அடமானமா அதிக வருமானமா

– கே.ஆர்.நல்லுசாமி

அவமானத்திற்குப் பயந்து அடமானம் வைத்த காலம் ஆரம்பகாலம். எங்கே கடன்காரன் கதவை தட்டிவிடுவானோ, கண்ட இடத்தில் நிறுத்தி கேட்டு விடுவானோ, நண்பர்களும், நல்லவர்களும் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தாலும், ஆரம்ப காலத்தின் முதலீடே மனைவியின் மாங்கல்யத்தை தவிர அனைத்து

நகைகளையும் முதலில் அடகுக்கடைக்கும், பின் Instalment-ல் கட்டி திருப்பி வருவதற்கு பதிலாக (Instalment)ல் ஒவ்வொன்றாக விற்றுவிடுவது. அடமானக் கடைக்குச் சென்றது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை விற்கப் போகிற செய்தியோ, விற்ற செய்தியோ, வெளியே தெரியாது. ஏன் இந்த நிலை?

வெளிநபரிடம் கடன் வாங்க முடியாதா? வங்கியாளர்களிடம் கடன் வாங்க முடியாதா? முடியும்! வழிமுறைகள் தெரியாததாலும் வழி தெரிந்தும் வெற்றி பெறுவோமா என்ற பயத்தாலும், தருவார்களோ! தர மாட்டார்களோ என்ற தாழ்வு மனப்பான்மையுமே அதற்குக் காரணம்.

இவைகளை எல்லாம் மீறி வெற்றியின் உச்ச நிலைக்குச் செல்ல முடியுமா, முடியாதா என்றால் முடியும் என்றே சொல்லுவேன்.

பொருளாதாரம் மட்டுமே உயர்நிலையை அடைவதற்கு காரணமாய் இருந்து விட முடியாது. பொருளாதாரம் வளர்வதற்கே பற்பல அறிவுப் பூர்வமான சிந்தனை தேவைப்படுகிறது. சிந்தனையை பெறும்போதே செயல்படுத்தும் திறமை தேவைப்படுகிறது.

செயல்படும்போது வருகின்ற இன்னல்களை கடக்க தைரியம் தேவைப்படுகிறது. அவைகளை எல்லாம் கடந்து வர காலங்கள் தேவைப்படுகிறது. கிடைக்கின்ற நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய முற்படும் போதே, மேலே கூறிய அனைத்தும் கிடைக்க அஸ்திவாரம் போடப்படுகிறது. ஆரம்பம் என்னவோ கஷ்டந்தான். அவைகளை கடக்கவும் இஷ்டந்தான்.

எந்த வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்து பழகி விட்டோமேயானால் சிரமங்களை சிரமமின்றி கடக்கலாம்.

தொழில் வல்லுநர்கள் இல்லை வழிகாட்ட, வல்லுநர்களை ஆலோசனை கேட்க வலுவான பொருளாதாரம் இல்லை, அனுபவமும் இல்லை, ஆனால் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் மட்டும், மிக ஆழமாக உள்ளத்தில் பதிந்து விட்டாலே போதும், வெற்றி உறுதி.

விரைவாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நிறைவாக வளர வேண்டும் என்ற எண்ணத்தின் விதையை உள்ளத்தில் பதியம் போட வேண்டும்.

ஆடைகள் அழகாக இருக்க தரமான நூல் எப்படி முக்கியமோ அதுபோல ஆலமரம் போல் தழைக்க ஒரு மனிதனுக்கு தரமான நூல் (புத்தகம்) மிக முக்கியம். யாரிடமும் கிடைக்காத, மிகப்பெரிய அறிவுரைகள் நல்ல நூல்களின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். அவைகளில் இருந்து பெறக்கூடிய கருத்துக்கள்தான் உள்ளத்தில் ஊன்றப்பட்ட விதைக்கு ஊட்டச்சத்தாகும். ஊட்டச்சத்து இல்லாத குழந்தை ஊனமுற்றவனாவதுபோல உள்ளத்தில் உள்ள எண்ணமும் ஊனமுற்றுப்போகாமல் இருக்க இதுபோன்ற கருத்துக்கள் முக்கியம்.

வளர்ச்சிக்கு உதவுகிற வங்கிகள் உள்ளனவா? இல்லை வளர்ந்த பின் உதவுகிற வங்கிகள் உள்ளனவா? என்ற கேள்வி எழலாம். நியாயமான ஒன்றுதான். இரண்டிலும் எனக்கு அனுபவம் உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வங்கியில் 2500 ரூபாய் லோன் கேட்டபோது திருப்பிக் கட்டும் அளவுக்கு தங்களின் வருமானம் இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள் அன்று.

அதே வங்கியாளர்கள் இன்று என் அலுவலகம் வந்து 25 லட்சம் தருகிறோம். தேவைப்பட்டால் 2.5 கோடிகூட தருகிறோம் என்று கேட்கிறார்களே எப்படி? இரண்டும் நம்மிடமே!

அன்று அவர்கள் எதிர்பார்த்த தகுதி என்னிடம் இல்லைதான். ஆகவே, அவர்கள் நிராகரித்ததும் தவறில்லை. அத்துடன் நின்றுவிட வில்லையே!

முயற்சி, வெற்றிக்கான பயிற்சி, தேடல், தினமும் 16 மணி நேர உழைப்பு, சிறு சேமிப்பு, இவைகளை மந்திரமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொழிலுக்கு உதவியாக, சிறந்தவர்களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ள ஒரு வங்கியாளரின் தொடர்பு ஏற்பட்டபோது நமது திறமைக்கும், நம்மால் முடியும் என்ற ஊக்கத்திற்கும் உறுதுணையாக இருந்தார்.

அன்று அடமானங்கள் அவமானத்தைச் சரிகட்ட சென்றதுபோய், இன்று சிறு சேமிப்பால் சேர்த்த சொத்துக்களை வங்கியாளர்களிடம் அடமானமாக வைத்து அதிக வருமானங்களை உருவாக்க முடிகிறது.

வங்கியாளர்களை தேடிச் சென்ற காலம் மாறி வங்கியாளர்களே தேடி வரும் காலத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.

அடமானம் ஒரு அவமானம் என்பதை போக்குவோம். அதிக வருமானத்தை உருவாக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published.