நீங்களும் ஜீனியஸ்தான்

கல்வியிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உதவும் தொடர்

என்ன… நான் ஒரு ஜீனியஸா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் அல்லது சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வு முடிவில் கண்டறிந்தது அனைவரிடமும் உள்ள பொதுவான அம்சம் அவர்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.

இந்தக் கட்டுரையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு படிக்கிறீர்களா? உங்களைப் பாராட்டி உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கும் ஜீனியஸ்-கான தகுதி இருக்கிறது.

நான் உங்களை ஜீனியஸ் என்று சொல்வது இதை வைத்து மட்டும் இல்லை.

ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் இருக்கிறது. அவரை நாம் எப்படி அழைப்போம்? கோடீஸ்வரர் என்றா? லட்சாதிபதி என்றா? கோடி ரூபாய் இருப்பதால் நிச்சயம் ‘கோடீஸ்வரர்’ என்றுதான் அழைப்போம். சரி. அவர் அதை பயன் படுத்தவில்லை, பேங்கில் அல்லது தன் வீட்டு லாக்கரில் அப்படியே வைத்திருக்கிறார். பணத்தை பயன்படுத்தாத அவரை நாம் எப்படி அழைப்போம், கோடீஸ்வரர் என்றா? லட்சாதிபதி என்றா? நிச்சயம் ‘கோடீஸ்வரர்’ என்று தான் அழைப்போம். இல்லையா?

சரி. இப்பொழுது இன்னொரு கேள்வி. தாமஸ் ஆல்வா எடிசன் எத்தனை கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருக்கிறார்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இல்லையா?

இதை கண்டுபிடிக்க உதவியது, அவரது மூளை. அதே மூளைதானே உங்களுக்கும் இருக்கிறது. என்ன…. அதை பயன்படுத்தாமல் பீரோவில் (தலைக்குள்) வைத்திருக்கிறோம். பயன்படுத்தாவிட்டாலும் கோடி ரூபாய் வைத்திருந்தால் கோடீஸ்வரர்தான் என்றால் பயன்படுத்தாவிட்டாலும் ஒரு ஜீனியஸ் மூளையை வைத்திருந்தால் ஜீனியஸ்தான். ஆமாம் நீங்களும் ஜீனியஸ்தான்.

நீங்கள் ஜீனியஸ் என்பதை நீங்களே உணராததிற்கு காரணம், உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் உணராததுதான். இத்தொடர் அந்த வேலையைச் செய்யும். நினைவாற்றல் திறன், கவனிக்கும் திறன், சிந்திக்கும் திறன் என உங்களின் எல்லா திறன்களையும் வளர்த்துக்கொள்ள இத்தொடர் உங்களுக்கு உதவும்.

சைக்கிள் ரேஸில் பலர் கலந்து கொள்கிறார்கள். வேகத்திற்கு தகுந்த மாதிரி முதல் பரிசு முதல் ஆறுதல்பரிசு வரை ஆளுக்கொரு பரிசை பெறுகிறார்கள். நீங்களே சொல்லுங்கள் அனைவரும் பயன்படுத்தியது ஒரே சைக்கிள்தான். வெற்றியில் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசம். காரணம் பயிற்சியும் முயற்சியும்தான். அது போலத்தான் மூளை சக்தி எல்லோருக்கும் ஒன்றுதான், அதை பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது வித்தியாசம்.

இதற்கு இன்னும் ஓர் உதாரணம் பார்ப்போம். ஒருவரின் அறிவாற்றலை அளப்பதற்கென்று சில சோதனை முறைகள் (IQ Test) இருக்கிறது. பலரையும் இச்சோதனையில் பல்வேறு கால கட்டங்களில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அப்பொழுது அவர்களிடம் அறிவாற்றல் திறன் உயர்ந்து கொண்டே இருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திறன் பிறப்பில் வருவதல்ல… மரபியல் சார்ந்ததல்ல… இது முயற்சியில் வளர்த்துக் கொள்ளக்கூடியது. எனவே உங்களின் இப்பொழுதைய அறிவாற்றலை ஜீனியஸ் என்று உலகம் பாராட்டுகிற அளவிற்கு உங்களாலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

இத்தொடர் நீங்கள் ஜீனியஸ்தான் என்பதை முதலில் உங்களுக்கு உணர வைக்கும். பிறகு இந்த உலகுக்கே உணர வைக்கும். சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *