பலன் கூறும் கலையை அவனுக்குக் கற்றுக்கொடுத்தார்.
ஒரு நாள் அவனுக்குப் புத்தம் புதிய உடையொன்றை தந்தை வாங்கித்தந்தார். அதைப்பார்த்த சகோதரர்களுக்குப் பொறாமை பொங்கி வெடித்தது. ஆசை வார்த்தைகள் கூறி, அந்த அப்பாவிச் சிறுவனை, எகிப்து நாட்டிற்கு அடிமையாய் விற்று அனுப்பிவைத்தனர். அடிமைகள் சட்டை அணியக்கூடாது என்பதால் அவனுடைய புதிய சட்டையையும் பறித்துக் கொண்டனர்.
அப்பாவிடம் என்ன சொல்வது? ஒரு மிருகத்தின் ரத்தத்தை சட்டையில் தெளித்து சட்டையையும் கிழித்து “தம்பியை ஏதோ விலங்கு அடித்துத் தின்றுவிட்டது” என்று கிழிந்த சட்டையைக் காட்டிக் கண்ணீர் விட்டனர்!
எகிப்து நாட்டில் கொடுமையான மனிதன் ஒருவனிடம் அடிமையானான் அந்தச் சிறுவன். அந்த நாட்டின் அரசனுக்கு, தொடர்ந்து ஒதே விதமான கனவு வந்து கொண்டிருந்தது. அதன் பொருள் புரியாமல் குழம்பினான் அரசன். அதன் பொருளை சொல்பவர்களுக்கு பெரும் சன்மானத்தை அறிவித்தான்.
இந்தச் சிறுவன், அரசனைப் பார்த்து, கனவினைக் கேட்டு, பொருளையும் சொன்னான். “இரண்டே ஆண்டுகளில் கடும் உணவுப் பஞ்சம் வரப்போகிறது. இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள்” என்றான். அரசனும் அவ்வாறே செய்ய, சொன்னபடியே உலகெங்கும் உணவுப் பஞ்சம் வந்தது. அரசனின் முன்னேற்பாடுகளால் எகிப்து தேசம் பஞ்சத்தை எளிதில் கடந்து வந்தது. மகிழ்ச்சியடைந்த அரசன், அந்தச் சிறுவனைத் தேடிப்போனான். அதற்குள் அவனுக்குப் பதினாறு வயது ஆகியிருந்தது. அடிமைத்தளையில் இருந்து அவனை விடுவித்து, தன் அமைச்சராக்கிக் கொண்டான். அடுத்த சில ஆண்டுகளில் தன் மகளையும் மணமுடித்துக் கொடுத்தான்.
சகோதரர்களின் பொறாமை, அந்தச் சிறுவனை ஆயுள் முழுக்க அடிமையாக வைத்திருக்கப் பார்த்தது. திக்குத் தெரியாத தேசத்தில் தன் உள்ளுணர்வை நம்பிய சிறுவனின் உள்ள உறுதியோ அவனை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது.
சவால்மயமான சூழல்களை சந்திக்கும்போது, மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்கிற உறுதிகள், எந்த மலையையும் எளிதில் தாண்டத் துணைபுரியும் என்பது தெரிகிறதல்லவா!
மலைகள் நகரும்…
D.sathiyaraj
very nice