ஒபாமா சொல்லும் மாற்றம்

-கிருஷ்ணா

உங்கள் வாழ்விலும்தான்

மாற்றங்களின் யுகம் தொடங்கிவிட்டது என்கிற தோற்றத்தை அமெரிக்கா எங்கும் அலைபோல் எழுப்பியிருக்கிறார் ஒபாமா. உண்மையில் இன்று ஒவ்வொரு மனிதருக்கும் மாற்றமே ஆயுதம். மாற்றமே கேடயம். மாற மறுக்கும் யாரையும் மிதித்துக்கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேக வேகமாய் வந்து கொண்டிருக் கின்றன. உங்கள் வாழ்விலும் சில விஷயங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்கிறீர்கள் தானே??

அவசரப் பிரகடனம் செய்யுங்கள்:

தினசரி வேலைகளில், குடும்பத்திலும் நிறுவனத்திலும் ஆகிற செலவுகளில், உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்களைப் பட்டியலிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே அறிவிப்பு கொடுங்கள். மற்றவர்கள் ஒத்துழைப்பார்களோ மாட்டார்களோ என்ற தயக்கத்தில், விட்டுப் பிடிப்பது இப்போதைய சூழலுக்கு நல்லதல்ல. எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் உண்டு என்பதால், அவசியமான மாற்றங்களை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

தொல்லைகளை மட்டுமின்றி தொலைநோக்கையும் சொல்லுங்கள்:

உலகமெங்கும் வீசுகிற பொருளாதாரப் பின்னடைவின் புயலுக்கு ஒடிந்து விழுகிற நிறுவனங்கள் மாற்றங்களை யோசிக்காததால் மண்ணைக் கவ்வுகின்றன. இன்றைய உலகின் கண்கூடான சவால்கள் கண்ணை மறைப்பதில் உங்கள் தொலைநோக்குப் பார்வையைத் தொலைத்துவிடாதீர்கள். நீங்களும், உங்கள் நிறுவனமும் எதை நோக்கி முன்னேறவேண்டும் என்பதை உடனிருப்பவர்களுக்குத் தெளிவு படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட வேகமாக அவர்கள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளைக் குவியுங்கள்:

கிரிக்கெட் ஆட்டத்தின்போது பவுண்டரிக்குப் பந்து பறக்காத நிலையில், பக்கவாட்டில் அடித்துவிட்டு ஓரிரு ரன்களாய் ஓடி எடுப்பது போல பெரிய முயற்சிகளுக்கு உரிய சூழ்நிலை இல்லாத போதும்கூட, சின்னச் சின்ன வெற்றிகளை சாதித்துக் காட்டுங்கள். அவை உங்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல…. உங்களுக்கே உற்சாகம் தந்து இன்னும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்குத் தூண்டும்.

மாற்றங்களை அளந்துபாருங்கள்:

நீங்கள் செய்யும் எந்த மாற்றத்திற்கும் ஓர் அளவுகோல் உண்டு. அதுதான் முன்னேற்றம். அதிகாலையில் எழுவது என்கிற மாற்றத்தை நீங்கள் செய்திருந்தால், ஆரோக்கியம் என்கிற முன்னேற்றத்தை அது காட்ட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் என்கிற மாற்றத்தை நிறுவனத்தில் கொண்டு வந்தால் கூடுதல் ஆதாயம் என்கிற முன்னேற்றத்தை அது ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாற்றத்திற்கும் உரிய அளவுகோல் முன்னேற்றம்தான். அதே நேரம், ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் உரிய கால அவகாசத்தை அனுமதியுங்கள். ஒரு மாற்றத்தை செய்துவிட்டு, அது பலன்தரத் தொடங்கும் முன்னமே பொறுமையிழந்து அதன்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றாதீர்கள்.

மாற்றங்கள் எப்போது தேவை?

உண்மையில் மாற்றங்கள் எப்போதும் தேவை. பழைய வாழ்க்கைமுறை புளித்துப்போய். உங்களுக்கே மூச்சு முட்டுகிறபோது மாற்றங்களை ஏற்படுத்துவீர்களென்றால், உங்களைப் பொறுத்தவரை மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். சூழல் காரணமாய், நிர்பந்தம் காரணமாய் செய்கிற மாற்றம். உடனடி விடுதலைக்கு உதவும். ஆனால் சூழல்களை முன்கூட்டியே கணித்து, பிறர் செய்ய முடியாத அல்லது செய்வது பற்றி நினைத்துப் பார்க்காத மாற்றங்களை உருவாக்குவதற்குத்தான் “புதுமை” என்று பெயர். புதுமையான செயல்படும் நோக்கம் இருப்பவர்களுக்கு மாற்றம் என்பது எப்போதோ நிகழ்வதல்ல. அது ஒரு தொடர் நிகழ்ச்சி. தொடர் வளர்ச்சி.

மாற்றங்களை, மாற்றம் வேண்டுமே என்பதற்காக செய்யாதீர்கள். திட்டமிட்ட வளர்ச்சியின் அங்கமாகவே மாற்றங்களை மலரச் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *