மோதல்களை முடித்து வையுங்கள்

பிரதாப்

தொழில் வாழ்க்கை என்று வந்தாலே அன்றாட வேலைகளில் கருத்து மோதல்கள் பிறப்பது இயற்கைதான். அந்த மோதல்களை ‘சட்’டென்று சமரசம் நோக்கி நகர்த்துவதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.

பலரும், கருத்து மோதல்களைத் தனிப்பட்ட பகையாக வளர்த்துக்கொண்டு வாழ்க்கை முழுக்க சிரமப்படுகிறார்கள். இது தவறான அணுகுமுறை. நிறுவனத்துக்கு உள்ளேயோ வெளியிலோ ஏற்படும் மோதல்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து வைப்பதுதான் புத்திசாலித்தனமான நிர்வாக உத்தி.

மற்றொரு கோணத்தில் பாருங்கள்:

பொதுவாகவே ஒரு சிக்கலுக்கு இரண்டு கோணங்கள்தான் இருக்கமுடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று, நம்முடைய கோணம். இன்னொன்று எதிராளியின் கோணம், இரண்டையும் தாண்டி, நடுநிலையான கோணம் ஒன்று இருக்கிறது. நம் கோணத்தில் எதிராளியின் தவறுகள் பெரிதாகத் தெரியும். எதிராளியின் கோணத்தில் நம் தவறுகள் பெரிதாகத் தெரியும். நடுநிலையான கோணத்தில் இருதரப்புகளின் தவறுகளையும் இயல்பாக எடுத்துக் கொண்டு பொதுவான நன்மை எதுவோ அது கண்ணில்படும். எனவே, ஒரு சிக்கல் என்று வரும்போது முதலில் நம்முடைய தவறுகளை நாமே பட்டியல் போட்டால் சமரசம் நோக்கிச் சீக்கிரம் நகர முடியும்.

தீர்வுகளை உருவாக்குங்கள்:

பலபேர் கருத்து மோதல்களை வளர்த்துக் கொண்டே போவதற்குக் காரணம் அடுத்து எந்தத் திசை நோக்கி நகர்வது என்று தெரியாததுதான். உங்களிடம் கருத்து வேறுபாடு கொண்டு திகழ்பவரிடம், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையை நீங்களாக முன்மொழியலாம். இது “இறங்கி வருவது” அல்ல. விரிசலடைந்த ஓர் உறவைப் புதுப்பித்துக்கொண்டு அதன் மூலம் நிரந்தரமான ஆதாயத்திற்கு வழி காண்பது.

உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:

ஒரு கருத்து மோதலில் முதலில் காயப்படுவது இரண்டு தரப்பினர்களின் உணர்வுகள்தான். சம்பிரதாய ரீதியில் பேசி சரி செய்து கொள்வதற்குத் தடையாக இருப்பதெல்லாமே காயம்பட்ட உணர்வுகள்தான். எனவே உணர்வுபூர்வமாய் நீங்கள் ஏற்படுத்திய சேதத்திற்கு வருத்தம் தெரிவியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட சேதத்தையும் வெளிப்படுத்துங்கள்.

நேரமெடுத்துக் கொள்ளுங்கள்:

சமரசப் பேச்சை சரியான நேரத்தில் தொடங்குவதுதான் முக்கியம். உரிய காலம் கனியும் வரையில் அதனைத் தாமதப்படுத்துங்கள். அதுவரை உங்கள் குமுறல்களையோ வருத்தங்களையோ பகிரங்கமாகப் பேசாதீர்கள். சம்பந்தமில்லாதவர் களிடம் அவற்றைச் சொல்லும்போது அவர்களுக்கு அது வெறும் பொழுதுபோக்காக இருக்குமே தவிர பயன் கொடுக்காது.

ஆறஅமர யோசியுங்கள்:

கலந்துபேசி கைகுலுக்குவதோடு மட்டும் கருத்து மோதல் முடிவுக்கு வருவதில்லை. அந்த மோதல் ஏன் வந்தது? யோசியுங்கள். அந்தச் சூழலில் நீங்கள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள்? யோசியுங்கள். இந்த விரிசல் நீடிக்கவிட்டால் என்ன நடந்திருக்கும்? யோசியுங்கள். இதுபோன்ற சூழ்நிலைகள் இனிமேல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி? யோசியுங்கள்.

மாற்றங்களை அனுமதியுங்கள்:

எந்த ஒரு சம்பவமுமே, கடந்து போகிற மேகம் போல நகர்ந்து போகும். ஆனால், அந்த சம்பவத்தின் விளைவாக நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள், நம் வாழ்க்கைக்குள் வரவேண்டும். நம் ஆழ்மனதில் அதன் தாக்கம் பதிவாகி, எதிர்கால நடவடிக்கைகளில் எதிரொலிக்க வேண்டும்.கருத்து மோதல் ஏற்பட்டு, சமரசம் உருவான பிறகு, முன்பை விடவும் நன்றாக, எதிர்த்தரப்பு மனிதரை நீங்களும், உங்களை அவரும் புரிந்து கொள்ள முடிந்தால், இந்தக் கருத்து மோதலை இருதரப்புக்கும் சாதகமான முறையில் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *