அது வேறு இது வேறு

இப்படி சில விஷயங்களைப் பிரித்துப் பார்ப்பவரா நீங்கள்? இருங்கள் – கொஞ்சம் பேசலாம். உங்களை யாராவது புதியவருக்கு அறிமுகம் செய்கிறபோது என்னென்ன விவரங்கள் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்….. இன்னாரின் வாரிசு! இன்னாரின் வாழ்க்கைத் துணைவர்! இன்ன வேலை செய்கிறார்! இந்த விவரங்களில் உங்கள் தனி வாழ்க்கை – பொதுவாழ்க்கை – இரண்டுமே அடக்கம்.

தனிப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனமும், வேலை விஷயங்களில் குறைவான கவனமும் செலுத்தும் சிலரை அணுகிக் காரணம் கேட்டால், அவர்கள் சொல்கிற பதில் – “அது வேறு! இது வேறு!” என்பது.

உண்மையில், இவையெல்லாம் கலந்தவர்தான் நீங்கள். நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில் பெரும் பகுதியை வேலையில்தான் செலவிடுகிறீர்கள். “அது வேறு – இது வேறு” என்பவர்கள் சொல்ல வருவதென்ன……..? “வேலை வயிற்றுக்கு, வீடு மனதுக்கு” இதுதான் அந்தப் பசப்பலான வாக்கியத்தின் பச்சையான அர்த்தம்.

எனவே, எதில் ஈடுபடுகிறீர்களோ அந்த நேரத்தில் அதற்கு மட்டும் முதலிடம் கொடுத்தால் இது முக்கியம் – அது முக்கியமில்லை என்பது போன்ற எண்ணங்களுக்கு இடம் வராது.

வேலைபார்க்கும் இடத்தில் ஒருவர் தன்னுடைய பணியைச் செய்வதில் தலை சிறந்தவராக இருப்பார். அவருக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட விரோதம் இருக்கும். அவரைப்பற்றிய கருத்தை உங்களிடம் கேட்கிறபோது வேண்டுமானால் “அது வேறு – இது வேறு” என்ற மனநிலைக்கு வரலாம். அதாவது உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விரோதங்கள் தகுதியானவருக்கு உரிய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கக்கூடாது.

அமெரிக்க ராணுவத்தில் ஜெனரல் வைட்டிங், ஜெனரல் ராபர்ட் லீ என்று இருவர், எதிரும் புதிருமாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வைட்டிங், ராணுவத்தினர் மத்தியில் ராபர்ட் லீ குறித்து மோசமான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். ஒருமுறை இராணுவத் தலைமை லீ-யிடம் வைட்டிங் குறித்துக் கருத்துக் கேட்டபோது, இராணுவத்தில் வைட்டிங் எவ்வளவு சிறந்த வீரர், தலைசிறந்த நிர்வாகி என்றெல்லாம் ராபர்ட் லீ வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.

இரண்டு தளபதிகளுக்கு இடையிலான பனிப்போர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் வியந்து போய் விசாரித்தபோது ராபர்ட் லீ அமைதியாகச் சொன்னார் – “தலைமை என்னிடம் கேட்டது, தளபதி வைட்டிங் குறித்த என் அபிப்பிராயங்களைத்தான். என் மேல் அவருக்கிருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்” என்று.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, தகுதிகளை நடுநிலையாக எடைபோடும்போது “அது வேறு, இது வேறு” என்று சொல்வது வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
தனி வாழ்க்கைக்குத் தளம் அமைத்துக் கொடுக்கும் பணிவாழ்க்கையை அலட்சியமாய் நடத்திவிட்டு, “அது வேறு, இது வேறு” என்று சொல்வது வளர்ச்சிக்குத் தடையையே ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *