வெற்றிப் பாதை : எண்ணத்தை சீரமைத்தால் வாழ்க்கை சீராகும்

– விழா அரங்கிலிருந்து பாணபத்திரன்

நமது நம்பிக்கை மாத இதழும் பி.எஸ்.ஆர். சில்க் சாரீஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை’ பயிலரங்கின் முதல் நிகழ்ச்சி கடந்த 17.07.2005 ஞாயிறு அன்று கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள தாமோதர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய இதழின் நிர்வாக ஆசிரியர் திரு.கி.வேணுகோபால், நமது நம்பிக்கையின் ஒவ்வொரு இதழைத் தயாரிக்கும் போதும், அதன் ஒவ்வொரு பக்கமும் வாசகர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற கவனத்தோடும், எச்சரிக்கை உணர்வோடும் தயாரிக்கிறோம். அதுபோன்றே, இந்த பயிலரங்குகளும் வாசகர்களுக்கு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டே ஒவ்வொரு மாதமும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.பயிலரங்கினைத் தொடங்கி வைத்து தொடக்கவுரை நிகழ்த்தினார் நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் கவிஞர் மரபின்மைந்தன் ம.முத்தையா அவர்கள்.வெற்றிப்பாதை என்கிற தலைப்பில் தொடர் பயிலரங்குகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கோவை மாநகரில் 80-களின் தொடக்கத்தில் பொது வாழ்க்கையில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என்கிற முனைப்போடு மாணவ நிலையில் நுழைந்தவர்கள்தான் இன்றைக்கும் அந்தப் பணிகளில் இருக்கிறார்கள். 12 வயதில் தொடங்கி 18 வயதிற்குள் ஒரு மாணவனுடைய மனதில் என்ன இலட்சியம் அடிமனதில் பதிகிறதோ அந்த லட்சியம் தான் வாழ்க்கை முழுவதும் வழிநடத்துகிற உந்து சக்தியாக திகழ்கிறது. அப்படி ஒரு இலட்சியத்தை மனதிலே விதைத்துக் கொண்டு இடையறாமல் நடைபயின்று வருகிறார் கவிதாசன் அவர்கள்.

ஒருவர் எந்தவொரு துறையை மேற்கொண்டாலும் அதைக் கொண்டு செலுத்துவது திறமை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திறமை என்பது அடிப்படைத் தகுதி. ஆனால், ஒரு மனிதனை கொண்டு செலுத்துவது அந்தத் துறை சார்ந்த ஈடுபாடு. அந்த ஈடுபாடுதான் எல்லாத் தடைகளையும் தகர்த்து மேற்கொண்ட துறையில் கொண்டு செல்கிறது. அத்தகைய உந்து சக்தி ஒவ்வொரு மனிதனிடத்தும் விழைய வேண்டுமேயானால் அதற்கு இதுபோன்ற பயிலரங்குகள் அடித்தளம் அமைக்கின்றன.

இவை முழுக்க முழுக்க வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நடைபெறுபவை. எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் வெளிச்சத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. அந்த வெளிச்சத்தை எட்டிப் பிடித்தவர்கள் அதை எப்படிப் பெற்றோம் என்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். தாங்கள் படித்தறிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். வாழ்க்கையின் மிகச் சிக்கலாக சூழ்நிலையில் தாங்கள் எடுத்த முடிவுகளை, அந்த முடிவுகள் தந்த வெற்றிகளையும், அந்த வெற்றிகளுக்கு அடித்தளமிட்ட சமயோசிதங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். இப்படி வாழ்க்கையிலிருந்து விஷயங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்புதான் வெற்றிப் பாதையின்’ நோக்கம்.

கூட்டுப் பிரார்த்தனை போன்று, இந்த அரங்கில் உள்ளவர்கள் ஒன்றாக அமர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிற அம்சங்களைப் பற்றி சிந்திக்கிறபோது அதன் தாக்கம் பலமடங்காகப் பெருகி நம் ஒவ்வொருவரையும் வந்தடைகிறது. அதற்கு இந்தப் பயிலரங்கம் ஒரு வாய்ப்பாக இருக்கிறது என்றார்.தொடர்ந்து ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் தலைவர் சிந்தனைக் கவிஞர் திரு. கவிதாசன் அவர்கள் உரையாற்றினார்.

வெற்றி அடைவது என்பது ஒரு பதவியை அடைவது, பணத்தை சம்பாதிப்பது என்பதுபோல் எதையோ அடைவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வெற்றி என்பது ஒருவருடைய மனநிலை. நம் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தால் நாம் வெற்றியோடு இருக்கிறோம் என்று அர்த்தம்.நமது மனநிலையை எப்படிப் பக்குவப்படுத்துவது என்பது பற்றி சிந்திப்போம். ஒரு ஆற்றிலே தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. நீச்சல் தெரிந்தவனுக்கு அதைப் பார்த்ததும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதில் எப்படிக் குளிக்கலாம், எப்படி நீந்தி மகிழலாம் என்று எண்ணுகிறான். நீச்சல் தெரியாதவன் அதைப் பார்த்தவுடன் நடுங்கிக் கொண்டும், பயத்தோடும் நிற்பான். வாழ்க்கை என்பது அந்தத் தண்ணீரைப் போன்றதுதான். நாம் வாழக் கற்றுக் கொண்டிருக்கிறோமா? இல்லையா? என்பதுதான் கேள்வி.எங்கு செல்லவேண்டும் என்கிற ஒரு இலக்கு, இலட்சியம் இல்லாததால்தான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும், அடுத்த 10 ஆண்டுகளில் நான் எப்படி இருக்க வேண்டும் என்கிற திட்டம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை மாற்றவேண்டுமென்று சொன்னால் முதலில் அவன் தன் எண்ணத்தை மாற்றவேண்டும். கடலிலிருந்து அலைகள் வருவதைப் போல எப்போதும் நம் மனதிலிருந்த சிந்தனை அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அந்த எண்ண அலைகளை நெறிப்படுத்தலாம்.

எண்ணத்தை எப்படிச் சீரமைப்பது என்று தெரிந்து கொண்டால் வாழ்க்கை நம் வசமாகி விடுகிறது. எண்ணம் சீரமைக்கப்பட்டவன் மனிதனாக வாழ்கிறான். எண்ணம் சீரமைக்கப்படாதவன் மிருகமாக வாழ்கிறான்.நம்முடைய ஐம்புலன்களும் ஆறாவது அறிவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றால் நாம் தலைவன். ஆறாவது அறிவு ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் சாதாரண மனிதனாக இருக்க வேண்டியதுதான்.எண்ணம் எதனால் ஏற்படுகிறது?

நம்மனதில் ஏற்பட்ட பதிவுகள், சூழ்நிலை, நம்முடைய தேவைகள், தூண்டுதல், கருவமைப்பு போன்றவை காரணமாக ஏற்படுகின்றன.நிலத்திலிருந்து எண்ணெய் வெட்டி எடுக்கும்போது அது கச்சா எண்ணை என்று பெயர். அதில் பெட்ரோல், டீசல், தார், நாப்தலின், தூசுகள் என்று பல பொருள்கள் கலந்திருக்கின்றன. அது போல தேவையின் அடிப்படையில், பழக்கத்தின் அடிப்படையில், சூழ்நிலையின் அடிப்படையில், தூண்டுதலின் அடிப்படையில், கருவமைப்பின் அடிப்படையில் தோன்றுகிற எண்ணங்களை கச்சா எண்ணம் எனலாம்.

கச்சா எண்ணையை சுத்திகரிப்பதற்கு இயந்திரங்கள் இருக்கின்றன. அதுபோல கச்சா எண்ணத்தைச் சுத்திகரிக்கவும் பல பயிற்சிகள் உள்ளன.வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அண்ணனாக, தம்பியாக, கணவனாக, அப்பாவாக, தொழிலாளியாக, முதலாளியாக பல முகங்களோடு இருக்கிறோம். இவர்களுக்காக வாழ்கிறோம், நேரம் ஒதுக்குகிறோம். ஆனால், தனக்கு என்று ஒரு நாளைக்கு 1 மணி நேரம்கூட ஒதுக்க முடியாமல் வாழ்கிறோம். நாளொன்றுக்கு 1 மணி நேரம் உங்களுக்காக செலவு செய்து உங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பாருங்கள் உங்கள் எண்ணங்கள் சீராகும், உங்கள் வாழ்க்கைப் பாதையே மாறிவிடும்” என்றார்.

எண்ணத்தைச் சீரமைக்க பல ஆலோசனைகளையும் விளக்கங்களையும், பல்வேறு பயிற்சிகளை நிகழ்ச்சியில் வழங்கினார்.உள்ளூரிலிருந்தும், வெயியூர்களிலிருந்தும் கலந்துகொண்ட ஏராளமான வாசகர்கள், முழு மன நிறைவோடும் உற்சாகத்தோடும் திரும்பினர்.முடிவில், நமது நம்பிக்கை வாசகர் திரு. ஆர். ராஜேந்திரன் நன்றியுரையுடன் நிகழ்ச்சியின் நிறைவு பெற்றது.

அடுத்த நிகழ்ச்சி அதே அரங்கில் 21.8.2005 அன்று நடைபெறவுள்ளது. அதுகுறித்த செய்தி தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

(விழா அரங்கிலிருந்து பாணபத்திரன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *