உழைக்கத் தெரிந்த உள்ளம்

– சீராளன்

உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள்.

கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், கோவையில் சில உறவினர்கள் மூலம் தன் மகனை நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்த்தார். முதல் நாள் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவர் சொன்ன அறிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வேலை நேரம் சாயங்காலம் ஐந்தரை மணிவரைக்கும்தான். நேரம் ஆனதுமே மேனேஜர் பார்க்கிற மாதிரி, வாட்சை ஒரு தடவை பார்த்துட்டு எழுந்து வந்திடு. கூடுதலா உட்கார்ந்து வேலைபார்த்தா அப்புறம் அதையே பழக்கமாக்கீடுவாங்க”.

வேலை நேரத்திற்குள் எப்படி திறம்பட உழைக்க வேண்டும், நல்ல பேரெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை.

கடினமான உழைப்பு என்பது நாம் – நமது வளர்ச்சிக்காக நாமே விரும்பி மேற்கொள்வது. பணியாளராய் இருந்து கூடுதலாக உழைப்பது; பயிற்சிக்கான வழியே தவிர, அடுத்தவர்களின் ஆதாயத்திற்காக நம் ஆற்றலை அடகு வைப்பதாய் அர்த்தமல்ல. பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் வேளையில் இந்தப் பயிற்சி பெரிய அளவில் கைகொடுக்கும்.

பல்லாண்டு காலங்களுக்கு ஒவ்வொரு நாளும் பில்கேட்ஸ் 20 மணி நேரம் உழைத்தார் என்கிறார்கள். கடின உழைப்பு, எங்கு போனாலும் வேலை நிச்சயம் என்கிற உத்திரவாதத்தைத் தருகிறது. உங்கள் துறையின் உச்சம் நோக்கி உங்களை நகர்த்துகிறது. உங்கள் போட்டியாளரை விடவும் பலமடங்கு உங்களை முன்னேற்றுகிறது.

“வேலையில் என் சக்தியை எல்லை தாண்டி நான் வீணடிக்க வேண்டுமா” என்று சிலர் கேட்பார்கள். வேலையைத் தாண்டி அர்த்தமுள்ள பணி உங்கள் வாழ்வில் இருந்தால் அப்படி வீணடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், எதை நோக்கிச் செல்ல விரும்புகிறீர்களோ அதற்கான வழி உழைப்பு தான் என்பதை உணர்கிறபோது உங்களால் வேலையிலும், வேலையைத் தாண்டிய வேறு பணிகளிலும் உற்சாகத்துடன் ஈடுபட முடிகிறது.

“வேலைபார்ப்பது அவ்வளவு சுகமான விஷயமல்ல. ஆனால் சும்மா இருப்பதை விடவும் வேலை செய்வதில் வரும் சிரமம் சுகமானது” என்கிறார் ஒருவர். உண்மைதான்! சிரமம் பார்க்காமல் உழைப்பவர்கள் சிகரம் தொடுகிறார்கள்.

சோர்வு, சோம்பல், தள்ளிப்போடும் குணம் ஆகிய தடைகளைத் தாண்டி, கடின உழைப்பைக் கைக்கொண்டு சந்தோஷமாய் செயல்பட சில வழிமுறைகள் இதோ:

– கடினமான வேலை ஒன்றை செய்யத் தொடங்கும் முன்பாக, அதைச் செய்து முடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதையும் அதனால் கிடைக்கக்கூடிய பயன்களையும் கற்பனை செய்யுங்கள். அந்த உற்சாகத்தை உள்வாங்கிக் கொண்டு வேலையைத் தொடங்குங்கள்.

– ஒரு பெரிய வேலையை சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்

– வேலையைத் தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட நேரம் வரை தொடர்ந்து செய்யுங்கள். உதாரணமாக, அரை மணி நேரம் நீங்கள் உழைக்க முடிவு செய்தால் அந்த அரை மணிநேரம் தொலைபேசி அழைப்பு, வேடிக்கை பார்த்தல், வீண் அரட்டையில் ஈடுபடுதல் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

– அந்த வேலைக்கான உபகரணங்கள் என்னென்ன உண்டோ, அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். தொடங்கிய பிறகு ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.

– வேலையை செய்து முடிப்பதற்கான நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். முடிவு செய்த நேரத்திற்கு முன்னதாகவே செய்து முடியுங்கள்.

– எந்த ஒன்றையும் புதிதாகத் தொடங்க வேண்டிய நேரத்தில் மனது தள்ளிப் போடுவது இயற்கை. எப்படியாவது தொடங்கிவிடுங்கள். தொடங்கிய பின்னர் தொடர்வது எளிதாக இருக்கும்.

– வேலையின் ஒவ்வோர் அம்சத்தையும் உங்கள் மனதுக்குள் ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். அதன்படி வேலை பார்ப்பது எதிர்பார்த்ததைவிட எளிதாக இருக்கும்.

– நீங்கள் நினைத்ததுபோல் அந்த வேலை முழுமை பெறுகிறதா என்பதில் கவனமாக இருங்கள். மற்றவர்களின் – அல்லது – உடன் உழைப்பவர்களின் விருப்பங்களுக்கேற்ப சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

– ஒவ்வொரு நாளும், வேலைக்கான நேரத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி அவற்றைத் துல்லியமாக நிறைவேற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *