சுகி. சிவம்
அஃறிணைப் பொருள் மேல் ஆத்திரத்தைக் காட்டும் அசட்டுத்தனம் பற்றி நாம் எப்போதாவது யோசித்தது உண்டா?பள்ளிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் போது பிள்ளைகள் வரும் வேகத்தைக் கவனித்தது உண்டா? உள்ளே நுழைந்ததும் ஷூவைக் கழற்றி எறியும் (கடாசி வீசும்) அலட்சிய ஆவேசத்தைக் கணித்தது உண்டா? தொபீரென்று பையைத் தூக்கிப் போடுவது அல்லது ரிங்பால் மாதிரி விட்டு எறிவதையும் பார்த்தது உண்டா?
ஏன்? ஏன்? ஏன்? ஏனிந்த எரிச்சல்… எல்லாவற்றையும் எடுத்தெறியும் மெகா கோபத்தின் மூலம் எது? யோசித்தது உண்டா? உடலுக்குள் சிறைப்பட்ட கழிவுகள் காரணமா? உடலே பள்ளி அறைக்குள் சிறைப்பட்ட கொடுமைகள் காரணமா? சின்ன மனத்தின் சிறகுகளை முறித்தெறியும் ஆசிரியர் அசுரர்களின் அராஜகமும் அடக்கு முறையும் ஏற்படுத்திய எதிர்மறை விளைவா? எதுவானால் என்ன? அஃறிணைப் பொருள் மேல் ஆத்திரத்தைக் காட்டும் அசட்டுத்தனம் பற்றி நாம் எப்போதாவது யோசித்தது உண்டா? கொஞ்சம் யோசியுங்கள்.
வளர்ந்து வயதானாலும் இந்த அஃறிணை ஆத்திரம் குறைவதே இல்லையே. கணவன் மீது ஏற்பட்ட கடுங்கோபத்தை, மாமியார் அல்லது யாரோ ஒரு தனிநபர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தை, பாத்திரத்தின் மூலம் தணித்துக் கொள்ளும் சமையலறைச் சம்பவங்கள் நமக்குப் புதிதா என்ன? உயர்திணை மனிதர்கள் மீது காட்ட முடியாத கடுங்கோபத்தை அஃறிணைப் பொருட்கள் மீது ஆரோகணிக்கச் செய்வது அறிவுடைமை ஆகுமா?
மேலை நாடுகளில் கடுங்கோபத்தால் கஷ்டப்படுபவர்களைக் கொண்டு லாபகரமான வேலை ஒன்றை நிறைவேற்றிக் கொள்வதாகப் படித்திருக்கிறேன். ஆம், உடைக்கப்படவேண்டிய பழைய கார்களைப் பெரிய இரும்பு சுத்தியால் ஆத்திரம் தீர அடித்து நொறுக்கும்படி இவர்களிடம் விட்டுவிடுகிறார்கள். இதனால் பழைய கார்களை அடித்து நொறுக்கும் பணிக்குச் சம்பளம் தர வேண்டியதில்லை. கோபங்களை லாபங்களாக்கும் அமெரிக்க முதலாளிகள் மூளையைப் பாராட்டினாலும் அஃறிணைப் பொருள் மீது ஆத்திரத்தை வடியவிடும் அசட்டுத்தனத்தை அங்கீகரிக்க முடியுமா என்ன? கொஞ்சம் யோசியுங்கள்.
ஒரு சின்ன கதை. அவர் ஒரு ஞானி. அவரைப் பல இடங்களில் தேடி அலுத்த ஒருவர் முடிவாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அவசர அவசரமாக அவர் தங்கியிருக்கும் வீட்டின் கதவை அடித்தார். நெடுநாள் தேடிய எரிச்சல் மற்றும் பரபரப்பு காரணமாக வேகவேகமாக அவர் இருந்த வீட்டுக் கதவை டமால் என்று நெட்டித் தள்ளினார். பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவர் செருப்பைக் கழற்றும் பொறுமைகூட இன்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கழற்றி விட்டு எறிந்தார். செருப்புகள், சுவரில் மோதி சரிந்து விழுந்தன. தட தட வென்று ஞானி இருந்த அறைக்குள் நுழைந்தவர் தடாலென அவரது காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதார். தமக்கு வாழ்க்கை பற்றிய ஞானம் தரவல்ல குரு அவரே என்று கண்டறிந்ததாகப் பெரிதாக அலறினார்.
ஞானியோ அவரைச் சட்டை செய்யாது முகத்தைத் திருப்பிக் கொண்டார். மிகுந்த மதிப்போடு குருவைத் தேடிவந்த தம்மை அவமதிப்பது சரியா என்று ஞானியைக் கேட்டார் வந்தவர்.ஞானி தீர்க்கமாக வந்தவரை உற்று நோக்கினார். நீ எங்கு என்னை மதித்தாய்? உன்னை நான் எப்படி மனமார வரவேற்க முடியும். உன் செய்கைகளை நான் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அந்த வாசல் கதவுகளை நீ ஏன் அவமதித்தாய். அவை உனக்கு என்ன தீங்கு இழைத்தன? எவ்வளவு காலமாக இந்த வீட்டை அவை காவல் காத்து வருகின்றன. கடமையைச் சரியாக ஆற்றும் கதவுகளை நோகும்படி நெட்டித் தள்ளினாயே அது சரியா? உன்னை வெப்பத்திலிருந்தும் முள்ளிலிருந்தும் பாதுகாத்த செருப்புகளை எவ்வளவு அலட்சியமாக விட்டெறிந்தாய்? பண்பாடற்றவன் நீ! நன்றி இல்லாதவன் நீ! அந்தச் செருப்புகள் சுவரில் முட்டிய போது அவை எவ்வளவு அவமானப்பட்டிருக்கும் என்பது உனக்குத் தெரியுமா? எவ்வளவு வலியை உணர்ந்திருக்கும் தெரியுமா? போ… போய்… செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா… அதன்பிறகு வேண்டுமானால் உன்னோடு பேசுகிறேன்” என்றார் ஞானி.
உங்களுக்கென்ன பைத்தியமா? செருப்புக்கும் கதவிற்கும் உயிருண்டா என்ன? அவற்றிடம் மன்னிப்பு கேட்க… என்றார் வந்தவர்.உன் கோபத்தை அவற்றின் மீது காட்டும் போது அவற்றை உயிருள்ளவை போல நினைத்துத் தானே காட்டினாய். அப்போது உயிருள்ளவை போல நடத்தலாம் என்றால் மன்னிப்பும் கேட்கலாம் தப்பில்லை… போ… போய் உன் தவறுக்காக செருப்புகளிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு கேள்” என்றார் ஞானி.
வந்தவருக்கோ ஞானியிடம் காரியம் ஆக வேண்டும். ஞானியைத் திருப்தி செய்வதற்காகவாவது மன்னிப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாகச் செருப்புக்களிடமும் கதவுகளிடமும் மன்னிப்பு வேண்டினான். ஆனால், அப்படி கேட்கும்போதே தன் மனத்தில் இதுவரை இருந்த க்ரோதம், பாரம் குறைவதை உணர்ந்தான். தான் பாரமான மண்ணாக இருந்ததில் இருந்து லேசான ஆகாயமாக மாறியதை அனுபவித்தான். அவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வரத் தொடங்கியது.
முற்றிலும் வித்தியாசமானவனாக வந்து ஞானியை வணங்கினான். ஞானி அன்புடன் மகனே. என்று அழைத்து இறுகத் தழுவினார். அவனுக்கு வானம் வசப்பட்டது. ரோஜா கரம் கொடுத்தது.
இது வெறும் கதையல்ல. வாழ்வைப் பற்றிய ஞான பாடம். புத்தகங்களை எடுக்கும்போது பரிவுடன் எடுப்பவர்கள் பாடம் படிக்கிறார்களோ இல்லையோ பாடம் நடத்துகிறார்கள். அஃறிணைப் பொருட்களைக் கூட உயர்திணை மனிதர்களைப் போல மரியாதையுடன் நடத்துபவர்கள் மிக உயர்ந்த நிலை அடைகிறார்கள்.
நம்ப முடியவில்லையா? நாச்சியார் திருமொழி படித்தது உண்டா? அஃறிணைப் பொருளான வெண்சங்கைப் பார்த்து ஆண்டாள் சொன்ன வார்த்தைகள் என்ன? சங்கனாயா என்பதே! சங்குஅனாயா என்று பிரிக்கலாம். சங்கர்’ஐயா என்றும் பிரிக்கலாம். எப்படிப் பிரித்தாலும் அஃறிணைச் சங்கு உயர்திணை மரியாதை பெற்றதே நாச்சியார் அனுபவம்.
திருப்பதிக்குப் போகிறார் ராமானுஜர். மலை கல்லாகத் தெரியவில்லை. உயிராகத் தெரிகிறது. கால் வைத்து எப்படி மிதிப்பது என்று மிதிக்க மனமின்றி முட்டிக்கால் தேய மலை ஏறினார் என்கிறது வரலாறு. பெருமாளே கல்லாகத் தெரிகிறது பலருக்கு. ஆனால் மலைகூட உயிராகத் தெரிகிறது ராமானுஜருக்கு!
உயர்திணை மனிதரைக்கூட அஃறிணை போல நடத்தும் கொடியவர்கள் மனிதர் அல்லர். உயர்திணை விலங்குகள். அஃறிணைப் பொருட்களையும் உயர்திணை உணர்வுடன் கவுரவித்தலே வளரும் வழி. உயரும் நெறி. அப்படி வாழ்ந்தால் நம்மை அரைப் பைத்தியங்கள் என்று சில முழுப் பைத்தியங்கள் சித்தரிக்கும். அதனால் என்ன? நாம் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திப்போமே!
(தொடரும்)
banu
sir ,naanum ethai matheri vala muyairchi panren.thankyou sir
benny
you r great sir
Meenatchi Sundaram.V
Endrum Niranthara unmai…
Meenatchi Sundaram.V
Manitharkalaivida 5 arivu jeevikalae saala chiranthathu…….