என்ன செய்யலாம் எதிர்ப்புகளை?

-சினேகலதா

எல்லாப் புராணங்களிலும், நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு சொல்லப்படுகிற எல்லாக் கதைகளிலுமே சாமானிய மனிதர்கள், பெரிய அரக்கர்களை வீழ்த்துகிறார்கள்.

இவற்றை ஆழ யோசித்தால் ஒன்று புரியும். அரக்கர்களை, ராட்சச பலம் கொண்டவர்களை, ஒரு நல்ல காரியம் நிகழ வேண்டும் என்கிற நோக்கில் சராசரி மனிதர்கள் எதிர்க்கிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள்.
அதனால்தான், உலக நன்மைக்கான யாகங்கள் செய்யப்படும்போது அரக்கர்கள் இடைஞ்சல் செய்ததாய்க் கதைகள் சொல்கின்றன.

யாகம் என்று கதையில் சொல்லப்படுவதை நாம் நல்ல காரியம் என்ற அர்த்தத்தில் இன்று புரிந்து கொள்ளலாம். அப்படியானால் அரக்கர்கள் இன்று இருக்கிறார்களா? இருக்கிறார்கள். சந்தேகம், குழப்பம், துணிவின்மை, தடுமாற்றம் போன்ற எதிர்ப்புகள் எல்லா நல்ல காரியங்களுக்கும் ஏற்படத்தான் செய்கின்றன. இந்த குணங்களே இன்றைய அரக்கர்கள். உள்ளே இருந்தே உருவாகும் எதிர்ப்புகள், வெளிச்சூழலில் ஏற்படும் எதிர்ப்புகள் என்று, எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இந்த எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்?
முதலாவதாக, எதிர்ப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நம்முடைய இலட்சியம் அதைவிடப் பெரிது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் அடிப்படையாக வைத்து எடை போடக் கூடாது. ஒரு தனிமனிதர்தான் ராணுவத்துக்குத் தளபதியாக இருக்கிறார். யுத்தம் என்று வரும்போது அவர் தனிமனிதரல்ல. தேசத்தின் தளபதி. அந்த நேரத்தில் அவருடைய பலம், பலமடங்கு கூடுகிறது. நாமும் அப்படித்தான். ஒரு மகத்தான இலட்சியத்திற்காகப் போர்புரிகிறபோது, அதன் பலமும் நம்மிடம் சேர்கிறது.அடுத்ததாக, நம்மிடம் உள்ள திறமைகள்.

எல்லோரிடமும், கண்டிப்பாகத் திறமைகள் இருக்கின்றன. எதிர்ப்புகள் ஏற்படும்போது நமக்கே தெரியாமல் நம்முடைய திறமைகள் வெளிப்படுகின்றன. முடிவெடுக்கும் திறமை, சமயோசிதம், பேச்சுத் திறமை, பேரம்பேசும் திறமை என்று பலவிதமான திறமைகள் வெளியாகின்றன.

புராணங்களில், போர்க்காட்சிகளில் விதம் விதமான அஸ்திரங்கள் எய்யப்பட்டதாக சொல்கிறோம். நம்மிடம் அத்தகைய அஸ்திரங்கள் இன்றைக்கும் உண்டு. அவைதான் மேலே குறிப்பிடப்பட்ட திறமைகள்.

ஒரே விதமான தீர்வை மட்டும் யோசித்துக் கொண்டு எதிர்ப்புகளை நாம் எதிர்கொள்ள முடியாது. விதம்விதமான உத்திகள் வேண்டியிருக்கின்றன.பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் என்று விதம்விதமான அஸ்திரங்கள் பயன்படுத்தப் பட்டதன் அர்த்தம் இதுதான்.

பழைய புராணங்களில், எதிர்ப்புகளை எதிர்கொண்ட விதம் பற்றி நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். எல்லோருமே எதிர்ப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை நோக்கித் துணிச்சலாக முன்னேறியிருக்கிறார்கள்.நமக்கு எதிரான விஷயத்தை விட்டு விலகுவதாலேயே எதிர்ப்பை இல்லாமல் செய்ததாகச் சொல்ல முடியாது. அது தப்பித்தல் மனோபாவம். பாதகங்களை மோதி மிதிப்பது தான் போர்க்குணம்.
இவற்றையெல்லாம் விட இன்னொன்றும் முக்கியம். சில ஜமீன்தார்களின் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். காட்டு மிருகங்களைக் கொன்று, அதன் மீது ஒரு காலை வைத்து, துப்பாக்கியையும் ஊன்றிக் கொண்டு கம்பீரமாக புகைப்படங்களில் நின்று கொண்டிருப்பார்கள்.

எதிர்ப்புகளை வீழ்த்துவது மட்டும் போதாது. அவை இனிமேல் எழாது என்ற அளவிற்கு எதிர்ப்பின் வீழ்ச்சியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.அசுரத்தனமான எதிர்ப்புகள் எல்லோருக்குமே வரும். அவற்றை எதிர்கொண்டு வீழ்த்துவது எல்லோருக்குமே சாத்தியம்.

ஏனென்றால், எதிர்ப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீங்கள் தனிமனிதராய் அதை எதிர்த்து போராடவில்லை, பின்புலமாகவும் பக்க பலமாகவும் உங்கள் இலட்சியம் இருக்கிறது. அப்படியானால் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவேண்டியதே இல்லை. அப்படித்தானே!

zp8497586rq