உங்கள் தொழிலின் உற்பத்தியைப் பெருக்க அதிக நேரம் உழைப்பவரா நீங்கள்? ஓய்வு என்ற சொல்லுக்கே இடம் கொடுக்காதவரா? அப்படியானால் சிந்திக்க இதுதான் சரியான தருணம். ஓய்வெடுப்பதும் பிறருடன் கலந்து பேசுவதும் நம்மை புதுமையாக சிந்திக்க வைப்பதுடன் நம்மை சுறுசுறுப்பாக செயல்படவும் வைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உங்கள் அதிநவீன அலைபேசியில் நொடிக்கொருமுறை மின்னஞ்சல் சரிபார்ப்பவராக இருக்கலாம். உங்கள் பொழுதுகளை குடும்பத்துடன் கழிக்க இயலாத அளவிற்கு வேலைப்பளு உள்ளவராக இருக்கலாம். இவை நீங்கள் தொழில் வெற்றி பெற உதவி இருக்கலாம். அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள உங்களுக்கு ஓய்வும், சிரித்து மகிழ்ந்து இருக்கக் கூடிய சூழ்நிலையும் தேவை.
தையல் இயந்திரத்தை கண்டறிந்தவர் தீவில் ஒருவன் ஈட்டியை நீட்டி பிடிப்பது போலவும் இந்த ஈட்டியின் முளையில் துளை இருப்பதை போன்றும் கனவு கண்டதே அவர் கண்டுபிடிப்பை தூண்டியது என்று கூறுகிறார்.
அறிவியல் ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? நம்மை வருத்திக் கொண்டு கடுமையாக உழைக்கக் கூடிய தருணங்களில் நம்முடைய செயல் திறனில் 10 முதல் 20 பாயிண்ட் வரை குறைகிறதாம்!
அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்று தன் அலுவலகங்களில் வாரமொரு முறை மின்னஞ்சல் வேலைகளை நிறுத்தி தம் ஊழியர்களுக்கு ஓய்வளிக்கிறது. ஆனால் மற்ற நாட்களை காட்டிலும் இந்த நாளில்தான் உற்பத்தியும், வருவாயும் அதிகரிப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
நாம் ஒரு நாளில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நமக்கே நமக்காக செலவிட வேண்டும். நம் மனதிற்கு பிடித்தமான புத்தகங்களைப் படிக்கலாம், அதிகாலையில் தியானம் செய்யலாம். கடற்கரையில் விளையாடலாம். இவையெல்லாம் நம் மனதின் அழுத்தத்தைக் குறைத்து புதுமையாக சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும்.
இந்நாள் வரை நீங்கள் தொழில் வெற்றி பெற்றபின் ஓய்வெடுத்திருப்பீர்கள். இனி, உங்கள் வெற்றிக்காக சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஓய்வு-வெற்றிக்கான புதிய வழி.
Leave a Reply