மகிழ்ச்சியே மனித இயல்பு

– ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இன்றைய வாழ்வின் பரபரப்பான நிமிடங்களே மனிதனை ஆன்மீகம் நோக்கி ஆற்றுப்படுத்துகின்றன. விஞ்ஞான யுகத்தின் விரைவான பயணத்தில் மெய்ஞ்ஞானம் தனக்கேயுரிய ஈர்ப்போடு திகழ்கிறது. இது குருமார்களின் யுகம்.

அத்தகைய குருமார்களில் ஒருவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். சமர்ப்பண் யுகத்தின் சக்தி மையம். வாழும் கலை பயிற்சிகள் வழியே பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சியை உருவாக்கி வருபவர்.1956 மே-13 ல் பாபாநாசத்தில் இவர் பிறந்தார். சங்கர ஜெயந்தியன்று பிறந்ததால் இவருக்கு ரவிசங்கர் என்று பெயர் சூட்டப்பட்டது.நான்கு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே பகவத் கீதை முழுவதையும் இவரால் சொல்ல முடிந்ததாம். மகரிஷி மகேஷ் யோகியிடம் நீண்ட காலம் சீடராகத் திகழ்ந்தார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

தன் பாட்டியின் மேல் மிகுந்த பிரியம் கொண்டிருந்த இவர், பாட்டி இறந்துவிடக் கூடாது என்கிற கவலையில் அவர் மூச்சை உற்று கவனிப்பாராம். மூச்சுக்கும் வாழ்க்கைக்குமான பாலம், அவருக்கு பாலபருவத்தில் விளங்கியதற்கு இதுவும் காரணமாய் இருக்கலாம்.
இன்று உலகின் பல பகுதிகளிலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘சுதர்சனக்ரியா’ பயிற்சி புகழ்பெற்று விளங்குகிறது. 130-க்கும் அதிகமான நாடுகளில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. உடல்நலம், மனநலம், ஆன்மநலம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் வாழும் கலை பயிற்சி பரவலான வரவேற்பைப் பெறுகிறது.
சமூக மேம்பாட்டுக்காக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வகுத்த ஐந்து அம்சத்திட்டம், இல்லங்கள் – உடல் நலம் – சுகாதாரம் – நல்லிணக்கம் – மனித விழுமங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.சிறைவாசிகள் நலனுக்கான பயிற்சித் திட்டம், பல சிறைச்சாலைகளில் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆனந்தமான மனநிலையும், எதையும் விளையாட்டாகச் செய்யும் அணுகுமுறையும் அவரது பக்தர்களை, “வாழ்வின் மையமே ஆனந்தம் என்பதை உணரச் செய்கின்றன. இவரது எளிவந்த தன்மை, இயக்கத்தின் நீரோட்டப் பாய்ச்சலுக்குப் பெரிதும் துணை செய்கிறது.ஓர் இயக்கம் என்பது, புகைப்படத்திற்குப் போடுகிற சட்டம் மாதிரி. அது புகைப்படத்தையே விழுங்கிவிடக்கூடாது” என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.இந்த இயல்பான அணுகுமுறையில், ஞானமடைதல் எல்லோருக்கும் சாத்தியம் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
ஒரு மனிதன் எளிமையாக, இயல்பாக, குழந்தைத்தனமாக இருந்தால் அதுவே ஞானம். ஞானம், மனிதனின் இயல்பு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அந்தக் குணம் விதையாக வாழ்கிறது என்கிறார் அவர்.

வாழ்வில் அனைத்திற்குமே இயல்பான தாளகதி ஒன்று உண்டு. உடல், உணர்வு, சுவாசம் எல்லாமே ஒரு தாளகதியில் இயங்குகிறது. சுதர்சனக்ரியா என்னும் மூச்சுப் பயிற்சி மூலம் உயிரின் இயல்பான தாளகதியுடன் உங்களுக்கு முழு ஒத்திசைவு ஏற்படுகிறது. இதனால் உங்களுக்குள் நெடுங்காலமாய் நிலைத்திருக்கும் எதிர்மறை அதிர்வுகளிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு வருகிறீர்கள். உடலின் அணு ஒவ்வொன்றிலும் உயிர்சக்தி பிரவாகமெடுக்கிறது என்பது அவர் தரும் விளக்கத்தின் சாரம்.

மூளையின் மொழி, வார்த்தைகள். மனத்தின் மொழி, அன்பு. ஆன்மாவின் மொழி – மௌனம் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.சில பயிற்சிகள் வழியே ஆன்மீகத்தை வாழ்க்கை அனுபவமாக வழங்க, பல குருமார்கள் பல உத்திகளை உபதேசித்து வருகிறார்கள். அந்த வரிசையில் வாழும் கலை பயிற்சியும் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்தப் பயிற்சியின் மூலம், பல தீவிரவாதிகள் திருத்தியுள்ளார்கள். சிறைவாசிகள் சீரடைந்துள்ளார்கள். நிர்வாகவியல் நிபுணர்கள் நலமடைந்துள்ளார்கள்.அதே நேரம், சமாதானப் புறாக்களைப் பறக்கவிடும் சமரச நோக்கிலும் சமர்ப்பண் செயல்படுகிறது. பகைமை பாராட்டும் நாடுகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் போன்றவற்றில் சமர்ப்பண் வகுப்புகள் நடைபெறுவது சுவாரசியமான விஷயம்.

வெள்ளாடை, தோளில் புரளும் தலைமுடை, ஆனந்தம் பொங்கும் முகத்தில் அலைமோதும் சிரிப்பு என்று பக்தர்கள் மத்தியில் இயல்பாக வளையவரும் குருவாகத் திகழ்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

அவரது நீண்ட தலைமுடிக்கும் தாடி மீசைக்கும் நாவிதர் தேவையா என்று யாரோ விளையாட்டாகக் கேட்டபோது அவர் சொன்ன பதில்.எனக்கு நாவிதர் தேவையில்லை. என் தலைமுடியில் சிக்கல் விழவில்லை. என் எண்ணங்கள் போலவே சீராக உள்ளன. ஏனெனில் ஞானத்தின் சீப்பு என் வசம் உள்ளது.

அவர் தரும் பதில்களில் இத்தகைய விளையாட்டான விளக்கங்கள் காணப்படுகின்றன.அவர் பெயரில் ஏன் ஸ்ரீஸ்ரீ என்று இரண்டு முறை வருகிறதென்று கேட்டபோது சொன்னாராம், நூற்றியெட்டு முறைவந்தால் மிகவும் நீளமாக இருக்குமில்லையா! அதனால் தான்!

சுவாமி! எப்படிப் பொறுமையாக இருப்பது? இந்தக் கேள்விக்கு அவர் தந்த பதில், பொறுங்கள்! அடுத்த ஆண்டு சொல்கிறேன்.ஆயுர்வேத சிகிச்சையின் மறுமலர்ச்சிக்காகவும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் செயல்பட்டு வருகிறார். ஆயுர்வேத சிகிச்சைகளும் வாழும் கலை அறக்கட்டளையினரால் வழங்கப்படுகின்றன.

உணவும் இசையும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏற்கப்படுவது போலவே பல்வேறு கலாச்சாரங்களும் வாழ்க்கை முறைகளும் ஏற்கப்பட்டால் தீவிரவாதத்திற்கு வேலையிராது. குறுகிய பார்வையை அகற்றுவதே அன்பின் பாதையை அறியும் வழி என்கிறார் ஸ்ரீஸ்ரீ.

வாழ்க்கை புனிதமானது. அதைக் கொண்டாடுங்கள். மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுங்கள். இருப்பதைப் பகிர்ந்து கொடுங்கள். உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள். உலகமே உங்களுடையதாகும் என்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் வரும் தொண்டர்களை அரவணைக்கும் சமர்ப்பண், சர்வதேச அமைதி இயக்கமாய் ஆன்மீக இயக்கமாய் வளர்கிறது.மனிதனின் இயல்பே மகிழ்ச்சிதான் என்பதை அனுபவப்பாடமாய் அளிப்பதே ஆன்மீகம். வாழும் கலை, அந்த வழியில் செல்கிறது… ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற புனிதரின் வழிகாட்டுதலில்!!

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *