இயக்க வைப்போம் வியக்கவைப்போம்

சுடும் உண்மையாய் ஒரு “சுளீர்” கட்டுரை

– கே.ஆர்.நல்லுசாமி

இளைஞர்களே! குறிப்பாக கிராமத்து இளைஞர்களே! எங்கே உங்களுக்குத் தடை? உங்கள் வீட்டிலா? உங்கள் நண்பர்களிடத்திலா? உறவினர்களிடத்திலா? நிச்சயமாக உனது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது இந்த மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கும்.

இவைகளைக் கடந்து வாழ்வில் வளம் பெறவேண்டும். இதுதானே அனைவரின் கனவு, அதை நிறைவேற்றுவோம், நிறைவடைவோம். இது பற்றிக் கொஞ்சம் வெளிப்படையாக விவாதிப்போமா:
இளைஞர்கள் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து பணியாற்றுவார்கள் அல்லது பெற்றோர்கள் செய்து கொண்டிருக்கிற தொழிலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், திருப்தியாக இருக்கிறார்களா என்றால் இல்லை, ஏன்? பெற்றோரின் வளர்ப்பும் பிள்ளையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் நல்லவனா, கெட்டவனா என்று பாôக்கின்ற தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
படிப்பு முடித்த ஒரு ஏழை இளைஞன் இன்றைய தேவைக்கு தகுந்த கல்வியை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடன் நகரத்திற்கு சென்று கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதும், லைப்ரரிக்குச் சென்று நல்ல புத்தகங்களைப் படிப்பதும், தான் படித்த நியூஸ் பேப்பரில் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து அதற்கு மனு செய்வதும் இயல்பாக நடப்பது. இளைஞனைப் பார்த்து விவசாய குடும்பத்தில் பிறந்து படித்து முடித்து இருந்த இன்னோர் இளைஞன், அவனோடு நட்பு கொள்வான். அவனின் நோக்கம் தெரியாத பெற்றோர்கள் அவனோடு சேராதே, அவன் தினமும் நகரத்திற்கு சென்று ஊர் சுற்றிவிட்டு வருகிறான். ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றுகிறான். அவனுக்கு எந்த வேலையும் இல்லை. எந்தத் தொழிலும் இல்லை. நமக்கு விவசாயம், ஆடு, மாடு, ஆகியவை உள்ளன. இவைகளை கவனித்தாலே போதும். அவனுக்கு செக்குமாடு போலவே இவர்களை சுற்றி வருவதே வாழ்க்கை என்று பழக்கப்படுத்தி விட்டார்கள்.
யானை தன்பலம் அறியாமல் சிறிய சங்கிலியைக் காலில் கட்டியவுடன் அதே இடத்தில் நின்று விடுவது போல இவனும் இவன் பலம் அறியாமல் இருந்துவிடுகிறான்.
வெளி உலகமே தெரியாத வாழ்க்கையை பெற்றோர்கள் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். மழை இல்லை, தண்ணீர் இல்லை, ஆடு மாடுகள் வளர்ப்பதுகூட முடியவில்லை என்ற நிலை வரும்போதுதான் இவர்களை வறுமை விரட்ட ஆரம்பிக்கும்போதுதான் இவர்கள் ஒரு பகட்டான ஏழை என்பது புரியும்.
அதன் பின் தனது நிலத்தை விற்று நாமும் வியாபாரம் துவங்கவேண்டும் என்ற ஆவலில் நண்பர்களுடன் சேர்ந்து நகரத்தில் தொழில் ஆரம்பிக்கலாம் என்று முதலீடு செய்வது. எந்த அனுபவமும் இல்லாத தனது மகனை அந்தத் தொழிலில் ஈடுபட வைப்பது, தொழிலில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை எப்படி சமாளிப்பது என்பதே அறியாமல் மேலும் மேலும் தொழிலுக்கு தேவையான முதலீடுகளை தெரிந்தவர்களிடமிருந்து வாங்கி முதலீடு செய்வது, இவர்களின் வெகுளித்தனத்தை அறிந்த மேலாண்மை பங்குதாரர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேவையில்லா செலவுகளை செய்வது அல்லது தனக்கு தேவையான செலவுகளை செய்து கொள்வது இது தொடரும் போது வளர்ச்சி ஏற்படாமலே வீழ்ச்சி ஏற்படுகிறது.
சிறிது காலத்திற்குப் பிறகு பொருளாதார நிலை தெரிந்து பின் வரும் சிக்கல்களில் முதல் பலி ஆவது இந்த விபரம் அறியாத இளைஞன்தான். அதன் பிறகும் வீழ்ச்சியிலிருந்து மீள்வது பற்றியும் மீண்டும் வியாபாரத்தை விரிவுபடுத்துவது பற்றிய முயற்சியில் ஈடுபடாமல், மேலாண்மை பங்குதாரர் மீது பலி போட்டுவிட்டு, நகர வாழ்க்கை நல்ல வாழ்க்கை என்று வந்ததில் அது நரக வாழ்க்கை ஆகிவிட்டது என்று தவறான எண்ணத்துடன் நகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு நகர ஆரம்பித்து விடுகிறார்கள்.
இது சரியில்லையே என்ன செய்ய வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுத்தருவதோடு வாழ்க்கைக் கல்விக்கான வழிமுறைகளையும் கற்றுத் தரவேண்டும். நம்மால் முடிந்ததை மட்டும் செய்வது வெற்றியாகாது, நம்மால் முடியாததையும் முயற்சி செய்து முன்னேற வேண்டும், என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும் அல்லது அந்த எண்ணம் உள்ளவர்களுடன் நமது உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
நேற்றைய படிப்பாளி இன்று படிப்பை நிறுத்திக் கொண்டால் நாளை அறியாதவன் ஆகிவிடுவான் என்பது போல, தொடர்ந்து புதிய சிந்தனையால் சிறந்தவைகளை தேடிக் கொண்டே இருக்கவேண்டும். இதுபோன்ற முயற்சியால் மற்றவர்கள் நமக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். அந்த நேரத்தின் போதுதான் அறிந்தவன் நகர வாழ்க்கைக்கு வந்து விட்டால் எங்கும் நகர முடியா வாழ்க்கை கிடைத்துவிடும்.
நாம் எப்படி இருந்தோம் என்பதை நினைக்காமல் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்பதை நினைத்து அதற்குத் தேவையானவை என்ன என்பதை தேட ஆரம்பித்தாலே நமக்குத் தெரியாதவைகளைக் கூட தெரிந்தவர்களை அமர்த்தி செயல்படமுடியும். உதாரணத்திற்கு ஹிந்தி தெரியாது, கம்ப்யூட்டர் தெரியாது, கார் ஓட்டத் தெரியாது. இதில் அனுபவமிக்கவர்கள் ஆயிரம் பேர் உண்டு. அவர்களை அமர்த்திக் கொள்வதோடு நமக்குத் தேவையானதில் எதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவைகளை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
இன்றைய நிலையில் இந்தியாவில் இளைஞர்கள் 100% இல்லை. ஆனால், இந்தியா 100 சதவீதம் இளைஞர்களை நம்பி இருக்கிறது.
“இளைஞர்களை இயக்க வைப்போம்” உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து வியக்க வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published.