வீட்டுக்குள் வெற்றி

கிருஷ்ண. வரதராஜன்

பெற்றோர்களுக்காக நாங்கள் நடத்தும் பயிற்சி நிகழ்ச்சிகளில், கேள்வி நேரத்தில், உங்கள் குழந்தைகளிடம் மாற்றவேண்டியவைகள் என்ன? என்று கேட்டால் பெற்றோர்கள் தரும் பட்டியல் முடிவே இல்லாததாகத்தான் இருக்கும்.

இதை எப்படி மாற்றுவது? அதை எப்படி மாற்றுவது? என்று எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டவுடன் நான் சொல்வது, “உங்களிடம் துவங்குங்கள்”.

மிஸ்டர். குமாரசாமி, ஜெராக்ஸ் எடுப்பதற்காக கடைக்கு சென்றார். தன் பயோ – டேட்டாவை ஜெராக்ஸ் எடுத்தவர் ஜெராக்ஸில் புரூப் பார்த்தார். அருகில் இருந்தவர் ஆச்சரியத்துடன் “என்ன செய்கிறீர்கள்?” என்றார். ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும். எனவே நீங்கள் புரூப் பார்க்க வேண்டியது ஜெராக்ஸை அல்ல ஒரிஜினலை.

குழந்தைகளை திருத்த வேண்டும் என்று நினைக்கிற எல்லோருக்கும் முதல் படிப்பினை இதுதான். குழந்தைகள் உங்கள் ஜெராக்ஸ். நீங்கள் ஒரிஜினல் எனில் எதில் புரூப் பார்ப்பீர்கள்.

படிக்கவே மாட்டேங்கிறான். எல்லாத்துக்கும் கோபப்படறான். யார்ட்டயும் பழக மாட்டேங்கிறான் என குழந்தைகளிடம் எதில் நீங்கள் மாற்றம் ஏற்படுத்த விரும்பினாலும் அந்த மாற்றத்தின் துவக்கப் புள்ளி பெற்றோர் களாகிய நீங்கள்தான்.

எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் என்ன மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்? அவன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் அவன் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்? என்று சதா சர்வ காலமும் யோசிக்கிறார்கள். அதற்கு முதலில் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்பதை உணர்வதில்லை.

இஸ்லாத்தில் ஒழு செய்வது பற்றிய குறிப்பொன்றில் இப்படி வரும், உங்கள் வலது கையால் இடது கையை சுத்தம் செய்யுங்கள். இடது கையால் வலது கையை சுத்தம் செய்யுங்கள். பிறகு இரண்டு கைகளாலும் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

இதில் இரண்டு கைகள் என்பது கணவனும் மனைவியும். முகம் என்பது குழந்தைகள். எனவே, உங்கள் குழந்தைகளை தூய்மைப்படுத்துவதற்கு முதலில் நீங்கள் ஒருவருக்கொருவர் தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், பெற்றோர்களிடம் உள்ள எந்த நல்ல குணம் உங்களிடம் உள்ளது? எதை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளீர்கள்? என்று கேட்போம். மாணவர்கள் சொல்லும் பதில்களை பெற்றோர்கள் பெருமை பொங்க கேட்பார்கள்.

பிறகு பெற்றோருக்கு என்று நடக்கும் தனி நிகழ்ச்சியில் உங்களிடம் உள்ள எந்த தவறான விஷயத்தை உங்கள் குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள் என்று கேட்போம். சங்கடத்தோடு பல பதில்கள் வரும். பெரும்பாலானவைகள் கோபத்தை பின்பற்றுகிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். அப்போது பெற்றோர்களுக்கே புரிந்திருக்கும். இப்பொழுது நம் குழந்தைகளிடம் தாய் தந்தை இருவரின் தன்மையும் இருக்கும்.

உங்கள் குழந்தையிடம் கோபப்படும் தன்மை இருந்தால் அது உங்களிடமிருந்துதான் தோன்றியிருக்கும். எனவே, அதை மாற்ற வேண்டுமென்றால் உங்களிடமிருந்து துவங்குங்கள். கோபம் தவறென்று நீங்கள் நினைத்தால் முதலில் நீங்கள் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள். விரைவில் குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள்.

துணி வாங்கி சட்டை தைப்பதற்காக டைலரிடம் கொடுக்கிறீர்கள். சட்டை உங்களுக்கு பொருத்தமான அளவில் இல்லை. யார் தவறு டைலரின் தவறா? துணியின் தவறா?

மரம் வாங்கி ஆசாரியிடம் தந்து மேஜை செய்யச் சொல்கிறீர்கள். மேஜை சரியாக வரவில்லை எனில் அது மரத்தின் குற்றமா? ஆசாரியின் குற்றமா?

அதுபோலத்தான் உங்கள் குழந்தைகள் இப்போது சரியாக இல்லை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

இப்பொழுது இருக்கும் நிலைக்கு நீங்கள்தான் பொறுப்பு என்கிறபோது மாற்றம் உங்களிடம்தானே வேண்டும்.

முதலில் உங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே உங்கள் வார்த்தைகள் கவனிக்கப்படும், கடைப்பிடிக்கப்படும். எனவே நம்மை மாற்றிக்கொண்டு நம் குழந்தைகளிடமும் மாற்றங்களை எப்படி கொண்டு வருவதென்று பார்ப்போம்.

குழந்தைகளுக்கு தவழ, நடக்க என்று எல்லாவற்றிற்கும் “தவழ்”, “எழுந்து நட” என்று கட்டளைகள் கொடுத்தீர்களா ஏன்? மற்றவர்கள் நடப்பதைப் பார்த்து உந்துதல் பெற்று அவர்களாக நடக்கக் கற்றுக் கொண்டார்கள் இல்லையா? அதுபோலத்தான் உங்களைப் பார்த்து அவர்கள் அடையும் உந்துதல்தான் அவர்களை வழிநடத்த வேண்டும்.

3 குழந்தைகள் தங்கள் அப்பாவை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள். முதல் பையன் சொன்னான் “எங்க அப்பா அம்பு மாதிரி 4 மணிக்கு ஆபிஸ் விட்டா 4.30 க்கு வீட்டிற்கு வந்துவிடுவார்”. இரண்டாவது பையன் இன்னும் பெருமையாக சொன்னான், “எங்க அப்பா 4 மணிக்கு ஆபிஸ் விட்டா 4.05க்கெல்லாம் வீட்டில் இருப்பாரு”. 3வது பையன் ரொம்ப பெருமையாக சொன்னான், “எங்க அப்பா 4 மணிக்கு ஆபிஸ் விட்டா 3.30க்கெல்லாம் வீட்டில இருப்பாரு”. இப்படி இருக்கிற அப்பா எதில் மாற்றம் ஏற்படுத்த முடியும்?

உங்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறதா என்று பாருங்கள். உங்களையே உங்களால் மாற்றமுடியவில்லை என்றால் மற்றவர்களை மாற்றமுடியுமா என்ன?

உங்கள் குழந்தைகள் எதை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள்.

உதாரணத்திற்கு ஒன்று.

பள்ளிகள் திறந்தாகி விட்டது. குழந்தைகளை படிக்க உட்கார வைப்பதே இனி பெரிய வேலையாக இருக்கும் பெற்றோர்களுக்கு. படிக்கிற விஷயத்தில் சுய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றத்தை அவர்களிடம் கொண்டுவர உங்களிடம் துவங்குகள்.

நீங்களும் படியுங்கள்.

அவர்கள் படிக்க வேண்டிய நேரம் வந்ததும் படி என்று சொல்லலாம். நீங்களும் படியுங்கள்.

என்னது நானா? என்று அதிர்ச்சி அடையாதீர்கள். நீங்களேதான்.

ஒரு மனிதர் புகழ்பெற்ற குருவிடம் வாழ்த்து பெறவேண்டி வந்திருந்தார். குரு அவர் குடும்பத்தைப் பற்றி கேட்டார். அதற்கு அந்த மனிதர் “நான் படிச்சு முடிச்சுட்டு ஒரு கம்பெனியில் 40 வருஷம் வேலை பார்த்து இப்பதான் ரிட்டையர் ஆனேன். என் மனைவி படிச்சு முடிச்சிட்டு வீட்லதான் இருக்காங்க. என் பையன் படிச்சு முடிச்சிட்டு வெளி நாட்டுல வேலை கிடைச்சு அங்கேயே செட்டில் ஆயிட்டான்” என்றார். குரு உடனே சொன்னார், “உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் உங்கள் வீட்டில் எல்லோரும் படிப்பை முடித்துவிட்டீர்கள்”.

பலரும் இங்கே கல்வி என்பது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததில் துவங்கி டிகிரி வாங்கியதும் முடிந்துவிடுகிறது என்றே நினைக்கிறார்கள். முக்கியமாக வேலை கிடைத்துவிட்டால் படிப்பது என்பதே அவசியமற்றதாக உணரப்படுகிறது.

ஒரு ஆசிரியர் தன் பள்ளியில் கல்லூரியில் படித்த பாடங்களிலிருந்து மட்டும் பாடம் நடத்திக்கொண்டிருந்தால், ஒரு போதும் சிறந்த மாணவனை உருவாக்க முடியாது. அவர்கள் பாடம் எடுக்கும் துறையில் சமீபத்திய புத்தகங்கள் வரை கற்றுத்தேர்ந்திருந்தால்தான் ஓர் ஆசிரியராக விளங்க முடியும்.

ஒரு மருத்துவர் சிறந்த மருத்துவப்பட்டம் பெற்ற ஒரு தகுதி மட்டும்போதாது. தொடர்ந்து தங்கள் துறையில் வருகிற மருத்துவமுறை மாற்றங்கள், புதிய மருந்துகள் இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் நோயாளிகளைக் கையாள முடியும். நோய்களை குணப்படுத்த முடியும்.

ஒரு வகையில் ஆசிரியரைவிடவும் மருத்துவரைவிடவும் அதிக பொறுப்புள்ள பெற்றோர்கள் தொடர்ந்து கற்றுக் கொள்கிறார் களா? என்றால் அது கேள்விக்குறிதான்.

எனவே நீங்கள் உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகள் அல்லது குழந்தை வளர்ப்பு போன்றவற்றை தெரிந்துகொள்ள வேண்டிய புத்தகங்களை குழந்தைகள் படிக்க வேண்டிய நேரத்தில் உட்கார்ந்து படியுங்கள். நீங்கள் சொல்லாமலே அவர்களும் உங்களோடு உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பார்கள்.

மாற்றங்களை உங்களிடம் துவங்குங்கள். உங்கள் குழந்தைகள் அதை தொடர்வார்கள்.
இதுதான் நீங்கள் வீட்டிற்குள் பெறவேண்டிய வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *