ஒவ்வொரு நாளும் இனி கொண்டாட்டமே
மிழகத்தில் சுனாமி தாக்கிய நேரம்.. அந்தமானில் இருந்த ஒருவர் திடீர் திடீர் என்று ஏற்படும் நில அதிர்வால் தன் குழந்தை பாதிக்கப் பட்டு விடக்கூடாது என எண்ணி தன் குழந்தையை டெல்லியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஒரு வாரத்தில் டெல்லியிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்தது. “நிலநடுக்கத்தை வேண்டுமானால் இங்கே அனுப்பி விடுங்கள். தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம். தயவு செய்து உங்கள் குழந்தையை கூட்டிக் கொண்டு போங்கள்”என்று.
உண்மையில் குழந்தைகள் குறும்பும் சேட்டையும் செய்கிற நேரம் வீடுகள் நிலநடுக்க வீடுகள்தான். இந்த நில அதிர்வை ரிக்டர் அளவில் அளந்தால் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நேரம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் காலை நேரம்தான்.
எந்த வகுப்பு படிப்பவராக இருந்தாலும் காலை எழுப்புவதிலிருந்து பல் துலக்குவது, குளிப்பது, உணவு உண்பது என அத்தனைக்கும் விரட்டி விரட்டி செய்ய வைத்து, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றும் வரை வீடுகள் அனைத்தும் போர்க்களம் தான்.
அம்மாக்களுக்கு ஏற்படும் இந்த காலை நேர மன அழுத்தத்திற்கு Hurried women syndrome என புதுப்பெயர் சூட்டும் அளவிற்கு அவர்கள் படாத பாடுபட்டு விடுகிறார்கள் பாவம். இதில் பெற்றோர்களின் பெரும் வருத்தமே தினமும் செய்ய வேண்டிய வேலைகளைக் கூட வற்புறுத்தித்தான் செய்ய வைக்க வேண்டி இருக்கிறது என்பது தான்.
முதல் பிரச்சினை. காலையில் எழ அடம் பிடிப்பதுதான். அம்மா. ப்ளீஸ் 10 நிமிடம் என எழுந்திருக்கும் நேரத்தை நீட்டித்தபடி இருப்பது. இன்னும் சிலர் பதிலே பேசாத மவுனச் சாமியார்களாய் ஆழ்ந்த நித்திரையில் இருந்து அம்மாக்களின் டென்ஷனை இரண்டு மடங்காக்கி விடுவார்கள்.
சிலர் அப்படி எழுந்து விட்டாலும் படுக்கையில் உட்காந்தே தூங்குவது, இன்னுமா எழுந்திருக்கல என்ற சத்தம் வந்ததும் நடந்து கொண்டே தூங்குவது என, என் பொறுமையை சோதிக்காதே என்று அறிவிப்பு வரும் வரை தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இந்த காலை பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?
உற்சாக வார்த்தைகள்
காலை நேரம் டென்ஷனானதுதான். ஆனால் அதற்காக புலம்பாதீர்கள்.
காலை நேர டென்ஷன் யாரால்? 8 மணிக்கு பள்ளி வேன் வருவதற்குள் இவர்களை கிளப்பிவிட வேண்டும். இல்லாவிட்டால் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவார்கள் என்று நாம் அதிகம் பதட்டமடைவதால்தான். இதன் விளைவு புலம்ப ஆரம்பித்து விடுகிறோம்.
இவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது.
எட்டாவது படிக்கிற ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இல்லை.
நான் கத்திட்டே இருக்க வேண்டியது தான். காதிலேயே வாங்குறதில்ல – என்று தொண்டை வலிக்க முகம் சிவக்க கத்தாதீர்கள். புலம்பாதீர்கள். சலித்துக் கொள்ளாதீர்கள். உங்களை உற்சாகமிழக்க வைக்க உங்களின் இந்த பேச்சே போதும். இதற்கு மாறாக காலையில் உங்களைப் பள்ளிக்கு தயார் செய்யும் இந்த நேரம்தான் எனக்கு மகிழ்ச்சியான நேரம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
காரணங்களைக் கண்டறியுங்கள்
சீக்கிரம் எழுந்தாலே எல்லா வேலைகளும் சீக்கிரம் முடிந்து விடும். இரவில் சீக்கிரம் படுக்காமல் காலையில் நேரத்திற்கு எழமுடியாது மற்றொரு காரணம் அதிக இரவு உணவு.
நல்லா சாப்பிடுவது என்பது அதிகமாய் சாப்பிடுவது என்று தவறாகப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் வற்புறுத்தி அதிக உணவை தந்து சாப்பிட வைப்பதாலும் தாமதமாய் நேரம் தவறி சாப்பிடுவதாலும் செரிமானம் முழுமையாக நடைபெறாமல் எழமுடியாத அளவு அசதியை ஏற்படுத்தி வருகிறது.
தூங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள் இரவு 9-9.30 மணிக்குள் உறங்குவதற்கு பழக்கப் படுத்துங்கள். ஏன் விரைவாக தூங்க வேண்டுமென்றால், இரவில் 9 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள நேரத்தில் நம் உடலில் பல வேதியல் மாற்றங்கள் நிகழ்கிறது. உடலில் வளர்ச்சி ஏற்படுவதற்கு உதவியாக நாம் தூங்கும் நேரம் மாறுவதால் வேதியல் மாற்றங்கள் முழுமையாக நிகழாமல் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை விளக்குங்கள்.
காலையில் சரியான நேரத்திற்கு எழவைத்து விடுகிறோம். மற்ற வேலைகளில் உற்சாகமாக செய்ய வைப்பது எப்படி?
பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் காலை வேளையில் பிரஷ்ஷை வாயில் வைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தால் அதில் ஆழ்ந்து போய் பிரஷ்ஷை அசைக்கவே மறந்து சிலையாகி விடுவார்கள். காரணம் கற்பனையில் மிதப்பது. இது பெரியவர்களுக்கே உரிய பிரச்னைதான். செய்கிற வேலையில் கவனமில்லாமல் அடுத்து செய்ய வேண்டிய வேலையைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது.
கற்பனையை கலைக்க அவ்வப்போது தம்பி. என்ன செய்யறீங்க? என்ற நினைவூட்டல் மூலம் செய்யும் செயலில் கவனத்திற்கு அவர்களை கொண்டு வரலாம்.
ஓர் உதாரணம் பார்க்கலாம். ஒருவர் தனது நண்பருக்கு தன் செல்லிலிருந்து பேசுகிறார். அப்போது செல்லில் பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்குரல் நீங்கள் டயல் செய்த வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். பின்னர் தொடர்பு கொள்ளவும் என்கிறது. அவரோ அதை கவனிக்காமல் பேசிக்கொண்டே இருந்தால் அவரை என்னவென்று சொல்வது.
அது போலத்தான் நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் உங்கள் குழந்தை சிந்தனை வயப்பட்டு உங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார். இதை அறியாமல் நீங்கள் என்ன சொன்னாலும் அவரை அது சேரப்போவதில்லை.
இதைப் புரிந்து கொண்டால் அவர்கள் சிந்தனையைக் கலைத்து அவர்கள் செயல்களை விரைவுபடுத்த முடியும்.
நீங்கள் ஒலியா? ஒளியா?
பள்ளியில் படித்திருப்போம். ஒளி. ஒலியை விடவும் வேகமான பயணம்செய்யும். நீங்கள் சொல்லும் வார்த்தைகளை (ஒலி) விட நீங்கள் நடந்து கொள்ளும் விதம் (ஒளி) அவர்களை விரைவாக சென்று சேர்கிறது. எனவே எதையும் சரியான நேரத்திற்கு செய்வதில் நீங்கள் முன்மாதிரியாக இருங்கள்.
மாலை 5 மணிக்கு சினிமாவிற்கு போகவேண்டும் என்று முடிவு எடுத்திருந்தால் சரியான 5 மணிக்கு கதவை பூட்டிக்கொண்டு கிளம்பும் அளவிற்கு தயாராய் இருங்கள். அதை விடுத்து இன்னும் 5 நிமிடத்தில் கிளம்பிவிடுகிறேன் என்று சொல்லாதீர்கள்.
நண்பரைச் சந்திக்க 4 மணிக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு 4.15 கிளம்பாதீர்கள். இது எதையும் காலதாமதமாக செய்வது ஒன்றும் பெரிய தவறில்லை என்ற எண்ணத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட எல்லா வேலைகளையும் சரியான நேரத்திற்கு முடித்து விடுங்கள்.
உலகிலேயே அதிக விபத்துக்கள் திங்கட்கிழமை காலையில்தான் நடைபெறுகிறது என்று கணக்கெடுத்துள்ளனர். காரணம் ஞாயிறு லீவில் சும்மா இருந்துவிட்டு திங்களன்று காலை முதல் நாள் வேலையையும் பரபரப்போடு செய்து பின் அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்புவதுதான்.
ஞாயிறு என்பது ஓய்வுநாள் என்றெண்ணாமல் ஓய்விற்கு அதிக நேரம் உள்ள நாள் என்று புரிந்து கொண்டால் அன்றைய கடமைகளிலிருந்து ஒருபோதும் தவற மாட்டார்கள்.
அதே போலவே குழந்தைகளையும் பள்ளி நாளைப்போலவே எல்லா வேலைகளையும் செய்த பின் விளையாடவோ அல்லது ஓய்வு எடுக்கவோ பழக்குங்கள்.
இன்று தான் ஸ்கூலில் இல்லேல எழுந்து என்ன செய்யப்போற தூங்கு என கூறாதீர்கள். ஒருநாள் தளர்த்துவதில்தான் மறுநாள் உறுதி குறைந்து விடுகிறது.
காலையில் டென்ஷனுக்கு பை.. பை…
காலையில் கிளம்புவது அவர்கள் வேலை. அதற்கு உற்சாகம் அளிப்பது மட்டுமே நம் வேலை என்று இருக்க வேண்டும். மிகவும் மெதுவாக சாப்பிடுகிறார்கள். என்றால் அவர்களை சரியான நேரத்திற்கு சாப்பிட உற்சாகப்படுத்தினால் போதும். மாறாக நீங்களே ஊட்ட ஆரம்பித்தால் அவர்களுக்கு நாமாக கிளம்ப வேண்டியதில்லை. நாம் எவ்வளவு மெதுவாகச் செய்தாலும் அம்மா கிளப்பிவிடுவார்கள் என்றாகி விடும்.
காலை வேளையில் மட்டும் பிடித்தமான உணவு வகைகள் கொடுப்பதன் மூலம் அதிக நேரம் எடுப்பதை தவிர்க்கலாம்.
காலையில் குறுகிய நேரத்தில் அதிக வேலைகள் இருப்பதால் அடுத்த நாள் வேலைகளை இரண்டாகப் பிரித்து முதல் நாளே செய்து வைத்து விடக்கூடிய வேலைகளை முடித்து விடுவீர்கள்தானே. அதே போல ஹோம் – ஒர்க் செய்யாமல் படுக்கக்கூடாது என்று முடிவு எடுத்து விடுங்கள். இதனால் ஸ்கூல் கிளம்பும் போது ஹோம்-ஒர்க் எழுதிக் கொண்டு இருந்து சாப்பிடாமல் உங்களை படுத்தமாட்டார்கள்.
மாலையில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை அவர்களை விட்டே எழுத வையுங்கள். அதை அவர்களின் அறையில் ஒட்டச் செய்யுங்கள். உதாரணத்திற்கு:
1. பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கை கழுவுதல்
2. அரை மணி நேரம் விளையாட்டு
3. ஹோம் ஒர்க் செய்து முடித்தல்
4. கையெழுத்து வாங்குதல்
5. யூனிபார்ம் எடுத்து வைத்தல்
6. பள்ளிக்குத்தேவையானதை டைம் டேபிள் படி எடுத்து வைத்தல்
checking of to do list என எழுதி ஒட்டுங்கள்.
இதைச் செய்ய ஆரம்பித்த சில நாட்களுக்கு 1ஐ செய்துவிட்டாயா 5 ஐ செய்துவிட்டாயா என்று நட்பான குரலில் நினைவூட்டுங்கள்.
உங்கள் குழந்தை சோம்பேறி அல்ல
பள்ளிக்கு என்றால் தான் நிதானமாக கிளம்புகிறார்கள். இதுவே டூர் என்றால் எவ்வளவு வேகமாக எடுத்து குளித்து உண்டு நம்மை அவசரப்படுத்துகிறார்கள். இந்த வேகம் எங்கிருந்து வந்தது என்றாவது யோசித்தது உண்டா?
டூர் என்ற ஆர்வத்திலிருந்து வந்தது இல்லையா. அந்த வகை வேகம் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏற்பட வேண்டுமென்றால் பள்ளி என்பது அவர்களுக்கு பிடித்த இடமாக வேண்டும். கல்வி என்பது இனிக்க வேண்டும்.
அதை ஏற்படுத்த என்ன வழி? வரும் இதழில்….
Leave a Reply