முடிவல்ல ஆரம்பம்!

– திரு.து.சா.ப. செல்வம்

இந்தத் தொடரின் ஆசிரியர், திரு.து.சா.ப. செல்வம் அவர்கள் ‘ஏற்றுமதி உலகம்’ இதழின் பதிப்பாசிரியர்.

‘நீங்களும் ஏற்றுமதி செய்யலாம்’ எனும் நூலுக்காக தமிழக அரசின் முதல் பரிசு பெற்றவர்.
‘ஏற்றுமதி சுலபமே!’ ‘எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்’ ‘வாருங்கள் முன்னேறலாம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.


நம்பிக்கைப் பேச்சாளர் – பயிலரங்குகள் பல நடத்திவரும் பயிற்சியாளர் – தொழில் ஆலோசகர் -வெற்றிகரமான தொழில்முனைவர் – எழுத்தாளர் -பல வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர் -பத்திரிக்கையாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். “எழுத்தாலும் பேச்சாலும் இன்றைய இளைய சமுதாயத்தை மாற்றி அமைத்துவிட முடியும்” என்ற அசராத நம்பிக்கை கொண்டவர்.
அந்த மாணவன் அதிக உயரமில்லை. புத்திக் கூர்மையானவன். அவனது வகுப்பில் அவன்தான் புத்திசாலி. விஞ்ஞானத்தில் ஏதாவது சந்தேகமிருந்தால் அவனிடம்தான் விளக்கங்களை கேட்பார்கள் அவனது நண்பர்கள். பௌதீகத்தைப் பற்றியோ, கணக்கு சம்பந்தமாகவோ அவனிடம் கேள்விகள் கேட்டால், உற்சாகமாக பதில் கொடுப்பான். அவன் கண்களில் ஒளி தெரியும். எந்த விஷயத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆற்றல் அபரிமிதமானது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும். அவன் குடும்பம் ஒரு படிப்பறிவு உள்ள குடும்பம். அவனது தந்தை ஆங்கில இலக்கியத்தில் கைதேர்ந்த ஒரு ஆசிரியர்.

உயர்கல்வி படிக்க விரும்பியபோது அவனது நண்பர்களைப் போலவே பொறியியல் துறையில் சேரவே ஆசைப்பட்டான். சிறந்த பொறியியல் பயிலகம் என்பது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐப)யில் பயில்வதுதான்.

ஐஐப-யில் சேரவேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நேரமும் வந்தது. மைசூர் அருகில் சாமுண்டி மலை அடிவாரத்தில் அமைதி சூழ்ந்த ஊர் அது. அந்த ஊரில் உள்ள கல் மண்டபத்தில்தான் நுழைவுத் தேர்வு பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயிற்சித் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பலருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். இவன்தான் அவர்களுக்கு வழிகாட்டி, பலரது குழப்பங்களை நீக்கி அவர்களுக்கு உதவினான். மலர்ந்த முகத்தோடு பலருக்கும் உதவினான். அப்போது அவனுக்கு வயது பதினாறு. ஐஐப கல்லுாரியில் சேர்ந்துவிட்டதாகவே கனவில் மிதந்து கொண்டிருந்தான்.

நுழைவுத் தேர்வு பயிற்சி முடிந்தபின் தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் சென்று அவனது உறவினர் வீட்டில் தங்கினான். சிறந்த முறையிலே தேர்வை எழுதினான். மற்ற நண்பர்கள் அவனிடம். “எப்படி இருந்தது தேர்வு?” எனக் கேட்டபோது அவன் கூறிய பதில், “ஓகே”. தான் சிறந்த மு?91;ிலே எழுதினேன் என்று கூறுவதைவிட ‘ஓகே’ என்று கூறி தன்னடக்கத்தை வெளிப்படுத்தினான்.

ஐஐப முடிவுகள் வெளியாயின. அதிக மதிப்பெண் பெற்று முன்னணியில் வந்தான். அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. வெற்றிக் களிப்பில் அவன் அப்பாவை நெருங்கினான். அப்போது அப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா, நான் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன்.”
“ரொம்ப நல்லது, வாழ்த்துக்கள்! மகனே!”
“ஐஐப- யில் சேர ஆசைப்படுகிறேன்.!”

பத்திரிகை படிப்பதை நிறுத்திவிட்டு அவனையே உற்று நோக்கினார். ஒரு பெருமூச்சு விட்டு அவனிடம் கூறினார், “நமது பொருளாதார நிலை என்ன என்று உனக்குத் தெரியும். ஐஐப-யில் சேர்ந்து நீ படிக்கும்போது ஆகும் செலவு என்னால் சமாளிக்க முடியாத ஒன்று. நீ வேண்டுமானால் அருகிலுள்ள மைசூரிலேயே உனக்கு எதுவரைக்கும் படிக்க தோன்றுகிறதோ அந்தளவு படித்துக் கொள்.”

இப்படிக் கூறும்போது அவனது அப்பா தன்னுடைய பொருளாதார நிலையை நினைத்து மிகவும் கவலைப்பட்டார். தன் மகனை ஐஐப-யில் படிக்க வைக்க முடியாத தனது நிலையை எண்ணி மிகவும் வேதனைப்பட்டார்.

ஐஐப-யில் சேர வேண்டும் என்ற உயர்ந்த கனவு, இலட்சியம் நிறைவேறதோ என்று நினைக்கும் பொழுது அவனுக்கு தனது இதயமே வெடித்துவிடுமோ என்று கண்ணீர் விட்டான். மனதிற்குள் வேதனைப்பட்டான்.

ஐஐப-க்கு விண்ணப்பிக்கவே இல்லை. தன்னுடைய மனக்குறையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. யாரையும் குறை கண்டுபிடிக்கவும் இல்லை. யார்மீதும் கோபப்படவுமில்லை. தன் மனத்திற்குள்ளேயே அடைத்து அமைதியாக இருந்தான்.
அந்த நாளும் வந்தது. அவனது நண்பர்கள் ஐஐப-ல் சேருவதற்காக மைசூரிலிருந்து சென்னைக்கு கிளம்பத் தயாரானார்கள். அவர்களை வழியனுப்ப ரயிலடிக்கு சென்றான். அவன் ரயிலடிக்கு சென்றபோது அவனது நண்பர்கள் ஏற்கனவே அங்கிருந்தனர். அவர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், அவர்களுடைய தங்கும் விடுதியைப் பற்றியும், பாடங்களைப் பற்றியும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அவன் மௌனமாக இவர்களையெல்லாம் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். மனத்திற்குள் அழுது கொண்டிருந்தான்.

இவனைப் பார்த்த ஒரு நண்பன், “ம்… நீயும் எங்களுடன் வந்திருக்கலாம்” என்றான். இவனால் தனது துக்கத்தை அடக்க முடியாமல் அனைவரிடமும் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றான். ஆனாலும் அவனால் அங்கிருந்து உடனடியாக நகரமுடியவில்லை. ரயில் கிளம்பிச் சென்று வெகு நேரமாகியும் அவனால் அங்கிருந்து நகர முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க அப்படியே நின்று கொண்டிருந்தான். இது நடத்தது 1962-ல்! மைசூர் ரயிலடியில்!
கோபமோ, பொறாமையோ கொள்ளாமல், அவனுக்குள் அவன் கூறிக்கொண்டான், “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி-யில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து தேர்வடைந்து பெரிய பெரிய சாதனைகள் புரிவார்கள். ஆனால், ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இன்ஸ்டிட்யூட் தான் உன் வளர்ச்சிக்குக் காரணம் என்பதல்ல. உன் வளர்ச்சிக்குக் காரணம், நீதான்! நீயேதான்! உன்னுடைய விடாமுயற்சியும் தளராத மனமும் கடும் உழைப்பும் உன்னை மிகப்பெரிய வெற்றியாளனாக்கும்! உன்னால் முடியும்!” என்று தனக்குள் ஒரு தீர்மானத்தை உண்டாக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அன்றைக்கு அவன் எடுத்த அந்த தீர்மானத்தின் விளைவு? இன்று அவன் உலகப்பிரசித்தி பெற்ற வெற்றியாளர்களில் ஒருவன். அவன் யார்? ‘இன்ஃப்போசிஸ்’ எனும் கம்ப்யூட்டர் சாம்ராஜ்யத்தின் தலைவர் திரு. நாராயண மூர்த்தி!

மிகச் சிறந்த மாணவனாக இருந்தும், மற்றவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்தும், சிறந்த முறையிலே பயிற்சித் தேர்வு எழுதியிருந்தும், தன்னால் தனது கனவை அடைய முடியுவில்லையே, இனிமேல் நமது வாழ்க்கை அவ்வளவுதான், முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில், இது முடிவல்ல, புதிய சாதனைகளின் ஆரம்பம் என்ற தன்னம்பிக்கையில், உழைத்து முன்னேறினாரே, இவரைப் போலவே வெற்றிபெற வாழ்த்துகிறோம்!.

“இரவுக்குப் பின்பு பகல்!
இருளுக்குப் பின்பு வெளிச்சம்!”

(முடிவல்ல… தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *