திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

– இயகோகோ சுப்பிரமணியம்

தேசத்துக்கான திரவியம்

மும்பை தாஜ் ஹோட்டல், ஓபராய் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் நிறைய இடங்களில் தீவிரவாதிகள் நுழைந்து அந்நிய நாட்டிலிருந்து நமது நாட்டுக்கு விருந்தினராக வந்தவர்களையும், நமது நாட்டினரையும் சுட்டுக்கொன்று நமது நாட்டுப் பாதுகாப்பை நகைப்புக்கிடமாகக் காட்டி வெறித்தனமாகப் புகுந்து விளையாடி

இருக்கின்றார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்தக் கேவலமானவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிய போலீஸ், மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையினருக்கு நன்றியும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் கண்ணீரோடு செலுத்தும்போது தொழிற்சாலைகளையும், வணிகத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் இது எப்படியெல்லாம் பாதிக்கின்றது என்பதை நாம் பார்க்கவேண்டும்.

ஒரு பாதுகாப்பற்ற தன்மை உருவாகும்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்வதைத் தவிர்க்க ஆரம்பிக்கும். நான் சொல்வது பங்குச் சந்தை போன்ற சூதாட்ட முதலீடுகளைப் பற்றி அல்ல. தொழிற்சாலைகள், கணினி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட முதலீடுகள் – இவை வேறு நாடுகளுக்கு இடம் பெயரலாம். இதுதவிர, சுற்றுலாப் பயணிகள் வருவது மிகவும் பாதிக்கப்பட்டு அது சம்பந்தப்பட்ட வணிகம், முதலீடுகள் இழப்பு ஏற்படும். உள் நாட்டில் உள்ள மக்களுக்கும்கூட ஆழ்மனத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை உண்டாகும்போது எல்லாவகையிலும் மனதளவில் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

சாதாரணமாகவே வெளிநாடு செல்லும்போது, அங்குள்ளவர்கள் சோதனையிடும் முறை, அங்குள்ள பாதுகாப்பு அமைப்புகள், அங்குள்ள காவல்துறை, இராணுவம் போன்றவற்றில் பணியாற்றுபவர்களின் தொழில் ஈடுபாடு, கண்டிப்பு, கண்ணியம் போன்றவை யாரையுமே வியக்கவைக்கும். அவர்களிடம் உள்ள நவீனக் கருவிகள், துப்பாக்கிகள், தொடர்புச் சாதனங்கள், தயார் நிலையில் அவர்கள் நிற்கும் நிலை – நமது மனதில் அவர்களுக்குப் பாராட்டுதலைத் தெரிவிக்கும் நேரத்தில் ஒருவிதமான அச்சத்தையும் ஏற்படுத்தும்.

நமது நாட்டு விமானநிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களும் சரி, அதிகாரிகளும் சரி – ஆபத்துக்கால உதவிக்குத் தயாரான நிலையில் இல்லாமல் “காமா, சோமா” வென்று இருப்பதைப் பல சமயம் பார்ப்பதுண்டு. சில விதிவிலக்குகளும் உண்டு.

ஷேவிங் செய்யாத முகம், அழுக்கான உடை, காலில் “ஷு” அணியாமல் செருப்போடு இருப்பது. பயணிகள் அமரும் இடங்களில் தூங்குவது, பயணிகளிடம் பார்வையில் கடுமையும், அலட்சியம் காட்டுவது – என்பது பெருவாரியாக நடக்கின்ற ஒன்று. அதற்கு இவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இவர்களுக்கு இருக்கின்ற உண்மையான கஷ்டங்களை, மேலே உள்ளவர்கள் உணராமல் இருப்பது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளை விடுங்கள்; பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் மெத்தனம்தான் இந்த அவல நிலைக்குக் காரணம். திரைகடலோடித் திரவியம் தேடச் செல்பவர்கள் வெளிநாடுகளிலுள்ள நல்ல சுற்றுச் சூழல், ஆலைப்பாதுகாப்பு, சுகாதாரம், நேரம் தவறாமை, போன்ற நல்ல விஷயங்களைப் பார்த்துவந்து அதைத் தங்கள் ஆலைகளிலும், பணி செய்யும் இடங்களிலும், வீடுகளிலும் இயன்றவரை முயன்று நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால், எல்லாச் சிறப்பும், அதிகாரமும் வாய்ந்த அரசு இயந்திரம் மட்டும், “தண்ணீரில்லாத் தீயணைப்பு வண்டி மாதிரி” ஏன் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளவில்லை.

அதிகாரிகளும், மோசமான அரசியல்வாதிகளைப் போலவே, சாதி, மதம், ஒதுக்கீடு என்ற வட்டத்துக்குள் வந்து, சுயநலத்தோடும், யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடும், கவைக்குதவாத காலாவதியான சட்டங்களை இன்றும் நடைமுறைப்படுத்திக்கொண்டு இருப்பதால் வந்த வினைதான் இவை. இவை தவிர, மற்ற நாடுகளில் நமது தொழில் தொடர்புகளையும், நாட்டின் கலைகலாச்சாரத்தையும் உருவாக்கி நமது நாட்டின் பெருமையை வெளியே தேசபக்தியோடு காட்டவேண்டிய தூதரகமோ, மாநில மொழி, சாதிமதம் போன்றவற்றில் சிக்கி, குறுகிய கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகுவதே கூட, நமது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது அல்ல. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க மோகம், ஆங்கிலேய வழிக்கல்வி போன்றவற்றால் நமது மாநிலங்களே ஒன்றின் சிறப்பை மற்றொன்று உணர்ந்து கொள்ளாமல், ஏதோ அண்டை நாடுகள் போல நீருக்கும், வேலைக்கும் மோதிக் கொள்வதும், இதை மத்திய அரசு ஆட்சியைத் தக்க வைக்கும் சர்க்கஸ் கூடாரமாகப் பயன்படுத்துவதும் – இன்னொரு காரணம்.

நமது இளைஞர்களுக்கு, நமது நாட்டின் சரித்திரச் சிறப்புகளையும், ஆன்மீக அழகையும், மொழிகளின் பெருமைகளையும், தொழில் உயர்வையும், இந்த நாட்டு மேன்மக்களின் வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுக்காமல் கட்டாய ராணுவப் பயிற்சி இல்லாமல், தேசபக்தியற்று, வெறுப்புற்று வெளிநாட்டு அடிமைகளாக உருவாக்குவதும் ஒரு காரணம்.

இவையெல்லாம் மாறி நமக்கு நம்மீதே மதிப்பும், கர்வமும் வருமளவுக்கு நாம் உயர்ந்தே ஆகவேண்டிய சூழ்நிலை. மும்பையில் ஏற்பட்ட இந்த துரதிருஷ்டம் ஓரளவு நல்லது கூட செய்திருப்பதாகச் சொல்லலாம். நமது அடிமனதில் உறங்கிக்கொண்டிருக்கும் “தேச பக்தி”, நாம் ஒன்றுபட்டுச் செயல்படுவோம் என்ற உற்சாகம் – அனைத்தையும் மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது. இதைத் தொழில்முனைவோர்கள், சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த ஒரு தொழிலில் ஈடுபட்டு, வெளிநாட்டுத் தொடர்போடு செயல்படும்போதும், நமது கலாச்சாரம், பண்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்புக்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை வெளிநாட்டினருக்கு ஆனித்தரமாகத் தெரிவிப்பதோடு, நம்மோடு பணிபுரிபவர்களுக்கும் நமது உயர்ந்த பண்புகளைச் சிறப்புகளைச் சொல்லி நம்பிக்கையூட்ட வேண்டும்.

நாம் வெளிநாட்டில் கற்றுக்கொண்டு வந்த நல்லவைகளும், நமக்குத் தேவையில்லாத சமாச்சாரங்கள் அங்கு என்ன உண்டோ அதைப்பற்றியும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும், சகதொழில் புரிவோர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது நாட்டைப்பற்றிய விமரிசனங்கள் சரிதான், அதற்காக ஏதோ ஒன்றுமேயில்லாத நாடாகக் காட்டவேண்டிய அவசியமில்லை.

பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட சரிவு, மேற்கத்திய பொருளாதாரம் நமது நாட்டுக்குச் சரிப்பட்டு வராது. அது சம்பந்தப்பட்ட துறைகளில் மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்பதை உணரவேண்டும். நமது கலாச்சாரம் சார்ந்த சேமிப்புப் பொருளாதாரமே உயர்ந்தது. தேவையற்ற ஆடம்பர நுகர்வோர் கலாச்சாரம் ஆபத்து என்பதை எல்லா மட்டங்களிலும் உணரும்படி செய்யவேண்டும். எங்கள் நாடு பெரிய ஜனநாயக நாடு, அதில் நானும் ஓர் அங்கம். இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரனாக ஆகவேண்டும் என்பதல்ல எனது குறிக்கோள். ஆனால் அதன் சட்ட திட்டங்களைக் கடைப்பிடித்து, நல்ல குடிமகனாக, எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் சிறப்புடையவனாக இருப்பேன் என்ற லட்சியத்தை இளம் இதயங்களிலே விதைக்க வேண்டும்.

கல்விக்கூடங்கள் ஒன்றும் அடிமைப்பணி செய்து பணம் சம்பாதிக்கும் மனித இயந்திரங்களை உருவாக்கும் கூடம் அல்ல; வாழையடி வாழையாகப் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக, நல்ல ஆன்மிகத்தையும், குடும்பம் மற்றும் சமுதாயங்களைப் பேணிக் காப்பதிலும், வன்முறையற்ற வாழ்க்கை நெறிகளைக் கற்றுத் தருவதிலும், மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவனின் திறமையை வகுக்காமல், மதிப்புள்ள வகையில் அவன் “மனிதனாக” உருவாகுவதற்கான சிறப்புகளைச் சொல்லிக்கொடுத்து, பெற்றவரை என்றும் போற்றிப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவனாக ஆக்கும் சமுதாய சிந்தனைக்கூடமாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

நாம் செய்யும் எந்தச் செயலும், நமது குடும்பத்துக்கோ, நமது நாட்டுக்கோ பெருமை தராது, நமது குழந்தைச் செல்வங்களுக்குச் சிறப்புச் சேர்க்காது, பெற்றோர்கள் அதை அங்கீகரிக்க மாட்டார்கள், சமுதாயத்தில் அது தலைக்குனிவை ஏற்படுத்தும் – என்று தெரிந்தால், தெளிவாக அப்படிப்பட்ட செயல்களையோ, தொழில்களையோ செய்யாமல் இருக்கவேண்டும் என்ற உறுதியை நாம் கடைப்பிடிப்பதோடு, நம்மைச் சேர்ந்தவர்களையும் வலியுறுத்திக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும்.

இந்த நாட்டில் சாதி, மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து நாட்டுக்குச் சேவை செய்யும் துறைகள் இரண்டே இரண்டுதான்.

ஒன்று இராணுவம். அதன் அடிப்படை நாட்டுப்பற்று மட்டுமல்ல. அது அமைக்கப்பட்ட விதம், வளர்க்கப்பட்ட விதம், பாதுகாக்கப்பட்டு வரும் விதம். அதனால்தான் எந்த இழப்பும் இந்த நாட்டை அடையாமல், எல்லைகளோடு, சிறு சிறு சலசலப்புக்களோடு நின்றுவிடுகின்றது.

இராணுவம், அந்நியர்களது தளவாடங்களை வாங்கலாம். அவர்கள் போர்க்கலங்களை வாங்கலாம். கப்பல்களை வாங்கலாம். அங்கு பணிபுரியும் அனைவரும் தங்களது சம்பளத்தில் தங்களது குடும்பங்கள் வாழ்வதற்காகப் பணிபுரியலாம். ஆனால், அடிப்படையில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் இந்த நாட்டுக்காக, இந்த மண்ணுக்காக, இதன் இறைத்தன்மையைக் காப்பதற்காக, இந்தச் சமுதாயத்துக்காக, இந்திய மக்களுக்காக.

இரண்டாவது தொழில், வணிகம் செய்பவர்கள்.

அடிப்படையில் தாங்களும், தங்கள் குடும்பங்களும் வாழ்வதற்குத்தான் என்றாலும் இனம், மொழி, சாதிமத பேதங்களைக் கடந்துதான் தொழில் செய்கின்றனர். அந்நியத் தொழில் நுட்பங்களைக் கொண்டு வரலாம். அந்நியர் இயந்திரங்களை வாங்கலாம். அந்நியர்களோடு அவர்கள் மொழிபேசி உரையாடலாம். ஆனால், அவர்களது கலாச்சாரங்களை தேவையற்ற தாக்கங்களை, சிந்தனைகளை இங்கே கொண்டு வராமல், தொழில் முனைவோரது தொழிலும், ஈட்டும் பணமும் இந்த நாட்டுக்காக, இந்த மண்ணுக்காக, இதன் இறைத்தன்மையைக் காப்பதற்காக, இந்தச் சமுதாயத்துக்காக, இந்திய மக்களுக்காகப் பயன்படவேண்டும். இதை எதிர்கால சமுதாயத்துக்குத் தெரியப்படுத்தி, அந்தப்பாதையில் அவர்கள் பயணிக்கும்படி கல்விமுறைகளை மாற்றியமைக்கத் தூண்டு கோலாக நாம் விளங்கவேண்டும்.

“திரைகடலோடித் திரவியம் தேடுவது” – தனி ஒருவனுக்கல்ல. இந்த மகத்தான இந்திய தேசத்துக்குத்தான்.

(அடுத்த இதழில் நிறைவுறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *