மாணவ மனசு

ரமேஷ் பிரபா

இளைய தலைமுறை எந்த அளவுக்கு அறிவுபூர்வமாக முன்னேற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை சென்ற இதழில் பெருமையோடு சொல்லியிருந்தேன். அதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கிற அதே நேரத்தில் இளைய தலைமுறை சார்ந்த இன்னொரு விஷயத்தையும் குறையாக சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. எந்த விஷயத்திலுமே தனக்குத் தெரியாதது இல்லை என்று நினைக்கிற அளவுகடந்த நம்பிக்கை பல சமயங்களில் இளைய தலைமுறையின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அறிவுபூர்வமாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தினாலேயே எல்லாமே எனக்குத் தெரியும் என்கிற மனோபாவம் தானாகவே அவர்களுக்கு வருவது தவிர்க்க முடியாததாகிறது. இதனால் பல சமயங்களில் சுலபமாக ஜெயிக்க வேண்டியவர்களேகூட, முயல் ஆமை கதையில் தெனாவட்டாக இருந்து தோற்ற முயலைப் போல தோற்க வேண்டியதாகிறது. இது முழுக்க முழுக்க நமது மனோபாவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

இந்தப் பிரச்சினை முதலில் வீட்டில்தான் தொடங்குகிறது. வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என நம்மைவிட வயதில் மூத்தவர்கள் எது சொன்னாலுமே அது மாணவப் பருவத்தில் நமக்குத் தேவையில்லாத அறிவுரைகளாகத்தான் பல சமயங்களில் தெரிகிறது. வயதில் மூத்தவர்கள் என்பதாலேயே அவர்களுக்கு வெளியுலக அனுபவமும் நம்மைவிட பல மடங்கு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் அளவுக்கு அவர்கள் படித்திருக்கலாம், படிக்காமல் கூடப் போயிருக்கலாம். எல்லா அனுபவங்களுமே படிப்பில்தான் வரவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், அனுபவங்களின் மூலம் நிறைய படிப்பினையும் அறிவும் வளரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. எனவே, உங்களுக்கு எது நல்லது கெட்டது என்பதை உங்களைவிட அவர்களால் சிறப்பாகத் தீர்மானிக்க முடியும். ஆனால், தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் வசதி வாய்ப்புகள் நிறைந்த சுற்றுச் சூழல் உங்களுக்கு இருக்கிறது என்பதாலேயே உங்களுக்கு முந்தைய தலைமுறைக்கு எதுவுமே தெரியாது, அவர்கள் பழைய பஞ்சாங்கம் அவர்களது அனுபவம் எதுவுமே இன்றைக்கு உதவாது என்று நினைப்பது தவறான அணுகுமுறை.பெற்றோர்களைப் பொறுத்தவரை, மாணவப் பருவத்தை அவர்களும் கடந்து வந்தவர் கள்தான் என்பது ஒருபுறம் இருக்க, அதைத் தாண்டி உங்களது மூத்த சகோதர, சகோதரிகள் மூலமாக அவர்களது மாணவப் பருவத்து அனுபவத்தையும் பார்த்தவர்கள் என்பதால், உங்கள் மாணவப் பருவத்தை சிறப்பாகக் கடக்க நிறைய நல்ல வழிகாட்டல்களை அவர்களால் கொடுக்க முடியும்.

பெற்றோர்கள் சார்ந்த இந்த அணுகுமுறை, ஆசிரியர்கள் விஷயத்திலும் பொருந்தும்.பல சமயங்களில் “ஆசிரியர்களுக்குப் பெரிய அளவில் வெளியுலகம் தெரியாது. 25 வருடங்களுக்கு முன்பு படித்ததை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று நீங்கள் நினைப்பதால், அவர்களிடம் போய் எந்த வழிகாட்டலையும் நீங்கள் கேட்பதில்லை. பாடம் தவிர்த்த எந்த விஷயங்களுமே ஆசிரியர்களுக்குப் பெரிதாகத் தெரியாது என்று நினைக்கிற மூட நம்பிக்கையையும் பல சமயங்களில் நீங்கள் வளர்த்துக் கொள்கிறீர்கள். அதனாலேயே, இவர்கள் சொல்லி நாம் கேட்கிற அளவுக்கு என்ன இருக்கிறது என்கிற அபிப்பிராயத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டு ஆசிரியர்களை பொருட்படுத்துவதில்லை. ஆனால், உங்களைப் போன்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் மாணவப் பருவத்தை பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள். எனவே, மாணவப் பருவத்தில் எப்படியெல்லாம் இருந்தவர்கள் பிறகு வாழ்க்கையில் எப்படியெல்லாம் உயர்ந்திருக்கிறார்கள் அல்லது தாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாகக் கண்டவர்கள் அவர்கள். அதன் அடிப்படையில், மாணவப் பருவத்தில் வழிகாட்ட ஆசிரியர்களிடம் எக்கச்சக்க அனுபவம் தேங்கிக் கிடக்கிறது. அந்த அனுபவத்தை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்த பிறகும் பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தினால் அதனால் ஏற்படும் நஷ்டம் உங்களுக்குத்தானே தவிர, ஆசிரியர்களுக்கு அல்ல.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவிர, படிக்கும் பருவத்தில் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ பல்வேறு நிகழ்ச்சிகளுக்கென சிறப்பு விருந்தினர்கள் வருவதுண்டு. இந்த சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு வகைப்பட்ட தரப்பினராக இருப்பார்கள். அதாவது, ஒரு சிலர் பொழுதுபோக்கு அம்சம் சார்ந்தவர்களாகவும், இன்னொரு சிலர் நமக்கு நிறைய தகவல்களை சொல்பவர்களாகவும், வேறு சிலர் நமக்கு வழிகாட்டிகளாகவும், இன்னும் சிலர் நாம் மதிக்கும் முன்னோடிகளாகவும் இருப்பார்கள்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில்கூட பல சமயங்களில் அவர்கள் பேசுவதை சீரியஸாக கவனிக்க மாணவப் பருவம் அனுமதிப்பதில்லை. காரணம், ஒரு சில விஷயங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் என நினைத்து அதில் உள்ள சீரியஸ் கருத்துக்களை தமாஷாக விட்டுவிடுவது. இன்னும் சில சமயங்களில் தன் வாழ்க்கை பயணத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த கதையை சொல்லும் போது, உனக்கு வேண்டுமானால் அது நடந்திருக்கலாம், எனக்கு அது நடக்காது, நான் சுலபமாகவே முன்னுக்கு வந்து விடுவேன் என நினைப்பது. சில வழிகாட்டல் விஷயங்கள் பேசப்படும்போது இதெல்லாம் தேவைப்படாது என்று நீங்களாகவே முடிவு செய்து கொள்வது.

நிறைய தகவல்களை சொல்லும்போது மேம்போக்காக மட்டும் கேட்டுவிட்டு, “இதெல்லாம் எனக்குத் தெரியுமே” என நினைத்து அதற்கு பிறகு சொல்லப்படுவதை கேட்காமலேயே விட்டு விடுவது. இவைதான் சிறப்பு அழைப்பாளர்களின் நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசும்போது மாணவப் பருவத்தின் மனோபாவமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உங்களை தானாகத் தேடி வந்து அடைகிற பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டல்களையும் கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகிறது.எப்போதுமே அதிகம் பேசுவதைவிட மற்றவர்கள் பேசுவதை அதிகம் கேட்பது நம் அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும் என்பதோடு நம் தவறுகளை திருத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமையும். மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்கும்போதுதான் நமக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதும், எவ்வளவு குறைவான அனுபவம் இருக்கிறது என்பதும், பல துறைகளில் நமக்கு சுத்தமாக அனுபவமே இல்லை என்பதும் நமக்கே புலப்படும்.

பொது மேடைகளில் பேசுபவர்களின் பேச்சை கேட்பதைத் தவிர, தனிப்பட்ட முறையில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையோ, வெளியில் அறிஞர்களையோ சந்திக்கும்போதுகூட, நாம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதை கேட்பது மாணவப் பருவத்துக்கு நிறையவே பயன்தரும்.இதுபோன்ற சமயங்களில் அவர்களைவிட உங்களுக்கு சற்று அதிக விஷயம் தெரிந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால்கூட, அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அடக்கி வாசிக்க வேண்டும். காரணம், இதெல்லாம் எனக்கு எப்பவோ தெரியுமே என்கிற தோரணையில் நீங்கள் ஒரு வரி பேசிவிட்டால்கூட, உடனே அவர்கள் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள். அதனால், உங்களுக்குத் தெரியாத விஷயம்கூட, அவர்களிடமிருந்து கிடைக்காமல் போய்விடும். எனவே, மேடைகளில் யாராவது பேசும்போதும் சரி, நேரில் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதும் சரி, அவர்கள் பேசுவது அத்தனையையும் உன்னிப்பாக கவனியுங்கள். அதன் பிறகு, உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி உங்களுக்கு எது தேவை, தேவையில்லை என்பதையும் அவர்கள் பேசியதில் எது சரி, சரியில்லை என்பதையும் நீங்கள் முடிவு செய்து தேவையானவற்றைபயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாததை விட்டுவிடுங்கள்.

அதேபோல், நிறைய விஷயங்களைப் பற்றிப் படிக்கும் ஆர்வத்தையும் மாணவப் பருவத்தில் வளர்த்துக் கொள்ளும்போது, நமக்கு இவ்வளவு விஷயம் தெரியாமல் இருக்கிறதே என்கிற உணர்வு உங்களுக்கு ஏற்படும். நமக்கு எல்லாமே தெரியும் என்று அவ்வப்போது தலைதூக்குகிற உங்களது அகந்தையும்கூட சற்றே அடிபட்டு உண்மையிலேயே நீங்கள் கற்றது கையளவுதான் என்பதை அவ்வப்போது உங்களுக்கு உணர்த்தும்.புதிய தலைமுறைக்கு நல்ல சூழலும், நிறைய அறிவைப் பெறக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் இருந்தால்கூட, பல சமயங்களில் எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற மனோபாவம் உங்களது அறிவை பயன்படாமல் செய்துவிடும். உங்களது அறிவும் மற்றவர்களுடைய அறிவு சார்ந்த அனுபவமும் இணையும்போதுதான் உங்களது வெற்றி இன்னும் அதிகரிக்கிறது. இதை மாணவப் பருவத்திலேயே புரிந்து கொண்டால் புதிய தலைமுறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கற்போம். கற்பிப்போம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *