வறுமையில் தொடக்கம் வளங்களின் பெருக்கம்!

– அருணாச்சலம்


லீஜின்யாங் வெற்றி வாழ்க்கை

ஒரு நிறுவனம் சிறியதாக இருக்கையில், அது அதன் உரிமையாளருக்கு மட்டுமே சொந்தம். அதே நிறுவனம் மிகப் பெரியதாக வளர்கையில், இந்த சமூகத்துக்கே அது சொந்தம்”. இந்த வாசகம் யாருக்குச் சொந்தம் என்கிறீர்களா?

சீனாவைத் தலைமையகமாகக் கொண்ட டியான்ஸ் நிறுவனத்தின் தலைவர், லீ ஜின்யாங்கின் வாசகம் இது.

வறுமையின் பிடியிருந்து போராடி வளமையின் மடியில் ஏறி அமர்ந்ததோடு எண்ணிலடங்காதவர்களின் வளமான வாழ்வுக்கும் வழி செய்யும் இந்த விந்தை மனிதர், சீனாவின் நூறு பணக்காரர்களைப் பட்டியட்ட ரூபெர்ட் ஹுக்வெர்ஃபின் கணிப்புப்படி சீனாவிலேயே ஆறாவது இடத்தில் இருக்கும் செல்வந்தர். வலிமிக்க வடுக்களைச் சுமந்தபடி வெற்றிப்படிகளை எட்டுவைத்து ஏறிக்கடந்த லீஜின்யாங்கின் வாழ்க்கைப்பாதை, வியர்வையில் நனைந்த விறுவிறுப்பான பாதை!

சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் உள்ள காங்ஸாவு நகரில் 1958 பிறந்த லீஜின்யாங் எல்லாப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குப் போகத்தான் செய்தார். பெரிதாய் எதையோ செய்யவேண்டும் என்கிற வேகத்தை இதயத்தில் வேட்கையாய் வளர்த்துக் கொண்டிருந்த அவரால் பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டிருக்க முடியவில்லை.

பதினான்கு ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை விட்டுவந்த லீஜின்யாங், இரண்டு ஆண்டுகள் எண்ணெய்க் கிணறுகளில் கூலிக்கு வேலை பார்த்தார். அவரது பரபரப்பான பார்வை, பணம் பண்ணும் தொழிலுக்கான வாய்ப்பை துருவித் துருவி அலை பாய்ந்தது. சீனாவின் வடபகுதியில் மலிவு விலையில் கிடைத்தவை தென்பகுதியில் கிடைக்கவில்லை. தென்பகுதியில் விலை குறைவாய்த் தென்பட்ட விஷயங்களோ வடபகுதியில் கிடைக்கவில்லை. இந்த வித்தியாசத்தை வாங்கிக் கொண்ட லீஜின்யாங் பண்டங்களைப் பரிமாற்றம் செய்து பெரும் பணம் ஈட்டினார்.

இந்தத் தொழிலைத் தொடங்கிய போது அவருக்கு வயது பதினாறு என்கிறது வரலாறு!

அதன்பின் அச்சகம் ஆரம்பித்தார். ஓர் ஆலையும் ஒரு தொழிற்சாலையும் தொடங்கினார். தொட்டதெல்லாம் துலங்கியது. 1980களில் 10,000 யுவான் இருந்தாலே பெரும் பணக்காரர் என்றிருந்த காலத்தில் 20 மில்லியன் யுவான் இருந்தது இவரிடம். அப்போது இவர் தன் இருபதுகளில் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

1993ல், தனது முப்பத்தைந்தாவது வயதில், சொந்த ஊரைவிட்டு டியான்ஜின் என்ற இடத்திற்குச் சென்ற லீஜின்யாங், அங்கு பல புதிய தொழில்களைத் தொடங்கினார்.

ஏற்றிவிடுகிற வாழ்க்கை எட்டியும் உதைக்கும் என்பதைத் காலம் காட்டியது. 20 மில்லியன் யுவான் மூழ்கும் விதமாய் பலத்த அடி. பெருத்த நஷ்டம். எதற்கும் கலங்காதவர் என்று கருதப்பட்ட லீஜின்யாங் கலங்கி அழுத காலங்கள் அவை.

1994ல், தோல்வியின் பெரும் சுமை தாங்காமல் ஏரியில் விழுந்து உயிர்விடத் துணிந்தார் லீஜின்யாங். அப்போது, ஒரு நினைவு உள்ளத்தில் தோன்றியது. “நான் மட்டும் நம்பிக்கை இழக்காமல் இருந்தால் எல்லாவற்றையும் திரும்பத் தொடங்க முடியும்” என்ற உணர்வு, உரமேறி உரமேறி உறுதியானது. அப்போது தனியொருவராகக் கரையேறிய லீஜின்யாங், பல்லாயிரக்கணக்கானவர்களைக் கைதூக்கிவிடப் போவதை அவரே அறிந்திருக்கவில்லை.

1995ல், சீனாவின் ஊட்டச்சத்து நிபுணரான ஸெங் பெங்ரன் உதவியோடு கால்ஷியம் சத்துமிக்க உணவுப் பொருள் தயாரித்தார். டியான்ஸ் என்ற பெயர் அப்போது வைக்கப்பட்டதுதான். மிகவிரைவிலேயே ஏழு விதமான புதிய உணவுப் பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்தது. ஒரே ஆண்டில் சீனா முழுவதையும் சென்றடைந்தன டியான்ஸ் தயாரிப்புகள்.

உலகளாவிய முறையில் நிகழ்ந்த பொருளாதாரத் தடுமாற்றங்கள் உள்ளூர் சந்தையை பாதித்தபோது பொருட்களை நேரடியாக கடைகள் மூலம் வாங்க அனைத்து வலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அப்போது சற்றும் தளராமல் உலகச் சந்தை நோக்கித் தனது பார்வையைத் திருப்பினார் லீ. தன் வலைத் தொடர்பைப் பரப்பினார். பத்தே ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்கும் தன் சீனத் தயாரிப்புகளின் சிறப்பம்சங்களை நிரூபித்து, 180 நாடுகளில் தன் வலைப்பின்னலை வளத்துக்கும் நலத்துக்குமான பின்னலாய் விரிவடையச் செய்துள்ளார்.

இந்தக் கட்டுரையின் ஆரம்ப வாசகங்களை நிஜமாக்கும் விதமாக அறப்பணிகளுக்கு அள்ளி வழங்குவதைத் தன் நிறுவனத்தின் நிகரற்ற நோக்கமாய் வகுத்திருக்கிறார் லீஜின்யாங். சீனாவின் ஆறாவது பணக்காரர் என்று பட்டிய-டப்பட்ட இவர், சீனாவின் சிறந்த மூன்றாவது கொடையாளர் என்று முத்திரை பதித்துள்ளார். ஊனமுற்றோர் நலனுக்கு 4,20,000 யுவான்களை கொடையாய்க் கொடுத்தது. டியான்ஸ் நிறுவனம். அதில் லீ தந்த தொகை 1,20,000 யுவான்.

1998ல், வெள்ளப் பெருக்கின் போது 22 மில்யன் யுவான், சார்ஸ் நோயைக் கட்டுப்படுத்த 3 மில்யன் யுவான், வழங்கியது, டியான்ஸ் நிறுவனம். 2004ல் சுனாமி பேரழிவின் போது 80,000 யுவான் வழங்கினார் லீ.

டியான்ஸ் நிறுவனங்களை, உலகின் செல்வாக்குமிக்க பார்ச்யூன் 500 நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள லீஜின்யாங், “எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் டியான்ஸ் நிறுவனத்தின் கொடை இருக்கும்.” என்கிறார். பகிர்ந்து கொள்ளத்தான் வெற்றி என்பது இவர் படித்த பாலபாடம். இதைக் கற்பிப்பதே இவரது வாழ்க்கையின் நோக்கம்!

Leave a Reply

Your email address will not be published.