“ரிஸ்க்” எடுப்பவரா நீங்கள்?

ஜீவிதா

“வயசுப்பெண்கள் இருக்கும் வீட்டில்
திண்ணை வீடு ரிஸ்க்!
வீரப்பன் காட்டுப் பக்கம்
பண்ணை வீடு ரிஸ்க்!”

என்று கவிஞர் வைரமுத்து சில வருடங்களுக்குமுன் ஒரு படத்திற்கு எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு விதம், “ரிஸ்க்” எடுத்துதான் பார்ப்போமே” என்று இறங்குபவர்கள், “எதுக்குங்க ரிஸ்க்” என்று பதுங்குபவர்கள். இந்த இரண்டு வகையான மனப்பான்மையும் எல்லோரிடமுமே எடுக்க வேண்டிய ‘ரிஸ்க்’கிற்கேற்ப மாறி மாறி வரும்.

ஆனால், எந்த ரிஸ்க் எடுக்கக்கூடியது, எது எடுக்க வேண்டாதது என்று இரண்டு வகையாகப் பிரித்து விடமுடியாது. ஏனெனில், இந்த இரண்டு வகைகளில் மட்டும் அவை அடங்குவதில்லை.

நீங்கள் ‘சட்’டென்று நிராகரித்துவிடக் கூடிய ‘ரிஸ்க்’ ஒன்று உண்டு. அதற்கு நிஜமான பெயர் “வேண்டாத வேலை”. உங்களுக்கு சம்பந்தமில்லாத துறையில், பணத்துக்கோ பெயருக்கோ உத்திரவாதமில்லாத நிலையில், உருவாகிற எந்த வேலையையும் “வேண்டாத வேலை” என்று நிராகரித்து விடலாம். முயற்சி செய்து பார்த்து பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்ய வேண்டாம்.

இன்னொரு வகை ரிஸ்க், இதற்குத் தம்பி மாதிரி. அதற்குப் பெயர் “அவசரமாய் முடிவெடுப்பது” “சிந்தித்துச் செய்யாத எந்த வேலையும் தோல்வியில்தான் முடியும்” என்பார் பீட்டர் டிரக்கர். உண்மைதான்! “வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன் பேர்வழி” என்று, முழு விபரங்களையும் கேட்காமல் அவசரக் கோலத்தில் காலைவிட்டு, பிறகு கையைச் சுட்டுக் கொள்வது தவறு. இந்த வகை ரிஸ்க்கும் வேண்டாத வேலைதான்.
ஆனால், வாழ்க்கையில் ஒரு சில ‘ரிஸ்க்’ அவசியம் எடுக்க வேண்டிய பட்டியலில் இருக்கும். உங்களுக்கு நன்கு பரிச்சயமான துறையிலேயே ஒரு புதிய வாய்ப்பு, புதிய அறிமுகம் போன்றவற்றுக்கு நேரத்தையும் பணத்தையும் தொடர்ந்து செலவிடலாம். இவற்றில் தோல்விக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இழப்பு ஏற்பட்டாலும் குறைவாகத்தான் ஏற்படும். “புத்தி கொள்முதல்” என்று அதையும் வரவு வைத்துவிட வேண்டியதுதான்.

அதேபோல, எடுக்கவே கூடாத ரிஸ்க் என்றும் ஒன்று உண்டு. உங்களை விடப் பலமடங்கு பெரிய அளவில் அதன் சக்தி இருக்குமென்றால், “அய்யோ! நம்மால் ஆகாதுங்க!” என்று நாசூக்காக விலகிக் கொள்வதில் தவறில்லை. பாண்டவர்கள் அனைத்தையும் வைத்து சூதாடியது மாதிரியான ‘மெகா’ அளவு ரிஸ்க் எடுத்தால் வனவாசம் போக வேண்டியதுதான். உங்கள் சொத்துக்கள், முதலீடுகள் எல்லாவற்றையும் காவு கேட்கும். இத்தகைய பேராசை வலைகள் அடிக்கடி விரிக்கப்படும். “இருப்பதையும் விட்டுவிடக் கூடாது” என்ற எச்சரிக்கை உணர்வுடன், அந்தப் பக்கமே போகாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

இவையெல்லாம் இருக்கட்டும். உங்கள் தொழிலில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களை மட்டுமே சார்ந்து உங்கள் மொத்த செயல்பாடுமே இருக்கும் என்றால், அதுதான் நீங்கள் எடுக்கிற மிகப்பெரிய ரிஸ்க்.

முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு தனி கவனத்துடன் தரமான சேவையைத் தருவது என்பது வேறு. அவர்களை நம்பியே ஒரு நிறுவனத்தை நடத்துவதென்பது வேறு. உயிருக்குயிராகப் பழகிவரும் தாம்பத்ய வாழ்க்கையிலேயே விரிசல் ஏற்படும்போது, வணிகத்தில் மாற்றுக் கருத்துக்கள் இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது ஏற்படக் கூடும்.

“ஆனாக்கா இந்த மடம், ஆகாட்டி சந்தைமடம்” என்கிற மனப்பான்மை, தொழிலில் எப்போதுமே பாதுகாப்பான விஷயம்தான்.

ஒரு விஷயம் ரிஸ்க்கா இல்லையா என்று முடிவெடுக்கும்போது கனவுகளில் மட்டுமே கணக்குப் போடக்கூடாது. யதார்த்தமான விஷயங்களில் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்க வேண்டும். “இவ்வளவு வரும், அவ்வளவு வரும்” என்ற கணக்கெல்லாம் சரிதான்.
இழப்புகள் எவ்வளவு நேரும், நேர்ந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதை எல்லாரும் சேர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.

ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது நியாயமான அளவு அச்சமும் சந்தேகமும் நியாயம் தான் என்கிறார்கள் நிர்வாகவியல் நிபுணர்கள். “அஞ்சாவது அஞ்சாமை பேதைமை” என்கிறார் திருவள்ளுவர்.

அச்சப்பட வேண்டிய விஷயங்களில் அளவுக்கதிகமான துணிச்சலுக்கு “அசட்டுத் துணிச்சல்” என்று பெயர்.

எனவே, ரிஸ்க் எடுப்பது நல்லதுதான். அதன் ஆழம், அகலம், உயரம் அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு தடவை தீர யோசித்து முடிவெடுங்கள். “ரிஸ்க்” ரசிக்கத்தக்க வாய்ப்புகளாக மாறி வெற்றி வாசலைத் திறந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *