– தி.க. சந்திரசேகரன்
முதுமைக்கும் அழகிருக்கிறது
மக்கள் பழங்களை விரும்புகிறார்கள்; ஆனால் மரங்களை நேசிப்பதில்லை!”
கர்ட் ஹேங்ஸ் என்ற தன்முனைப்பு சிந்தனையாளரின் இந்த அறிவுமொழி, ஒரு பாதை போடுவதற்காக அல்ல! மாறாக நம் சிந்தனையைத் தூண்டுவதற்காக; நம்முடைய மனப்போக்கை மாற்றுவதற்காக! இரண்டும் நிகழ்ந்தால் நாம் செல்லும் பாதை நிச்சயமாக ஒரு மாறுபட்ட, மனம் நெகிழ்ச்சியான பாதையாக அமையும்!
மக்கள் பழங்களை மட்டுமே நேசிக்கிறார்கள், ஆனால் ஏனோ தெரியவில்லை, மரங்களை நேசிப்பதில்லை! இந்தக் கருத்தை விளக்குவதற்காக ஓர் உருவகக் கதை…… உருக்கமான கதை!
மிகவும் இருண்ட ஒரு பகுதி. அங்கே சில மனிதப் பிறவிகள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். கிடைப்பதை உண்டு, இருந்த இடத்திலே காலம் கழிப்பவர்கள். வேறு எங்கு செல்லவும் பயம். அப்படியே சென்றாலும் கும்பலாகக் கை கோர்த்தபடி செல்வார்கள். கூச்சல் போட்டு பேசிக்கொள்வார்கள். அவர்கள் கண்களிருந்தும் குருடர்கள்.
ஒருநாள் ஒரு விசித்திரமான, புத்திசாலித்தனமான, பேசத் தெரிந்த, மனிதரைப் போல் காட்சியளித்த ஒரு பிராணி அங்கு வந்தது. அதற்குப் பதினாறு கைகள். தெறித்து விழுவது போன்ற கண்கள்; கரகரப்பான குரல்.
அந்தப் பிராணி அவர்களிடம் பேசியது. நிறைய அறிவுரைகள் கூறியது; புதிய வழிமுறைகளைக் கூறி வழிகாட்டியது! சில மாதங்களிலேயே, அவர்கள் தனித்தனியாக நடமாடக் கற்றுக்கொண்டார்கள். தங்களுடைய உணவை வேட்டையாடத் தெரிந்து கொண்டார்கள். உணவை வேறு விதமாக சமைக்கக் கற்றுக் கொண்டார்கள்.
ஒரே இடத்தில் இருந்தவர்கள் நகர்ந்து வீடுகட்ட ஆரம்பித்தார்கள்.
படிப்படியாகப் பலமாற்றங்கள்! எல்லோரும் அந்த விசித்திரமான பிராணியை புகழ்ந்து தள்ளினார்கள்.
“வாழ்வளிக்க வந்த தெய்வம்” என்றெல்லாம் வாழ்த்தினர்.
ஒரு நாள் அந்த விசித்திரப் பிராணி, அனைவரையும் திரட்டி ஒரு செய்தியை அறிவித்தது.
“இனிய நண்பர்களே, என் பின்னால் வாருங்கள். நான் உங்களுக்காக செய்து வைத்திருக்கிற ஓர்
அற்புதமான பொருளைக் காட்டப் போகிறேன்!”
மக்கள் கூட்டம் இருட்டில் அந்தப் பிராணியைப் பின் தொடர்ந்தது.
திடீரென்று அக்கூட்டம் தடுமாறியது; காரணம் அவர்கள் இதுவரை பார்க்காத “விளக்கு” அங்கே இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் கண்கூசித் தடுமாறிய மக்கள் சிறிது நேரம் கழிந்தபின் ஒருவரையொருவர் பார்க்க ஆரம்பித்தனர். உருவங்கள் பளிச்செனத் தெரிந்தன.
“ஆஹா, என்ன அழகு! என்ன கம்பீரம்!” என்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்; பாராட்டினர்!
விளக்கை தயாரித்து வழங்கிய அந்தப் பிராணி பெருமிதத்துடன், மகிழ்ச்சியாக அந்தக் காட்சிகளைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்தது.
கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் உரத்தக் குரலில் கூவினான், “நமக்கெல்லாம் ஒளியைக் கொடுத்த அந்த தெய்வம் எங்கே? உங்களைக் காணவேண்டும்! வாங்க!”
“இதோ வருகிறேன்! நான்தான் உங்களோடு இத்தனை மாதங்கள் இருந்து வழிகாட்டினேன்! இந்த விளக்கு நான் கண்டுபிடித்தது! எப்படி இருக்கிறது? உங்களுக்கு மகிழ்ச்சியா?”
அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த அந்தப் பிராணியை அத்தனைபேரும் வியப்போடு பார்த்தார்கள்.
அவர்களுடைய முகத்திலிருந்து வியப்பு மறைந்து அருவருப்பு தோன்றியது.
“சே! என்ன கோரம்! பார்க்கவே சகிக்கவில்லை!”
“பதினாறு கைகளா? அசிங்கம்!”
“இவ்வளவு கேவலமான ஒரு பிராணியையா நாமெல்லாம் தெய்வம், வழிகாட்டி என்றெல்லாம் புகழ்ந்தோம்!”
“அடித்து துரத்துங்கப்பா! அதுபக்கத்திலிருந்தா நமக்குத்தான் அவமானம்!”
கற்கள் பறந்தன; கட்டைகள் பிராணியைத் தாக்கின! குருதி வடிய அந்த விசித்திரப் பிராணி வேகமாக வேறு ஒரு இருட்டுப் பகுதிக்கு ஓடியது!
“போகட்டும் விடுங்கப்பா! இதற்கு மேலே இங்கே வராது!”
கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது!
விசித்திரமான பிராணி, தனியாக உட்கார்ந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.
“சே! என்ன நன்றிகெட்ட உலகம்! இவர்களுக்கு என்னவெல்லாம் கற்றுக்கொடுத்தேன்! என்னவெல்லாம் செய்தேன்! எத்தனை மாற்றங்களை உருவாக்கிக் கொடுத்தேன்! விளக்கைக் கொடுத்தேன்! ஆனால் அதற்கெல்லாம் பரிசு, இத்தனை அடி உதைகளா?” வேதனையில் வெம்பியது அந்தப் பிராணி!
அங்கே ஆனந்தத் தாண்டவம் தலைவிரித்தாடியது! ஆனால் விளக்கின் வெளிச்சம் மெதுவாகக் குறையத் தொடங்கியது. ஒருவரை யொருவர் பார்த்து விழித்தனர். மேலும் மேலும் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்தது. பயத்தால் கதறினார்கள்!” என்ன செய்வது?” என்று தெரியவில்லை.
விளக்கு அணைந்தது; முற்றிலும் இருள் கவிழ்ந்தது. அணையும் முன் ஒருவரை ஒருவர் கடைசியாகப் பார்த்துக் கொண்டனர். அதுதான் அவர்களுடைய கடைசிப் பார்வை!
இந்த உருவகக்கதை, எத்தனையோ குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி.
பெற்றவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, பட்டினியிருந்து, போராடி பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள். வளர்ந்து, கை நிறைய சம்பாதித்துக்கொண்டு, திருமணமானபின், பெற்றவர்கள் பிள்ளைகளின் கண்களுக்கு மிகவும் வேண்டாத அருவருப்பான, உருவங்கள். அவர்கள் அளிக்கின்ற தொல்லையில் மனம் அடிபட்ட நிலையில், பெற்றோர்கள் எங்கோ ஒரு மூலையில்!
வளர்த்துவிட்ட மரங்களுக்கு மரியாதை இல்லை; ஆனால் பழங்கள் ஜொலிக்கின்றன!
நாம் நம்முடைய பெற்றோர்களை, தாத்தா, பாட்டியினரை இன்னும் மதிக்கின்றோமா?
ஆயிரம் இடர்ப்பாடுகளுக்கிடையில் நம்மை வளர்த்து உருவாக்கிய அவர்களை நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறோமா?
“பழங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால், காய்களின் மீது தண்ணீர் ஊற்றாதீர்கள். வேர்களின் மீது நீரூற்றுங்கள்” என்று கூறுவார்கள்.
பழங்களுக்காகக் காட்டுகின்ற அக்கறையில், ஒரு பகுதியை வேர்களுக்குக் காட்டினால் என்ன?
ஏனோ தெரியவில்லை, இது உலகத்தின் சாபக்கேடாக அமைந்துவிட்டது. நல்லது செய்யும் மாமனிதர்களை இவ்வுலகம் வாழ வைப்பதில்லை;
ஆபிரகாம் லிங்கன், அண்ணல் காந்தியடிகள், ஜான்.எப்.கென்னடி ஆகியோருக்கு இந்த அவனி அளித்த அற்புதமான பரிசு துப்பாக்கிக் குண்டுகள்.
சாக்ரடீசுக்கு நஞ்சு; இயேசு பிரானுக்கு சிலுவை! அன்றைய, இன்றைய அரசியல் வரலாறுகள் எண்ணிறந்த சான்றுகளை எடுத்துக்காட்டாக முன் வைக்கும்!
* ஒரு கட்சியை உருவாக்க ஆரம்பகாலத்தில், வியர்வையும், குருதியும் சிந்திய தொண்டர்கள் இன்று ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாமல் திண்டாடுவதை நீங்கள் பார்த்ததில்லையா?
* ஒரு தொழிற்சாலை தொடங்கிய காலத்தில் 24 மணிநேரமும், அதே சிந்தனையோடு உழைத்த ஆரம்ப காலத் தொழிலாளர்களுள், எத்தனை பேர் இன்று விதியை நொந்தபடி, “என்றைக்கு வேலையை விட்டு வெளியேறுவோமோ?” என்ற அச்சத்தில் உழைக்கிறார்கள் என்று நாம் அறிய மாட்டோமா?
* ஆரம்பப் பள்ளியிலிருந்து பல்வேறு நிலைகளில் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை எத்தனை இளைஞர்கள் அலட்சியப் பார்வை பார்த்தபடி நடக்கிறார்கள்” என்று நமக்குத் தெரியாதா?
வேர்களையும், மரங்களையும் அலட்சியப்படுத்தும் இந்த அவலநிலையை, அன்றாடம் காணும்போதெல்லாம் நெஞ்சம் எவ்வளவு வேதனையை அனுபவிக்கிறது!
” நம் பெற்றோர்களை நாம் அலட்சியப்படுத்தினால் – வரலாறு திரும்பும் – நமக்கும் அதே நிலைமைதான்” என்று ஏன் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
இந்த மனப்பான்மையில் எத்தனைக் கலாச்சார சீரழிவுகள்.
ஆங்கிலத்தின் ஆதிக்கம் வந்தபிறகு, அன்னைத் தமிழை எவ்வளவு கொச்சைப் படுத்துகிறோம்?
புதிய நாகரிகங்கள் வலம் வர ஆரம்பித்தவுடன் நம்முடைய கலாச்சாரமும் பண்பாடுகளும் எவ்வளவு வேகமாக மறைய ஆரம்பித்துவிட்டன!
இன்றைய வேகமான, மாறிவரும் உலகத்தில் “மாற்றங்கள்” நிச்சயமாகத் தேவைதான்!
ஆனால் அதற்காக பழமையை ஒதுக்கவேண்டும், அவமதிக்க வேண்டுமென்ற அவசியமில்லையே!
முதுமைக்கும் அழகிருக்கிறது!
பழமையிலும் நிறைய சிறப்புகளிருக்கின்றன!
முன்னோர்கள் கூறிய செய்திகளில் ஏராளமான நற்செய்திகள் மண்டிக் கிடக்கின்றன!
உருவாக்கியவர்களுடைய தியாகங்கள் சொல்லிலடங்காதவை!
நாம் நிற்கின்ற கோபுர உச்சிக்குக் கீழே, எத்துணையோ பேரின் உழைப்புகளும், ஏக்கங்களும்
பெருமூச்சுகளும், கனவுகளும் மறைந்திருக்கின்றன.
அவர்களை நன்றியோடு எண்ணிப் பார்ப்போமே? பழங்களைப் பறிக்குமுன், மரத்தை வணங்கிவிட்டு
வேருக்குத் தண்ணீர் ஊற்றலாமே!
(வளரும்)
Leave a Reply