வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள தேவையான ஈரத்தன்மையுள்ள செயல்களை உள்ளடக்கிய ஊற்று ஒவ்வொருவருக்குள்ளும் அடங்கிக் கிடக்கிறது. இதை மறுக்க யாரால்தான் முடியும்?
சிலர் சிறுவயதிலிருந்தே சிலவற்றைப் பற்றி திட்டவட்டமான முடிவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். முன்முடிவுகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இவர்களுக்கு யாருடைய அறிவுரையும், ஆலோசனைகளும் மிகச் சாதாரணமானதுதான். அலட்சியப்படுத்தவும் செய்வார்கள்.
எல்லாவற்றிற்கும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்கேள்வியை மனவசம் வைத்திருக்கிறவர்கள். எதிராளியை அந்த வினாவின் மூலம் வென்று விட்டதாக நினைக்கிறவர்கள். விரக்தியையும், சோர்வையும் விரட்ட வந்தவர்களை கூட விரோதிகளாக நினைக்கிறவர்கள்.
சந்தேகக் கேள்விகள் தேவைதான்! ஏற்ற இடம், பொருளற்ற சந்தேகங்கள் பெரும் துன்பத்தையே தருகின்றன.
நண்பர்கள் இருவர் ஆற்றைக் கடந்து அக்கரை போகவேண்டும். இக்கரையில் ஒரு படகு இருந்தது. இருவரும் படகில் பயணத்தைத் துவங்கினார்கள். படகு பாதி வழியில் கவிழ்ந்துவிட, ஆற்று வெள்ளத்தில் இருவரும் தத்தளித்தார்கள்.
இருவரும் கூச்சல் போட்டதில், ஆற்றின் இன்னொரு கரையில் நின்றிருந்த ஒருவன் படகிலேறி இருவரையும் காப்பாற்ற விரைந்து வந்தான்.
அருகில் வந்து இருவரையும் படகில் ஏற, கயிற்றை வீசினான். தட்டுத்தடுமாறி ஒருவன் படகில் ஏறிக்கொண்டான்.
இன்னொருவனுக்கு பலத்த சந்தேகம்! படகில் வந்தவன் உண்மையில் தங்களைக் காப்பாற்ற வந்தவன்தானா? என்று படகுக்காரனிடமே கேட்டுப் பார்த்தான். பேச நேரமில்லை படகில் ஏறுமாறு வற்புறுத்தினான். படகு பத்திரமாக கரை சேருமா? படகை பத்திரமாக செலுத்துவாயா? மறுபடியும் கவிழ்ந்து விடாதே? என்றெல்லாம் வினாக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் காப்பாற்ற வந்தவனுக்கு சலித்து விட்டது. தன்னை நம்பி எந்த கேள்வியும் அற்று படகில் ஏறிக் கொண்டவனை உடனடியாக கரை சேர்த்து, மேற்கொண்டு முதலுதவி செய்ய வேண்டிய கட்டாயத்திலிருந்தான்.
கேள்விகளால் கால தாமதம் செய்து கொண்டிருந்தவனை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை. தன்னை நம்பியவனை காப்பாற்ற படகுக்காரன் கிளம்பிவிட்டான்.
இப்படித்தான் பலரின் வாழ்க்கையும் வீணான சந்தேகங்களால் மடிந்து கொண்டிருக்கிறது.
எதைச் சந்தேகப்பட வேண்டும்? எதை சந்தேகப்படக் கூடாது என்று விளக்கமாக எந்தப் பாடத்தையும் யாருக்கும் கற்றுத் தந்துவிட முடியாது.
சந்தேகத்தைவிட இன்னொரு கொடிய வியாதி, தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்டு ஆரவாரம் செய்வது. வெற்று ஆரவாரம் புதியவற்றை கற்றுக் கொள்வதை தடை செய்கிறது. தன்னைவிட யாரும் பெரியதாய் சாதித்துவிடப் போவதில்லை என்று கற்பனை செய்து கொள்கிறது. ஆனால் தம்முடன் இருப்பவர்கள் சப்தமில்லாமல் முன்னேறி வருவதை கவனிக்கத் தவறிவிடுவார்கள்.
திடீரென்று ஒரு நாள் ஞானோதயம் வந்து திரும்பி பார்த்து திகைத்துப் போவதுடன் அதற்கும் பல சந்தேகங்களை எழுப்பி, பொய்ச் செய்திகளைப் பரப்ப தயாராகிவிடுவார்கள்.
வாழ்க்கை ஒவ்வொரு அணுவாய் கொண்டாடப்படக்கூடியது தான்!
வற்றாத நதியின் மெல்லிசையையும், கரையோர மரங்களின் பாடலையும் கொண்டதுதான்.
மாலையில் வீடு திரும்பும் பறவைகளின் மகிழ்ச்சியையும், இரவெல்லாம் பறவைகளுக்கு வீடாக இருக்கிற மரக்கிளைகளின் பெருமிதத்தையும் கொண்டதுதான்!
அதிகாலையில் மலர்ந்து கொண்டிருக்கிற மலர்களின் ஆனந்தத்தையும், வண்ணத்துப்பூச்சிகளின் ஆராவாரத்தையும் கொண்டதுதான்.
ஒரு பூங்காவிற்குள் நுழைகிறவர்களுக்கு அதன் அமைதி மயான அமைதியாக இருப்பதும், ஆனந்த அமைதியாக தெரிவதும் அவரவர்களின் மனப்பக்குவத்தையும் ரசிக்கும் மனநிலையையும் பொறுத்ததுதான்.
வீண் சந்தேகங்களைத் தளர்ப்பதும், இருப்பதை இருப்பதாக ஏற்றுக் கொள்வதும் சூழ்நிலைகளை புரிந்து நம்மை புதுப்பித்துக் கொள்வதும் காலத்தின் கட்டாயம்.
இதைப் புரிந்து கொள்கிறவர்களுக்கு, வாழ்க்கை வாண வேடிக்கைகளுடன் கூடிய ஆர்ப்பாட்டம்தான்!
Leave a Reply