நேர்காணல்

மலேசிய கூட்டமைப்புப்
பிரதேசத் துணையமைச்சர்
டத்தோ.மு. சரவணன்

நேர்காணல்

(நிர்வாகி – இலக்கியவாதி – அரசியல் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் டத்தோ. மு.சரவணன். பிஞ்சுப்பருவத்தில் பேச்சாளராய் மலர்ந்து, கல்லூரிப் பருவத்தில் அரசியலில் நுழைந்து, நாற்பது வயதில் மலேசியாவின் துணையமைச்சராய் பொறுப்பேற்றிருக்கிறார்.

மலேசியப் பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில், ‘நமது நம்பிக்கை’ மாத இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல் இது)

உங்கள் இளமைப் பருவம் பற்றி?

“மலைக்காட்டில் பிறந்தேன் – மற்றொருவர் மகனாக வளர்ந்தேன்” என்று ஒரு கவிதையில் நான் எழுதியிருந்தேன். பிறந்தவுடனேயே என் பெரியப்பா பெரியம்மாவுக்கு சுவீகாரம் சென்றவன் நான். திரும்பவும் பெற்றோரிடம் போய்விடுவேனோ என்ற பயத்தில் அவர்களை அறிமுகம் செய்து வைக்காமலேயே வளர்த்தனர் என் வளர்ப்புப் பெற்றோர். அவர்களும் முதுமை அடைந்திருந்தனர். புறக்கணிக்கப்பட்ட ஒரு குக்கிராமத்தில் ஏழ்மைச் சூழலில் வளர்ந்தேன். பெற்ற தந்தையை முதல்முதலாக நான் பார்த்தபோது எனக்கு வயது 17. ஆனால் நான் அவரைப் பார்த்ததோ பிணமாகத்தான். இறுதிச் சடங்குக்காக என்னை அழைத்துச் சென்றனர்.

என்னை வளர்த்த தந்தையாகிய பெரியப்பாவும் மறைந்தார். வளர்ப்புத்தாயின் சொந்தங்களோ தமிழ்நாட்டில்! எனவே உறவுகள் அற்ற சூழலில் தன்னந்தனிமையில் என் இளமைப்பருவம் இருந்தது.

அப்படியானால் உங்களைப் படிக்க வைத்தது யார்?

அடிப்படைக் கல்விக்கு எங்கள் நாட்டில் கட்டணம் கிடையாது. ஏழு வயதில்தான் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்வார்கள். எங்கள் பகுதியில் தனம் என்றொரு பெண் இருந்தார். அவருக்குத் தமிழிலக்கியத்தில் அளவில்லாத ஆர்வம் உண்டு. நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்த போதே அரிச்சுவடியையும் அடிப்படையான தமிழ் ஆர்வத்தையும் எனக்குப் புகட்டினார். அதன் விளைவாக, பள்ளியில் சேரும் முன்பே நான் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டிருந்தேன். ஆரம்பப்பள்ளி முழுவதுமே தமிழ் வழிக்கல்வி என்பதால், பள்ளியில் சேரும்போதே நான் சிறந்த மாணவனாக இருந்தேன். சேர்ந்ததுமே என்னை இரண்டாம் வகுப்பிற்கு மாற்றிவிட்டார்கள். ஆனால் அங்கே இருந்தவரோ முரட்டு வாத்தியார் ஒருவர். எனவே நான் மீண்டும் முதலாம் வகுப்பிற்கே ஓடி வந்துவிட்டேன். பிஞ்சு வயதிலேயே பள்ளியில் கிடைத்த அங்கீகாரம் என்னை நம்பிக்கை மிக்கவனாக வளர்த்தது.

அப்போது உங்கள் குடும்பச் சூழல் எப்படி இருந்தது?

விபரம் தெரிந்த நாளிலிருந்தே என் வளர்ப்புத் தந்தை வீட்டிற்கென்றும் தனக்கென்றும் எதுவும் வாங்கியதாக என் நினைவில் இல்லை. எப்போதும் அரை டிரவுசர்தான் அணிந்திருப்பார். அரிதாக விசேஷங்களுக்குச் செல்கையில் வேட்டி உடுத்துவார். எளிய தொழிலாளியாக இருந்து ஓய்வுபெற்ற பிறகும் செல்வந்தர்களின் வீடுகளில் தோட்ட வேலைக்கு என் பெற்றோர் இருவரும் சென்றனர். அடிப்படைத் தேவைகளுக்கு பிரச்சினை இருந்தததில்லையே தவிர, வானொலி – தொலைக்காட்சி என்று எதுவும் கிடையாது. நான் படிப்பது பற்றி எதுவும் அறிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். நான் பாஸ் மார்க் வாங்குகிறேனா பெயில் மார்க் வாங்குகிறேனா என்றுகூடத் தெரியாமல் இருந்தார்கள்.

இந்த நிலையில் கல்வியில் ஊக்கத்துடன் நீங்கள் ஈடுபட்டது எப்படி?

ஆரம்பத்தில் ‘தனம்’ என்ற உபாத்தியாயை விதைத்த விதை வளர்ந்து செழிக்கச் செய்தவர், பள்ளியில் இருந்த ஆசிரியை பாமகள் பாலசிங்கம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், மனத்தளவில் என்னை மகனாகவே வரித்து வளர்த்தார். பேச்சுப் போட்டிகளுக்காக அவர் எழுதித்தந்த பேச்சுக்களை நான் மனனம் செய்வேன். அதனால் என் நினைவாற்றல் நன்கு வளர்ந்தது. என் முதல் பேச்சுப் போட்டி திருவள்ளுவர் பற்றியது. ‘பொய்யில்புலவர்’ என்று தலைப்பு. அப்போது எனக்கு வயது பத்து. நான் பள்ளி வந்து சேரத் தாமதமானதால் முதல் போட்டியிலேயே பங்கேற்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். அதே ஆண்டில் திருநாவுக்கரசரைப் பற்றிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அந்தப் பேச்சு இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. 1978 முதல் 1986 வரை, மாநிலத்தில் எங்கு பேச்சுப் போட்டி நடந்தாலும் நான்தான் முதலிடம் பெறுவேன். ஒரேயொருமுறை இரண்டாமிடம் பெற்றேன்.

இந்த ஆரம்ப நிலைக்கும் உங்கள் இன்றைய வளர்ச்சிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாய் நம்புகிறீர்களா?

நிச்சயமாக! மேடை பயம் போனது முதல் பலன். எப்போதும் எதிலும் தோற்கக்கூடாது என்கிற உத்வேகத்தை அந்தப் போட்டிகள் மூலமாகத்தான் பெற்றேன். அதுமட்டுமல்ல. அந்த வயதிலேயே, போட்டிக்காக சமய நூல்களைப் படித்ததில் வாழ்க்கை பற்றிய தெளிவும் எந்தப் பாதையில் போகிறோம் என்ற விழிப்புணர்வும் வந்தது. எண்ணங்கள் நல்லதாய் இருக்கும் வரை எந்தத் துன்பமும் வராது என்ற உறுதியைப் பெற்றேன். இதனால் என் பார்வை சுதந்திரமாக விரிந்தது. ஒன்று நினைத்ததுபோல் அப்போது நடக்காத போதும், அதுகூட நன்மைக்குத்தான் என்று கருதும் அளவு பின்னாளில் சம்பவங்கள் நடந்தன. இந்தத் தெளிவான மனநிலைக்கு இளமைப் பருவத்தில் பங்கேற்ற போட்டிகளும் அவற்றுக்காக மேற்கொண்ட தயாரிப்புகளுமே காரணம்.

கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்தது?

நான் கல்லூரியில் சேரும் நேரத்தில்தான் என் வளர்ப்புத் தந்தையின் மரணம் நிகழ்ந்தது. அவரது ஓய்வூதியத்தைத் தவிர வேறு வருமானம் இல்லை. அதுவும் மிகவும் குறைந்த தொகைதான். எனவே பகுதி நேரப் பணிக்குப் போவதென்று முடிவு செய்தேன். மலேசிய இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாகப் பகுதிநேரப் பணிக்குச் சேர்ந்தேன். ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனாகிய எனக்கு, அப்போதே நான் வியந்து பார்த்த பிரம்மாண்டமான மனிதராகிய டத்தோஸ்ரீ சாமிவேலுவை அருகிருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு அமைந்தது. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நெருங்கிப் பழகுகிற சூழல் வாய்த்தது. இதனாலேயே என்னுடைய கிராமத்தில் என்னை வியந்து பார்க்கத் தொடங்கினார்கள் – ஏனென்றால், நான் இருந்த கிராமப்பகுதியில் அப்போது ஆபீஸ் பையன் வேலையே மிகப் பெரிய வேலை.

ஆபீஸ் பையனாக இருந்த நீங்கள் அமைச்சராகும் அளவு வளர்ந்தது எப்படி?

நான் பணிக்குச் சேர்ந்த காலத்தில் மலேசிய இந்திய காங்கிரசில் இருந்து பிரமுகர் ஒருவர் வெளியேற்றப்பட்டார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் சிலர் கட்சி அலுவலகத்தில் கலகம் விளைவித்தபோது, அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டன. என்னுடைய பகுதியில் இருந்த வேலையில்லாத இளைஞர்கள் பலரை அந்தப் பணியில் ஈடுபடுத்தினேன். நான் வசித்த பகுதியில் எனக்கிருந்த நல்லபெயரைக் கட்சி கண்காணித்தது. எங்கள் பகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளை இல்லை. எனவே ஒரு கிளையை உருவாக்கும் பொறுப்பையும் அந்தக் கிளைக்குத் தலைவராகும் பொறுப்பையும் கட்சி என்னிடம் ஒப்படைத்தது. 22 வயதில் கட்சியில் கிளைத்தலைவர் ஆனது பெரிய வாய்ப்பு.

மொழிவளம் எனக்கிருந்த காரணத்தால், கட்சிக் கூட்டங்களில் அறிவிப்பாளர் வேலை எனக்குத் தரப்பட்டது. எல்லாக் கூட்டங்களிலும் அறிவிப்பு செய்வதில் கையாண்ட உத்திகள் அனைவருக்கும் பிடித்தது. மூத்தவர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த மேடைகளை எனக்குக் கொடுத்தார் என்னுடைய தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேல் அவர்கள்.

இதன் விளைவாகக் கட்சியில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே பட்டயப் படிப்புக்காக ஒரு வருடம் லண்டன் போய்வந்தேன். ஆனால் இதன் மூலம் என் தமிழார்வமும் பொதுவாழ்வில் இருந்த ஆர்வமும் குன்றவில்லை.

பொது வாழ்க்கைக்கேற்ற பண்புகளை உங்களிடம் செதுக்கிய ஆதர்சங்கள் பற்றி?

இளமைப்பருவத்திலிருந்து நான் படித்த சமயக்கல்வி, பொதுவாழ்வுக்கான உரத்தையும் பக்குவத்தையும் எனக்குத் தந்தது. பொதுவாழ்வில் தலைமைப் பண்புகளுக்கான உன்னத உதாரணமாய் நான் உள்ளத்தில் வரித்துக் கொண்டது என் தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேல் அவர்களைத்தான். அவருடைய அருங்குணங்கள் பலவற்றிலிருந்து நான் பாடம் படித்திருக்கிறேன். இன்று நான் இருக்கும் உயரம் அவரால் வந்தது என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அரசியல் உலகின் இளம் தலைவர் என்ற முறையில் இன்றைய சமூகம் குறித்து உங்கள் பார்வை என்ன?

இன்று பொருளாதாரப் பின்னடைவை விட பெரிய அச்சுறுத்தல் கலாச்சாரப் பின்னடைவுதான். வாழ்வில் சிகரம் தொடவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கான அளவுகோலாகப் பொருளாதார உயர்வை மட்டுமே பார்க்கிறார்கள். தங்கள் திறமையைப் பயன்படுத்திப் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும். எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் வழிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்கள். இது தவறு.

ஓர் இடத்திற்கு சென்று சேர்வது மட்டும் முக்கியமில்லை. உரிய வழியில் செல்வதும் முக்கியம். ஒரு மனிதன், தான் செல்லும் இடத்திற்கென்று உள்ள சாலையை விட்டுவிட்டு, காட்டு வழியாகப் போக நினைத்தால் விலங்குகள் அவனை அடித்துச் சாப்பிட்டு விடும். தன்னுடைய இலக்கு முக்கியம், தவறான பாதையாய் இருந்தாலும் பரவாயில்லை என்று யாரேனும் எண்ணினால் அவர்களை அந்தத் தவறான பாதையே வீழ்த்திவிடும். வளர நினைக்கும் தனிமனிதன் ஆனாலும் சரி, சமுதாயம் ஆனாலும் சரி, இதனை மனதில் கொள்ள வேண்டும்.

உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் தங்கள் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்று கருதுகிறார்கள். மலேசியாவில்கூட அத்தகைய உரிமைகளுக்கான போராட்டம் நிகழ்ந்ததே?

கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னார், “காதலையும் வீரத்தையும் கண்களாகப் போற்றிய தமிழர்கள், பொருளாதாரத்தை நெற்றிக்கண்ணாக நினைக்க வேண்டும்” என்று. நவீன உலகில் பொருளாதாரம் மட்டுமே முக்கியம் என்று கருதுவதும் ஆகாது. அதே நேரம் பொருளாதாரத்திற்கு உரிய முக்கியத்தைத் தராமல் விட்டுவிடவும் கூடாது. குறிப்பாக மலேசியாவில் தமிழர்கள் நிலை குறித்துக் கேட்டார்கள்.

இன்று மலேசியாவில் இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள் உள்ளனர். சீக்கியர்கள், மலையாளிகள், என்று பலரையும் சொல்லலாம். இப்படி வந்த பல இந்திய இனத்தவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். தமிழர்களாலும் சில இனத்தைச் சேர்ந்தவர்கள் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளார்கள்.

மலேசியாவில் யாழ்ப்பாணத்தவர்கள் வரலாற்றை கடந்த ஐம்பது ஆண்டுகளில் பார்த்தால் வழக்கறிஞர், மருத்துவர் என்று முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவிலிருந்து பல தலைமுறைகளுக்கு முன்னால் வந்த பலரும் தோட்டத் தொழிலாளர்களாகவே இருந்து வந்து மெல்ல மெல்ல வளர்கிறார்கள். வீட்டுக்கொரு பட்டதாரி என்ற நிலையைக் கடந்து வீட்டில் அனைவருமே பட்டதாரிகள் என்று வளர்ந்து வருகிறார்கள். இனி, பலதுறை நிபுணர்களாக வளரவேண்டும். அதற்கான முனைப்பு, உழைப்பு, தகுதி மூன்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அளவில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் சரியான தலைமை தேவை. அது தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

மக்களுக்கு என்ன தேவை என்று ஆய்வு செய்வது முதல் நிலை. அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவது இரண்டாவது நிலை. நடைமுறைப் படுத்துவது மூன்றாவது நிலை. இதில் இரண்டாவது அம்சத்திற்கும் மூன்றாவது அம்சத்திற்கும் இடைவெளி விழுகிறபோதுதான் எதிலுமே தாமதம் ஏற்படுகின்றது. வேலை நடைபெறுகிறதா என்று கண்காணித்து, உறுதிசெய்து கொள்வது மிகவும் முக்கியம். பெரிய அரசாங்கத்தில் மட்டுமில்லை, சின்னஞ்சிறிய நிறுவனத்தில்கூட இதைக் காணலாம்.

உலகளாவிய சவால்களை இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ளலாம்?

இளைஞர்களின் தேவைகளை அரசாங்கங்களும் அரசியல் இயக்கங்களும் இளைஞர்களின் கோணத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். பண்பாட்டுப் பின்புலம் இருக்குமேயானால் வாழ்வின் சவால்களையும் சோதனைகளையும் சமாளிக்கிற ஆற்றல் இளைஞர்களுக்குத் தானாகவே வரும். இலக்குகளை முதலில் நிர்ணயித்து, அதற்கான வழியையும் முடிவுசெய்ய வேண்டும். தனிமனிதன் ஒரு நிர்வாகத்தை நடத்தினால் அதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகக் கட்டமைக்க வேண்டும். ஒரு தொழில் நிறுவனம் என்பது, அதன் தலைவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்க வேண்டுமென்றால், System என்று சொல்லப்படுகிற வழிமுறைகள் மிகவும் முக்கியம். அதனை உருவாக்கத் தெரிந்து கொண்டால் ஒரு தனி மனிதனோ நிறுவனமோ தோல்வியடையப் போவதேயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *