– ரிஷபாருடன்
” ஒரு தலைவர், குறிப்பிட்ட செய்தியொன்றை மக்களுக்குச் சொல்பவர் அல்ல – அவரே செய்தி” என்றார் வாரன் பென்னிஸ். “என் வாழ்வே என்னுடைய செய்தி” என்றார் காந்தியடிகள்.
தலைமைப் பொறுப்புக்கு யார் வந்தாலும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்களை சிலர் பின்பற்றுவார்கள். தங்களுக்கொன்றொரு முன்மாதிரியைத் தேர்வு செய்து கொள்வது மனித இயல்பு. நீங்கள் வேறொருவரைப் பின்பற்றுகிற அதே நேரம் உங்களை யாரோ பின்பற்றிக் கொண்டிருக்கிறார் கள் என்பதை மறந்துவிடக்கூடாது
எனவே, வாழ்வில் முன்னேறத் தொடங்குகிற நேரங்களில் எல்லாம் நீங்கள் ஒரு முன் மாதிரியாகப் பாôக்கப்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் இயல்பான தலைமைப் பண்புகளோடு சேர்த்து சுயவிமர்சனத்தில் அடிக்கடி ஈடுபட்டு, குறைகளைக் களைந்து கொண்டே வரும்போது இன்னும் பலபேரை நீங்கள் ஈர்ப்பதை உணர்வீர்கள்.
வேலைகளை எப்படிக் கையாள்கிறீர்கள், வதந்திகளை எப்படிப் புறக்கணிக்கிறீர்கள், நேரத்தை எப்படி நிர்வகிக்கிறீர்கள், பொதுவில் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதை நீங்களே விழிப்புணர்வோடு கண்காணிக்கும் போது, உங்களை நீங்களே சிறந்த தலைவராய் செதுக்கிக் கொள்கிறீர்கள்.
இதற்கோர் எளியவழி இருக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வின் ஆரம்ப நாட்களில் உங்கள் முன்னோடியாக மனதில் நிறுத்திக் கொண்டவர்களை உங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் நெருங்கிப் பழகியபோது நிகழ்ந்த சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்ள முயலுங்கள்.
அவர்களின் சிறந்த பண்பு நலன்களை விவாதிக்கும் போது அவர்களிடம் என்னென்ன குறைகள் கண்டீர்கள் என்பதும் ஞாபகம் வரும். அவர் இந்தத் தவறைத் திருத்திக் கொண்டிருக்கலாம், இதனை சரி செய்திருக்கலாம் என்றெல்லாம் எவ்வளவோ எண்ணிருப்பீர்கள்.
அத்தகைய தவறுகளோ குறைகளோ உங்கள் வாழ்வில் ஏற்படாமல் தவிர்த்தாலே வெற்றிதான்.
உங்களைப் பின்பற்றும் ஒருவர், தன் திறமையை வெளிப்படுத்தும் தவிப்புடன் இருந்தால், அவரைத் தட்டிக் கொடுத்து வாய்ப்பளிப்பதும், தவறு நேர்ந்தாலும் பரவாயில்லை என்று ஊக்கம் கொடுப்பதும், அவருக்குள் நம்பிக்கையை மட்டுமல்ல நன்றி உணர்வையும் ஏற்படுத்தும்.
பொதுவாழ்வில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரை நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு, தீவிரத்துடன் பின்பற்றும் போது நமக்குள் இருக்கும் தலைமைப்பண்பு மலர்கிறது.
ஆன்மீகத்தில் ஒரு குருவைத் தேடுவதும், முற்றிலும் சரணடைவதும் ஆன்ம விடுதலைக்கான வழியாய் பேசப்படுகின்றன. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றன. தீவிரமான தேடலுடன் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களை “அடிமைகள்” என்று தவறாக நினைப்பவர்களும் உண்டு நல்ல தலைவரிடமோ நல்ல குருவிடமோ சரணடைவது எப்போதும் ஒரு வழிப் பாதைதான். திரும்ப வருவதற்குப் பாதையில்லை என்று பொருளல்ல. திரும்ப வருவதற்குத் தேவையில்லை.
சரியானவரைத் தேர்வு செய்து, பின்பற்றுகிற நம்பிக்கை எல்லோருக்கும் எளிதில் ஏற்பட்டு விடாது. ஏனெனில் தன்னை நம்பும் ஒருவரால்தான் இன்னொருவரை நம்பிச் சரணடைய இயலும்.
Leave a Reply