-பாணபத்திரன்
நமது நம்பிக்கை மாத இதழின் முதலாம் ஆண்டு விழா கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் 8-5-2005 அன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் 5 மணியிலிருந்தே அரங்கில் குவியத் தொடங்கினர்.
மிகச் சரியாக 6 மணிக்கு விருந்தினர்கள் மேடையேறினர். விழாவின் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய இதழின் நிர்வாக ஆசிரியர் திரு. கி. வேணுகோபால் தனது உரையில், “கடந்த ஓராண்டு நமது நம்பிக்கைக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது. பொதுவாக மாநிலத் தலைநகரங்களில் இருந்து வெளியாகிற பத்திரிகைகள்தான் வெற்றி பெரும் என்கிற சூழலில், ஒரு பத்திரிகை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் கழித்து பெறும் வெற்றியை, இந்த ஒரே ஆண்டில் நமது நம்பிக்கை இதழ் பெற்றிருக்கிறது.இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த வாசகர்கள், படைப்பாளர்கள், வடிவமைப்பாளர், ஓவியர், முகவர்கள், தொடர்ந்து விளம்பரம் கொடுத்துவரும் விளம்பரதாரர்கள் என அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
வரவேற்புரையைத் தொடர்ந்து நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள், நமது நம்பிக்கை இதழுக்காகவும் வேறு இதழ்களுக்காகவும், பல்வேறு சாதனையாளர்களைச் சந்தித்து கண்ட நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பாகிய ‘சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்” நூல் வெளியீடு நடந்தது.நாவுக்கரசர் டாக்டர் சோ. சத்தியசீலன் அவர்கள் நூலினை வெளியிட இயகோகா நிறுவனத்தின் பங்குதாரர் திரு. அம்மாசைக்குட்டி அவர்கள் முதல் படியினைப் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் மு. ஜீவானந்தம் அவர்கள் தனது தலைமையுரையில், “தமிழில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வலம் வருகின்றன. பெரிய பெரிய விளம்பரங்கள் கொடுத்தும், ஏதாவது இலவசம் கொடுத்தால்தான் பத்திரிகை விற்கும் என்கிற சூழ்நிலையில், இதழினைத் தொடங்கி ஒரே ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை இந்த இதழ் பெற்றிருக்கிறது.
தமிழகத்தின் தலைசிறந்த இதழாக நமது நம்பிக்கை வர வாழ்த்துகிறேன் என்றார்.தொடர்ந்து நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மரபின் மைந்தன் ம. முத்தையா அவர்கள் வந்திருந்த வாசகர்களோடு தன் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.அவர் தனது உரையில், இதழினைத் தொடங்கியதில் இருந்து, வளர்ந்து வருகிற வாசகர்களின் ஆதரவினைப் பார்த்து இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற செம்மை உணர்வினைக் கொடுத்திருக்கிறது.மரியாதைக்குரிய டாக்டர் ம.ரா.போ. குருசாமி அய்யா அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர் தனது 80வது வயது நிறைவையொட்டி வெளியிட்ட புத்தகங்களில் ஒரு புத்தகத்தை என்னைப் படிக்க வைத்த என் மாணவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
நாங்கள் பத்திரிகை ஆசிரியராக இருந்தாலும் எங்களை அதற்காக உழைக்க வைக்கிறவர்கள், படிக்க வைக்கிறவர்கள், சிந்திக்க வைக்கிறவர்கள் வாசகர்கள்தான்.இரண்டு நாட்களுக்கு முன்பு காலை 9.45 மணிக்கு நமது நம்பிக்கை இதழ் அலுவலகத்திற்கு ஓர் இளைஞர் வந்தார். இதுதானே நமது நம்பிக்கை அலுவலகம்” என்று கேட்டுக்கொண்டே வந்தார். அந்த வயதிற்கே உரிய சங்கோஜம், கூச்ச சுபாவம் அவரிடம் இருந்தது.வந்தவர் “2004ல் வந்த நமது நம்பிக்கை” மொத்த தொகுப்பு கிடைக்குமா? என்று கேட்டார். கொடுத்தோம். ஜனவரி முதல் மார்ச் மாத இதழ் வரை எனக்கு வேண்டும் என்று கேட்டார். பிறகு சொன்னார், ஏப்ரல்,மே இதழ்களை நான் வைத்திருக்கிறேன். இதற்கு முன்பாக வந்த அத்தனை இதழ்களையும் படிக்க வேண்டும் என்றார்.
ஒரு இதழ் ஒரு வாசகனுக்கு பயன்பட்டதோடு இதற்கு முந்தைய இதழ்களையும் படித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளோம். இதுதான் இதழின் வெற்றி.
இப்படி ஒரு இதழுக்கு சமூக நலனில் அக்கறைகொண்ட நிறுவனங்கள் தொடந்து விளம்பரங்கள் கொடுத்து ஆதரிக்கின்றன. அது எங்களுக்கு உந்துதலைத் தருகின்றது. அந்த நிறுவனங்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருப்பது இன்று வெளியிடப்பட்ட சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் என்ற நூல்.தான் எந்தத் தொழிலைச் செய்தாலும் அதை பெருமிதத்தோடு எவன் செய்கிறானோ அவன் வாழ்க்கையில் ஜெயிக்கிறான், வெற்றி பெறுகிறான், பல படிகள் கடந்துகொண்டே வருகிறான்.
எல்லா தனிமனிதர்களுக்குள்ளும் நம்பிக்கை இருக்கிறது. எல்லா தனிமனிதர்களுக்குள்ளும் சாதிக்கிற சக்தி இருக்கிறது. எல்லா மனிதனுக்குள்ளேயும் வெற்றி பெறுகிற மனோபாவம் இருக்கிறது. ஆனால், இவற்றை யார் சரியாக அணுகுகிறார்கள், சரியாகத் தூண்டி விடுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் வெற்றி வருகிறது.
தரம் மிக்க தனிமனிதர்களை உருவாக்குதல் என்பதைத்தான் ‘நமது நம்பிக்கை’ மாத இதழ் ஒரு வேள்வியாகவும் நோக்கமாகவும் எடுத்துக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய நகைச்சுவைத் தென்றல் டாக்டர். கு. ஞானசம்பந்தன் அவர்கள் தனது வாழ்த்துரையில் “பொதுவாக பத்திரிகைகளுக்கு சோதனையான காலம் இது. படிக்கும் பழக்கம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழில் ஆயிரக்கணக்கில் பத்திரிகைகள் வெளிவருகின்றன. ஆனால், நமது நம்பிக்கை போன்ற பத்திரிகைகள் வெகுசிலவே வெளிவருகின்றன.மேடையில் பேசுவதற்கு முன் ‘நமது நம்பிக்கை’ ‘ரசனை’ இரண்டையும் பார்த்துவிட்டுப் போனால் ஒரு கூட்டத்தை சமாளிக்கலாம். அவ்வளவு செய்திகள் உள்ளன இந்த புத்தகங்களில்.
நம்பிக்கை தருகிற, உத்வேகமூட்டும் செய்திகளைத் தருகிற நமது நம்பிக்கை இதழினை வாழ்த்துகிறேன். இந்த விழாவில் விருந்தினராக கலந்து கொள்கிறேன் என்பதைவிட இதன் வாசகன் என்ற முறையில் பங்கேற்கிறேன் என்பதே உண்மை” என்று குறிப்பிட்டார்.
அவரது அனாயசமான நகைச்சுவையில் அரங்கம் அடிக்கடி அதிர்ந்தது. அதன்பிறகு தமிழகத்தின் மூத்த அறிஞரும் உலகம் நன்கறிந்த பேச்சாளருமான டாக்டர் சோ.சத்தியசீலன் சிறப்புரையற்றினார்.’நமது நம்பிக்கை’ இதழைப் படிக்கிறபோதே நம்முள் இருக்கிற தடுமாற்றங்கள் அகலும். இனிமேலும் நாம் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை நம் உள்ளத்தில் வேரூன்றும். 20களில் இருக்கிற இளைஞர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்ற 70களில் இருக்கிறவர்களும் இந்த இதழைப் படிக்கும்போது இன்னும் வளர வேண்டும் என்கிற ஆசை உண்டாகிறது.
தூண்டுதல் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. ஒரு கவிஞன் எழுதினான், வாழ்க்கைப் பிரச்சினைகள் எப்போதும் நெருஞ்சி முற்கள் போலத்தான் இருக்கும். நீ நெருக்கி நடந்தால் அது நொறுங்கிப் போகும். தயங்கிக் கொண்டே காலை வைத்தால் அது நறுக்கென்று குத்தும் என்று. அப்படி நெருஞ்சி முற்களை போன்ற பிரச்சனைகளை நொறுக்கித் தள்ளும் ஆற்றல் பெற வழிகாட்டும் இதழ்தான் நமது நம்பிக்கை.
டாக்டர் மு.வ. அவர்கள் எழுதினார், காட்டில் வாழ்வது ரொம்ப சுலபம், நாட்டில் வாழ்வதுதான் ரொம்ப கஷ்டம் என்று. எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. நாட்டில் தானே எல்லா வசதிகளும் இருக்கும். காட்டில் என்ன வழி இருக்கு அங்கு வாழ்வது சுலபம்’ என்று எழுதியிருக்கிறாரே என்று சிந்தித்தேன்.அதற்கு அவர் விளக்கம் எழுதுகிறார். காட்டிலே ஒரு புலி வந்தால் இது புலி என்று தெரியும். ஒரு நரி வந்தால் பார்த்த உடனே தெரியும் இது நரி என்று, ஒரு கரடி வந்தால் அதன் தோற்றத்தைப் பார்த்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வோம். ஆனால், நாட்டுக்குள் வந்தால் எது புலி, எது நரி, எது கரடி என்று எதுவுமே தெரியாது. ஏனென்றால் எல்லாவற்றிற்கும் ஒரே வடிவம் மனித வடிவம்.
இதையே பாரதி மிக அழகாக சொல்லுவார், உற்றுப்பார்த்தால் நமக்குள்ளே எத்தனை மிருகங்கள், எப்போதும் எதையோ இழந்தது போல் மூஞ்சியை தொங்கப் போட்டு கொண்டிருப்பவன் தேவாங்கு. அடுத்தவனை தன்னுடைய அறிவினால் ஏமாற்றிப் பிழைப்பவன் நரி. மறைந்திருந்து அடுத்தவனுக்கு தீங்கு செய்பவன் பாம்பு. அடுத்தவன் எப்போது ஏமாறுவான் அவன் சொத்தை கவரலாம் என நினைப்பவன் கழுகு. மேனா மினுக்கித் தனமாக வாழ்பவன் வான்கோழி. எது நடந்தாலும் அது தலைவிதி என்று போராடாமல் இருப்பவன் கழுதை என்று சொல்லிவிட்டு எவன் மனிதன் எனச் சுட்டிக் காட்டுகிறார்.எவன் ஒருவன் சத்தியத்தையே பேசி தர்மத்தின் வழி நடந்து இறைஉண்மையை நாடுகிறானோ அவன் மட்டுமே மனிதன். மற்றவர்களெல்லாம் விலங்குகள்.
ஒரு புதுக் கவிஞன் எழுதினான். உலகத் தமிழனை மதம் பிரிக்கிறது. தமிழகத் தமிழனை ஜாதி பிரிக்கிறது. எல்லாத் தமிழர்களையும் சுயநலம் பிரிக்கிறது என்று.யார் பாடுபட்டு இவற்றைப் போக்குவது. ஏதோ ஒரு மனிதன் அறிவிற் சிறந்தவனாய் உருவாகிறபோது, இவற்றை வெல்லும் ஆற்றல் அவனுக்குக் கிடைக்கிறது.
காந்தியடிகள் பற்றி நாமறிவோம். காந்தியடிகளிடம் மேகம் நான் கருணையை பெற்றுக் கொண்டேன் என்று சொல்லியதாம். காந்தியடிகளிடமிருந்து நான் உறுதியைப் பெற்றுக் கொண்டேன் என்றது இமயம். அவரிடமிருந்து நான் உழைப்பைக் கற்றுக்கொண்டேன் என்றது காற்று. அவரிடமிருந்து வெற்றியை பெற்றுக் கொண்டேன் என்றது சத்தியம். காந்தியடிகளிடமிருந்து இவற்றை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என இவைகள் சொன்னால் இருள் சூழ்ந்து இந்த நாட்டில் அவர் எவ்வாறு வெளிச்சத்தை பரப்பியிருப்பார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.ஒரு தனிமனிதன் தனது உள்ளத் தூய்மையினால், பொதுநலம் காக்க வேண்டும் என்ற புண்ணியமான சிந்தனையினால், தன்னுடைய உழைப்பினால், தன்னுடைய தியாகத்தால் இந்த உலகம் வளமை பெறச் செய்ய முடியும். இந்த தனிமனிதனை, உலகிற்கு கொண்டு வந்து அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அதைச் செய்வது யார்?
காந்தியடிகளை நான் பார்த்ததில்லை. நேருவை நான் சந்தித்தில்லை. திருவள்ளுவன் எனக்கு அப்பால் இருக்கிறவன். இவர்கள் அத்துணை பேரையும் நான் எப்படித் தெரிந்து கொள்வது. அவர்களோடு எனக்கு எப்படி அறிமுகம் கிடைக்கும்? எனக்கு பாலகுமாரனை பக்கத்தில் போய் பார்க்க முடியுமா? பாண்டியராஜனோடு நெருங்கிப் பழக முடியும்? ஜீவானந்தம் அவர்களோடு எனக்கு அறிமுகம் கிடைக்குமா. அவர்களின் வாழ்க்கையின் ரகசியங்களை நான் எப்படி புரிந்துகொள்ள முடியும்.அத்தனை பேரையும் கொண்டுவந்து நிறுத்தி அவர்களை உங்களோடு அறிமுகம் செய்து வைக்கிறேன். இவர்களோடு நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்கிறார். எதன் வழியாக ஒரு நூல் வழியாக. அந்த நூல்தான் சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் என்னும் அரிய நூல்.
சாதனையாளர்கன் வெற்றி ரகசியங்கள் ஒரு நூல் அல்ல. அது 17 நூல்களின் தொகுப்பு என்று கூடச் சொல்லலாம். 17 சாதனையாளர்களின் சிந்தனைகளைத் தொகுத்து நேர்காணல்களாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு “ஒவ்வொரு மனிதனும் ஒரு நூல், உனக்குப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்”. அப்படி சாதனை மனிதர்களைப் படிக்க ஒரு மகத்தான வாய்ப்பு இந்தப் புத்தகம் என்றார் டாக்டர் சத்தியசீலன்.கோவை சாந்தி ஆசிரமத்தின் மாணவ அமைப்பான பசுமைப் படையின் உறுப்பினர், பள்ளி மாணவி செல்வி திவ்யா விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இது ஆண்டு விழா அல்ல. தமிழகமெங்கும் பரந்து விரிந்திருக்கும் நமது நம்பிக்கை என்கிற குடும்பத்தின் குதூகல விழா!
-விழா அரங்கிலிருந்து பாணபத்திரன்
Leave a Reply