சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?

– சுந்தர மூர்த்தி

நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள். “சும்மா சொல்லுங்க! நல்லதுக்குதானே சொல்லப் போறீங்க என்று உற்சாகப்படுத்துவோம். அவர்கள் தயக்கத்துடன் சொல்லத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள்தான். நமக்குப் பொறுக்காது. “அப்படியா நினைக்கறீங்க! அது ஏன் தெரியுமா? என்று விளக்கம் கொடுக்கத் தொடங்குவோம். நன்கு யோசித்தால் அந்த விளக்கத்தில் நியாயமில்லாதது நமக்கே நன்றாக விளங்கும். ஆனாலும் பிடிவாதமாக விளக்கங்கள் தந்து கொண்டேயிருப்போம்.இன்னொரு வகையும் உண்டு. பிறரிடம் அவர்களுடைய குறைகளை நாம் மெல்ல சொல்லத் தொடங்குவோம். மென்மையாக ஆரம்பிப்போம். அவர்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். அவர் கேட்கக் கேட்க நமக்குள் உற்சாகம் பிறக்கும். நம் வார்த்தைகளில் காரணமே இல்லாமல் கடுமை தொனிக்கும். சிரித்துக்கொண்டே கேட்பவரை சீண்டி விடுவோம்.
அதிலும் அவர் நம்மை விட எளிய மனிதராக இருந்தால் கேட்கவே வேண்டாம். மேலே சொன்ன இரண்டு சூழ்நிலைகளுக்கும் என்ன காரணம்? நம் மனம், மூன்று விதமான மனநிலைகளில் மாறி மாறி இயங்குகிறது.
குழந்தை மனநிலை: இதுதான் அரவணைப்புக்கு ஏங்குகிறது. அவ்வப்போது சிணுங்குகிறது. சில நேரம் உலகத்தை வியப்பாகப் பார்க்கிறது. பல நேரம் முரண்டு பிடிக்கிறது.

பெற்றோர் மனநிலை: இந்த மனநிலை வரும்போது, நம் மனம் அடுத்தவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறை எடுத்துக்கொள்கிறது. நான் சொல்றேன் கேளு என்கிற கண்டிப்பும் அதிகாரமும் அங்கே ஆரம்பமாகிறது.
முதிர்ந்த மனநிலை: இதுதான் பக்குவமான நிலை. திறந்த மனதோடு விமர்சனங்களை ஏற்பதற்கும் சரி, சிறந்த ஆலோசனைகளை மற்றவர்கள் மனம் கோணாமல் எடுத்துச் சொல்வதற்கு சரி, இதுதான் மிகவும் உகந்த மனநிலை.

இப்போது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டப்பட்ட இருவிதமான சூழ்நிலைகளை மறுபடி பார்ப்போம்.
பிறரிடம் நாம் ஆலோசனைகளைக் கேட்கிறபோது முதிர்ந்த மனநிலையில் இருக்கிறோம். எதிரே இருப்பவர்கள் விமர்சனங்களைச் சொல்லச்சொல்ல, நம்மையும் அறியாமல் குழந்தை மனோநிலைக்குத் தாவுகிறோம். உடனே உள்ளுக்குள் எதிர்ப்பு உருவாகிறது.
அதே போலத்தான் மற்றவர்களை விமர்சிக்கிறபோதும் நிகழ்கிறது. முதிர்ந்த மனநிலையில் தொடங்குகிறோம். பெற்றோர் மனநிலைக்கு மாறுகிறோம். அப்போது நம் குரலிலும் வார்த்தைகளிலும் கண்டிப்பு கூடுகிறது. எதிரே இருப்பவர் முதிர்ந்த மனநிலையில் இருந்தாலும் சீண்டிவிட்டு அவரைக் குழந்தை மனநிலைக்குக் கொண்டுபோய் விடுகிறோம்.
மற்றவர்களோடு கலந்துரையாடும் வேளைகளில் நாம் என்ன மனோநிலையில் இருக்கிறோம் என்பதை கவனிப்பதும் முக்கியம். எதிரே இருப்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று யூகிப்பது முக்கியம். வெற்றிகரமான உரையாடல் கலைக்கு இதுவே அடிப்படை ரகசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *