இசைபட வாழ்தல்

சென்ற ஆண்டு அழைத்திருந்தால் எல்லாமே வெற்றிமுகம்தான் தெரிகிறது. வாய்ப்பு என்கிற ஒருமுகம்தான் தெரிகிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால், இப்போது முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு என்கிற முகம் தெரியும்போதே சவால் என்கிற மறுமுகமும் தெரிகிறது.

வாய்ப்புகள் நிறைந்த இந்தியாவில் வாழ்கின்றோம் என்கிற வாய்ப்பை நாம் முதல் உணர வேண்டும்.

‘இந்தியாவின் வரைபடத்தை உலக வரைபடத்திருந்து நீக்க வேண்டும். ஏனென்றால் அந்த நாட்டை யாரும் கவனிப்பதில்லை’ என்று ஒரு தத்துவவாதி சொன்னார். இன்றைக்கு அப்படியல்ல. வாரத்திற்கு ஒன்று, இரண்டு விமானங்கள் வரக்கூடிய சென்னை விமான நிலையத்தில் பத்து விமானங்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டும் வருகின்றன.

அமெரிக்காவைப் பார்த்து வியந்த காலங்கள் உண்டு. வேலைவாய்ப்புக்காக அங்கே சென்றிருக்கிறார்கள். ஆனால் தொழில் துவங்க என்று ஒருசிலர்தான் அங்கே அந்த வாய்ப்பை அடைந்திருக்கிறார்கள்.

இந்தியா அப்படியல்ல. வாய்ப்புகள் நிறைந்த நாடு.

இன்றைக்கு வேண்டியது மூலதனமல்ல. ஒரு காலத்தில் அரசர்களுக்கு, நிலக்கிழார் களுக்குத்தான் மதிப்பிருந்தது. அடுத்த காலகட்டத்தில் தொழிற்சாலை நடத்துகிறார். ஐநூறு பேருக்கு வேலை தந்திருக்கிறார் என்றால் அதற்கு மதிப்பிருந்தது. அதையும் தாண்டி எண்பதுகளில் ‘பிராண்ட்’ இருந்தால்தான் மதிப்பு என்கிற நிலை வந்தது. இப்போது, எப்படி தொழில் செய்யலாம், அதை இந்தியாவிலுள்ள 100 கோடி மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கலாம் என்கிற அற்புதமான யோசனை உள்ளவர்களுக்குத்தான் மதிப்பிருக்கிறது.

உலகளாவிய சிந்தனை வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமல்லாது, உலக அளவிற்கும் நாம் பொருள்களை தயார் செய்ய வேண்டும். எதை அடையவேண்டும் என்று நினைக்கிறோமோ அது நம் வரம்பை மீறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த இலக்கை அடைய உந்திச் செல்ல முடியும்.

1902ம் ஆண்டில் எட்டு வாரம் கப்பல் பயணம் செய்து, இங்கிலாந்துக்குப்போய், ஸ்டீல் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜாம்ஷெட் டாட்டா சொன்னார். அப்போது “If you make steel, we use it for breakfast” என்று இங்கிலாந்துக்காரர்கள் சொன்னார்கள்.

திரும்ப எட்டு வாரம் பயணித்து இந்தியா வந்தார். மனது உடைந்து வரவில்லை. உறுதிப் பட்டு வந்தார்.

1908ம் வருடம் Tata Steels ஆரம்பித்தார். அவருடைய கொள்ளுப்பேரன் இங்கிலாந்திருக்கிற ‘கோரஸ் ஸ்டீலை’ வாங்கி விட்டார்.

வளமான தொலைநோக்குள்ளவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

என் தந்தை சில கொள்கைகளில் உறுதிபட இருந்தார்கள். அந்த உறுதி மாறாமலிருப்பதும் தொழில் முனைவோரின் தன்மையாக இருக்க வேண்டும்.

1972-73ல் “யார்ன் கண்ட்ரோல்’ மத்திய அரசு கொண்டுவந்தது. அதை தெரிந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

தொழில் முனைவோர்கள் அடக்கமும், போதும் என்கிற மனமும் கொண்டிருக்க வேண்டும். இப்போது அமெரிக்காவில் நடக்கின்ற தோல்விகளைப் பார்த்தால், இவையெல்லாம் பேராசையின் காரணமாக விளைந்த விளைவுகள்.

கண்ணதாசன், ‘பத்து ரூபாய் இருந்தபோது நூறு ரூபாய் வேண்டும் என்கிற மனநிலை இருந்தது. நூறு ரூபாய் வந்தபோது ஆயிரம் ரூபாய் வேண்டும் என்ற மனநிலை. லட்ச ரூபாய் வந்த பிறகும், நோட்டடிக்கிற உரிமை எனக்கு இருந்தால் போதும் என்கிற மனநிலை இருந்தது” என்று ஒரு முறை சொன்னார்.

‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற கட்டுக் கோப்போடு தொழில் முனைவோர் இருக்க வேண்டும். அது ஒரு வளமையாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

“அறமீனும் இன்பமுமீனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்” என்றார் வள்ளுவர்.

தீதின்றி வந்த பொருள்தான் அறத்தையும், இன்பத்தையும் தரும். தீதோடு வந்த பொருள் இன்பத்தை , அறத்தை தராது.

பொருள் வந்த பிறகு,

“ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” என்றார்.

இவை இரண்டையும் மனதில்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *