சோப் போடலாம் வாங்க!….

– சினேகலதா

விசுவரூபம் எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! ஈமெயில் வந்தாச்சு! குளோனிங் கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம புதுசு புதுசா எத்தனை கண்டுபிடிச்சிருக்கோம்!

உண்மைதான். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாமே கற்கால மனிதன் கொடுத்த கொடை என்பதை மறந்துவிடக் கூடாது.ஆதிமனிதன் பிறந்தபோது மூளியாயிருந்தது பிரபஞ்சம். கீழே கிடந்த இரண்டு கற்களை என்னவென்று பார்த்தான். அது ஆர்வம். இரண்டையும் உரசினால் ஏதோ கிடைக்கும் என்று தோன்றியது. அது உள்ளுணர்வு. உரசினான், தீப்பிடித்தது. அந்த முதல் வெளிச்சம்தான் அறியாமை இருட்டுக் கெதிராக ஆதிமனிதன் ஏந்திய அறிவாயுதம்.

ஆர்வம், உள்ளுணர்வு இரண்டுமே ஆதிமனிதனின் ஆஸ்திகள். யுகம் யுகமாக அவை மனிதகுலத்தின் மரபணுக்களில் படிந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தின. இன்று, கல்வி வசதிகளும், கருவி வசதிகளும் பெருகியிருக்கிற காலத்தில், அடிப்படை ஆயுதங்களான ஆர்வம் – உள்ளுணர்வு இரண்டையும் நாம் போதிய அளவு தீவிரத்தோடு பயன்படுத்தவில்லை!அந்தத் தீவிரத்தின் அடர்த்தி நமக்குள் அப்படியே இருக்குமானால் நீரழிவு நோயில் தொடங்கி எய்ட்ஸ் வரை எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். ஒரு வகையில் பார்த்தால், எந்த வசதிகளும் இல்லாத சூழலில் முதல் கண்டுபிடிப்பை நிகழ்த்திய கற்கால மனிதன், இந்தப் பொற்கால யுகத்தின் மனிதனைவிடவும் பொறுப்புணர்வோடு வாழ்ந்திருக்கிறான்.

இந்தத் தலைமுறைக்கு, உலகம் புரிந்த அளவு உள்ளுணர்வு புரிந்திருக்கிறதா? யோசியுங்கள். அனைத்தையும் தெரிந்துகொண்டு விட்டோம்” என்கிற அலட்சியமே, பூமியை ஒவ்வொரு விடியலிலும் புதிதாகப் பார்க்கும் ஆர்வத்தைக் கொன்று போட்டது. அதேபோல, மனப்பாடத்திற்காகவே தயாரிக்கப்படும் பாடங்களின் வரையறுக்கப்பட்ட கூண்டுக்குள், உள்ளுணர்வின் குரலைக் கேட்கிற விழிப்புணர்வோ பயிற்சியோ வழங்கப்படவே இல்லை.

ஒரு சின்ன விஷயம். நாம் பயன்படுத்துகிற சோப், இன்று எத்தனையோ நவீன அம்சங்களை உள்வாங்கியிருக்கிறது. குளியல் சோப், சலவை சோப் என்று பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிலும் எத்தனையோ ரகங்கள். இவற்றின் ஆரம்பம், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சின்னச் சம்பவம்.ரோமாபுரியில் சாப்போ என்ற மலையில்தான் விலங்குகளை பலி கொடுப்பதும், இறந்த விலங்குகளை எரிப்பதும் நடந்து வந்தது. அந்த மலையின்அடிவாரத்தில், மலையிலிருந்து பெருகிவந்த தண்ணீரில் பெண்கள் துணிகளை அலசிவந்தார்கள்.

ஒரு மழைக் காலத்தில், சாப்போ மலையில், விலங்குகளை எரித்த சாம்பல், மண்ணோடு கலந்து தண்ணீருடன் வந்தது. அந்தத் தண்ணீரில் துணிகளை அலசும்போது அழுக்குகள் அகன்று 'பளீர்' வெண்மை கிடைப்பதைப் பெண்கள் பார்த்தார்கள். மிருகக் கொழுப்பு, அழுக்கை அகற்றப் பயன்படும் என்கிற அறிவை அந்தச் சம்பவம் கொடுத்தது. சாப்போ மலையின் நினைவாக சோப் என்ற பெயர் கிடைத்தது.

ரோமாபுரியில், குளியல் என்பது ஒரு சமூக நிகழ்வாக இருந்தது. “வீட்டுக்கு சாப்பிட வாங்க” என்று அழைப்பது மாதிரி வீட்டுக்கு குளிக்க வாங்க என்று அழைப்பு விடுத்து, ரோமாபுரியின் செல்வந்தர்கள் சுற்றமும் நட்பும் சூழ குளியல் விழாக்களை நடந்தி, விருந்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்தப் பழக்கம், கி.மு.312ல் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறது.

துணிகளைத் தூய்மை செய்ய, விலங்குகளின் சிறுநீரும் மனிதர்கள் சிறுநீரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறுநீரில் இருந்த ஆல்கலைன் அமோனியம் கார்பனேட், இந்த சுத்திகரிப்பை செய்திருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், உலகின் நாகரீகமான பழக்கங்கள் நிரம்பிய கண்டம் என்று நாம் கருதுகிற ஐரோப்பா, கி.பி. 476 முதல் கி.பி. 1453 வரை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு அழுக்கு சாம்ராஜ்யமாகவே இருந்திருக்கிறது.இந்தியாவில், நீராடுவதும் தூய்மை செய்வதும் அன்றாட நியமங்களாய் பின்பற்றப்பட்ட காலகட்டத்தில், குளிப்பதன் மூலம் நோய்கள் பரவும் என்கிற மூடநம்பிக்கை ஐரோப்பாவை ஆட்டிப் படைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு ஒருமுறைதான் தயங்கித் தயங்கித் துணிகளைத் துவைத்திருக்கிறார்கள் பாவி மட்டைகள்!

சுகாதாரக் குறைவால் நோய்கள் பெருகியதைப் புரிந்து கொள்ளாமல், தெய்வக் குத்தம் நிகழ்ந்துவிட்டதாக ஐரோப்பியர்கள் ஆலயங்களை நோக்கிப் படையெடுத்திருக் கிறார்கள். இதன் விளைவாக, பதினான்காம் நூற்றாண்டில் பிளேக் நோய் பரவியது. பதிமூன்றாம் லூயி மன்னர், தன் வாழ்வில் இரண்டாவது முறையாகக் குளித்தது ஏழாவது வயதில்!! பதினான்காம் லூயி மன்னருக்கு, குளியல் – ஒரு சிகிச்சையாகத்தான் வழங்கப்பட்டது. இவற்றுக்கிடையே 12-ம் நூற்றாண்டில் சோப்புத் தொழிற்சாலைகள் இங்கிலாந்தில் பெருகத் தொடங்கின.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே குளியல் கலாச்சாரம் நம் நாட்டில் உண்டு என்றாலும், முகலாய அரசர்கள் காலத்தில் வீட்டிலேயே குளியலறைகள் கட்டுவது பிரபலமானது. 1556-ம் ஆண்டு, முகலாய அரசர்கள், குளியறைகள் கட்டி அதற்கு குஷால் கானா என்று பெயர் வைத்தார்கள்.

இவற்றுக்கெல்லாம் நதிமூலம் எது? பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் சாப்போ மலையில் மிருகங்களின் சாம்பலோடு கலந்து வந்த மலைநீர் தான்.
விழிப்புணர்வோடு, சுற்றிலும் நடக்கிற விஷயங்களை ஆர்வமாய் கவனித்த மனிதன், புதிய புதிய விஷயங்களைக் கண்டறியவும் செய்தான். கண்டுபிடிக்கவும் செய்தான்.
அந்த ஆர்வமும், உள்ளுணர்வின் குரலைக் கேட்கும் நுட்பமும் மனிதனின் மரபணுக்களில் இன்றைக்கும் உள்ளன. அவற்றை மங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் போதும், மகத்தான கண்டுபிடிப்புகளை மனிதகுலம் மறுபடி மறுபடி நிகழ்ந்தும்.

zp8497586rq