– தி.க. சந்திரசேகரன்
நாம் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம்
நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது குடும்பத்திலோ இணைகிறீர்கள். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?
“வாத்துகள் கழுகுகளின் பள்ளிக்கு செல்வதில்லை” – இதை யார் கூறினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்க நாட்டின் கிராமியப் பழமொழியாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. ஓர் அமெரிக்க எழுத்தாளனின் நூலில் இந்த வரியைக் கண்டு மகிழ்ந்தேன்.
ஒவ்வொரு வகையான உயிரினங்களுக்கும் அவைகளுக்கேற்ப பள்ளிக்கூடங்கள் இருப்பது போல ஒரு கற்பனை. வாத்துக்களுக்கென்று ஒரு பள்ளி; கழுகுகளுக்கென்று ஒரு பள்ளி.
வாத்து ஒன்றிற்கு கழுகுகளைப் பார்த்தவுடன் நாம் ஏன் அந்தப் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று ஓர் ஆசை வருகிறது. செல்லலாமா?! என்ற வினாவிற்கு என்ன விடை என்று அலசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
வாத்து ஏன் கழுகுப்பள்ளிக்கு செல்லவேண்டும்?
வாத்திற்கும் கழுகைப்போல் உயரத்தில் சிறகடித்துப் பறக்க ஆசை! கழுகின் வலு, கூரிய பார்வை, வளைந்த அலகுகள், சிறப்பான நகங்கள், வேகம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நானும் கழுகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை தோன்றுகிறது! “கழுகாக பிறக்கவில்லை; ஆனாலும் கழுகுப் பள்ளியில் சேர்ந்து விட்டால் கழுகாக மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது” என்ற ஆர்வத்தில் கழுகுப்பள்ளிக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறது. இது சரியா தவறா?
வாத்து தண்ணீரில் நீந்தும் பறவை; தரையிலும் நடக்கும். ஆனாலும் நீந்துவது அதற்கு எளிது. அதன் பாத அமைப்பு நீந்துவதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கிறது. வாத்து பறவைதான். இறகுகள் இருப்பதால் அதன் பெயர் பறவையே தவிர வாத்துக்கள் பறந்து செல்வதில்லை. பெரும்பாலும் அதன் உணவு மீன்களும், நீரில் அல்லது சதுப்பு நிலத்தில் வாழும் புழு பூச்சிகளுமே! வாத்துக்கள் எலிகளையும், கோழிக் குஞ்சுகளையும் உண்பதில்லை.
கழுகு தரையில் நடந்து செல்வதில்லை. நடக்க முடிந்தாலும் பெரும்பாலும் தரையில் இருப்பதில்லை. மரத்தின் மீதோ, மதிற்சுவர்களின் மேலோ உட்காரும்; பின்னர் பறக்கும். கழுகு நீந்துவதில்லை. அதன் அலகுகளும், கால் நகங்களும் இரையை கிழிப்பதற்கு ஏற்ப அமைந்துள்ளன.
இந்த சூழ்நிலையில் ஒரு வாத்தால் எப்படி கழுகாக மாறமுடியும், அதனால் ஒரு கழுகை இரசிக்கமுடியும்; பாராட்ட முடியும்; ஆனால் கழுகாக மாறமுடியுமா?
ஆகவே வாத்து, வாத்துப் பள்ளிக்கூடத்திற்கு செல்லலாம். இன்னும் சிறப்பாக எப்படி நீந்துவது, எப்படி மீன் பிடிப்பது, எப்படி தன் குஞ்சுகளை வளர்ப்பது என்று கற்றுக்கொள்ளலாம்.
எதற்காக இந்த உருவகம்?
ஒரு தொழிற்சாலையில் ஒருவர் கணிப்பொறியை இயக்கி, எல்லா விவரங்களையும் பதிவு செய்து, அலுவலக வேலையை செய்து வருகிறார். இன்னொரு பிரிவிலே ஒருவர் உலோகங்களை இணைக்கிற வேலையை செய்து வருகிறார். இந்த “வெல்டிங்” வேலை செய்து வருபவரைப் போல, தானும் வெல்டிங் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கணிப்பொறி வல்லுநருக்கு வந்தால் என்ன நடக்கும்?
நிஜமாகவே அவர் வெல்டிங் கற்றுக்கொண்டு, வல்லுநராக வரவும் முடியும். ஆனால் அது தேவைதானா, அவருடைய கல்வி, முழுமையான ஆற்றல் எங்கே இருக்கிறதோ அங்கே வளர வேண்டும். வேறு துறைகளுக்குப் போய் தன்னை உயர்த்திக்கொள்ள ஆகும் காலம், உழைப்பு, பணம் இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அவர் புதிய முயற்சியில் இறங்குவது வீண் என்று தெரியும்.
ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அவரவர்கள் துறையில் எப்படி மேலும் மேலும் வளர்வது உயர்வது என்று தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வது நிறுவனத்திற்கு பெரும் நன்மையை சேர்க்கும்.
ஜப்பானில் இதைத்தான் செய்கிறார்கள். தொடர்ந்து ஒரே துறையில் பயிற்சியும்- அனுபவமும் பெறப்பெற பொருள்களில் சூன்யப் பிழையை (ழங்ழ்ர் ஈங்ச்ங்ஸ்ரீற்) காணமுடிகிறது.
அப்படியானால் வேறு துறைகளில் செல்லவே கூடாதா?” என்று கேட்டால், மேற்கண்ட விதி ஒரு பொதுவான விதிதான். எல்லாவற்றிற்கும் விதி விலக்கு இருப்பது போல, ஒரு சிலர் எந்த வேலையையும் நன்கு கற்றுக் கொண்டு சிறப்பாக செய்பவர்களாக இருக்கலாம். அவர்கள் வேண்டுமானால் போகலாம். ஆனால் பொதுவாக ஒரே துறையில் தொடர்ந்து முன்னேறுவது சிறந்தது.
டெண்டுல்கரின் கவனம் கிரிக்கெட்டில் இருந்தால் நல்லது. “எப்படி கபடி விளையாடுவது” என்று எண்ணாமலிருப்பது முக்கியம். ஒரு நடிகனின் சிந்தனை நடிப்பில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர் கால்பந்திலே கவனம் செலுத்தினால், நடிப்பும் கால் பந்தும் காணாமல் போய்விடும்.
வாத்தும் – கழுகுப் பள்ளியும் இன்னொரு கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
வேறு வழியில்லாமல் வாத்து கழுகுப் பள்ளியில் சேர்ந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பள்ளியில் வாத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
வாத்து பேசுவது கழுகுக்குப் புரியவில்லை. கழுகின் மொழி வாத்துக்குப் புரியவில்லை.
கழுகு அழுகிப்போன ஒரு பூனையைக் கிழித்து, ருசித்து சாப்பிடுகிறது. வாத்துக்கு அதனுடைய நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கழுகுகளின் கூட்டம், இரைச்சல் எதுவுமே வாத்துக்குப் பிடிக்கவில்லை. வாத்து தண்ணீரில் இருந்தால், கழுகு மரக்கிளையின் மேல் உட்கார்ந்திருக்கிறது. இந்த நிலையில் வாத்துக்கு மூன்று வழிகள் உள்ளன.
1. வாத்து கழுகுகளுக்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக் கொண்டு, கிட்டத்தட்ட கழுகாகவே மாறுவது.
2. கழுகுகளை தனக்கு ஏற்றமாதிரி மாற்றுவது. கழுகுகளை நீந்த வைப்பது, சேற்றைக் கிளறி புழு சாப்பிட வைப்பது, இப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்து கழுகுகளை வாத்துக்களாக மாற்றுவது.
3. இவையிரண்டுமே நடக்க முடியாதபோது, கழுகுப் பள்ளிக்கூடத்திலிருந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு, வேறு பள்ளிக் கூடத்தில் சேர்ந்துகொள்வது.
இந்த இரண்டாவது கோணம் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் சிக்கிக் கொண்டால் ஒன்று அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். அல்லது நமக்கு ஏற்றவாறு சூழ்நிலையை மாற்ற வேண்டும். இரண்டுமே நடைபெறாவிட்டால், அங்கேயே இருந்து புலம்பிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வேலையிலிருந்தே விடுபட்டு வெளியே வந்துவிடலாம்.
நீங்கள் ஒரு நல்ல தொழிற்சாலையில் அல்லது விற்பனை நிலையத்தில் அல்லது குடும்பத்தில் இணைகிறீர்கள். அந்த இடம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அப்போது முழுக்க முழுக்க அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அங்கே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்! உங்களால் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனை படைப்பீர்கள்!
நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது குடும்பத்திலோ இணைகிறீர்கள். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?
மெல்ல மெல்ல சூழ்நிலையை மாற்றுங்கள். உற்பத்தியில் தரமில்லையா? தரத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ஒற்றுமையில்லையா? – ஒற்றுமையைக் கொண்டு வாருங்கள். எல்லோரும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்? – சுறுசுறுப்பை ஊட்டுங்கள்.
விற்பனையில்லையா? – வணிகத்தைப் பெருக்குங்கள்.
படிப்படியாக சூழ்நிலையை மாற்றி நல்ல நிலையை உருவாக்குங்கள். இது கடினமான வேலைதான், இதற்காகப் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிவரும். ஆனாலும் நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் நல்ல எண்ணங்களுடனும், அறிவுக்கூர்மையுடனும் செயல்படும்போது, அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.
இருட்டறையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்ததுபோல், பாலைவனத்தில் ஒரு பசுஞ் சோலையை உருவாக்கியதுபோல், அற்புதமான மாற்றங்களை உண்டாக்கிய பெருமை உங்களுக்குக் கிடைக்கும்.
“உங்களால் மாறவும் முடியவில்லை, மாற்றவும் முடியவில்லை” என்றால் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதுதான்!
வாத்து – கழுகுப்பள்ளிக்கூடம் இன்னொரு கோணத்திலும் நம்மை சிந்திக்க வைக்கிறது!
வாத்து மிகவும் மென்மையான ஒரு பறவை. ஒரு சாது. ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாகத் தண்ணீரில் நீந்திவரும் ஒரு பறவை.
கழுகு ஓர் ஆபத்தான பறவை. முயலும், கோழிக்குஞ்சும் மசால் வடையும் அதற்கு ஒன்றுதான். உணவுக்காக வேட்டையாடித்தாக்கும் பறவை கழுகு.
இப்படிப்பட்ட கழுகுகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில், வாத்தின் நிலைமை என்ன ஆகும்?
கழுகுகள் வாத்தை சக மாணவராகப் பார்ப்பார்களா அல்லது தாக்கி உண்பதற்குத் தக்க உணவாக எண்ணுவார்களா? கழுகுகளின் கோரப்பசிக்கு உணவாகத் தானே வலியப் போய் சிக்கிக்கொள்ளும் நிலைக்கு வாத்து நீந்தித்தள்ளப்படும் நிலை வந்தால் என்ன ஆவது?
சாதுவான சிலர், ஆபத்தான மனிதர்களோடு சிக்கிக் கொள்ளும்போது அவர்களுடைய நிலை என்ன?
ஒரு தொழிலைத் தொடங்கும்போது, எத்தகைய கூட்டாளிகளோடு இணைகிறீர்கள்?
பணம் வைத்திருக்கும் அப்பாவிகள், ஈவு இரக்கமற்ற கொடூரமானவர்களோடு அறியாமையால் இணைந்து, போட்ட முதலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் கேவலங்களை நாம் பார்ப்பதில்லையா?
பல நல்ல நிறுவனங்கள் இப்படிப்பட்ட கொடூரமான சுயநலமிகளால் சீரழிந்து போன காட்சிகளை நாம் காண்பதில்லையா?
நல்ல பண்புகளைப் பெற்ற சாதுவான பெண்ணை மோசமான குடும்பத்திலே திருமணம் செய்து கொடுத்துவிட்டு அன்றாடம் இரத்தக் கண்ணீர் வடிக்கிற பெற்றோர்களைப் பார்க்காதவர்கள் உண்டா?
வாத்து – கழுகுப்பள்ளியில் வரும் பள்ளிக் கூடங்கள் என்ன?
அசல் பள்ளி – கல்லூரி – சில அலுவலகங்களில் மட்டும் என்ன நிகழ்கிறது?
இயல்பாக வருகின்ற காதல் ஒருபக்கம் இருக்கட்டும். வசதியான அப்பாவியான ஒரு பெண்ணோ, ஆணோ இருந்துவிட்டால் காதல் என்ற வலைவீசி, ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டோ செய்யாமலோ எல்லாவற்றையும் சுரண்டும் கழுகுகள் மானிட வேடத்தில் உலவி நடத்திவரும் நாடகங்களைப் பார்த்தால் அச்சமாகவல்லவா இருக்கிறது?
அதிகாரிகள், அலுவலர்களில் இலஞ்சப் பிண்டத்தைக் கீறி உண்ணும் கழுகுகள் எத்தனை?
எனவே வாத்துக்கள், கழுகுப் பள்ளிக்குச் செல்லத்தான் வேண்டுமா?
வாத்தும் – கழுகும் உருவகம்தான்.
அவை கிளறிய சிந்தனைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
எந்தப் பாதையில் சென்றால் நல்லது என்று நமக்கு அடையாளங்கள் காட்டுகின்றன.
வாத்தை நல்லது என்றும் கழுகைத் தீயது என்றும் வகைப்படுத்திக் கொண்டால், நாம் செல்லவேண்டிய பள்ளிக்கூடம் எது என்று நமக்கே தெரியும்!
(வளரும்…)
premalatha
அருமையான உருவகம். வாத்து போன்ற மனிதர்கள் கழுகுகளாக மாறாமல் இருப்பதே நல்லது. அதனதன் இயல்பை உணர்ந்து வாழ்வதில்தான் ஞானம் இருக்கிறது.