நேரம் எப்படி வீணாகிறது

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் சுயசரிதை, “சிரித்து வாழ வேண்டும்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. முதல் முதலில் ஸ்ரீதர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது, தான் நடித்துக் காட்டிய ஒரு சீன் பற்றி அதில் குறிப்பிட்டிருப்பார்.

ஊசிக்குப் பயந்து ஒளிந்து கொண்ட குழந்தையைத் தேடும் கம்பவுண்டராக நடிக்க வேண்டும். குழந்தையைத் தேடுபவர்கள் பொதுவாக மேசைக்கு அடியில் – கட்டிலுக்குக் கீழே, கதவுகளுக்குப் பின்னால் என்று தேடுவார்கள். நாகேஷ், புதுமையாய் ஒன்றைச் செய்தார். தலையணைக்குக்கீழே, மேஜை டிராயருக்குள்ளே என்றெல்லாம் தேடியிருக்கிறார். ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு தேடக்கூடாத இடங்களில் எல்லாம் தேடுவதால் நிகழக்கூடிய காலவிரயத்தை அந்தக் காட்சியில் காட்டியிருப்பார் நாகேஷ்.

ஒரு மனிதன் தன்னுடைய நேரம் வீணாகிறது என்றால் அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். “GO GIVER” என்ற புத்தகத்தில், தொழிலதிபர் ஒருவரிடம் அவரைப் பார்க்க வந்த பார்வையாளர் கேட்பதாக ஒரு கேள்வி வரும். “உங்கள் நேரத்தை நான் வீணடித்துக் கொண்டிருக்கிறேனா” என்பதுதான் அந்தக் கேள்வி. உடனே அந்தத் தொழிலதிபர் சொல்வார், “அதற்கான சக்தி உங்களுக்குக் கிடையாது. என்னுடைய நேரத்தை நான்தான் வீணடிக்க முடியும். மற்றவர்களால் என் நேரம் வீணாகிறதென்றால் அது என் முழு அனுமதியுடன்தான் நிகழும்” என்பார் அவர்.

எனவே, நம்முடைய நேரம் நம்முடைய அனுமதியில்லாமல் வீணாக வாய்ப்பே கிடையாது.

மிகவும் பிஸியாக உள்ள மனிதருக்கு எல்லாவற்றுக்குமே நேரம் இருக்கும் என்றார் ஹென்றி ஃபோர்டு. ஒருவர் பிஸியாக இருக்கிறார் என்றால், தன்னுடைய நேரத்தை அவர் சரியாகத் திட்டமிட்டிருக்கிறார் என்றுதான் பொருள். பலரோ மிகச் சில வேலைகளை வைத்துக் கொண்டுகூட அவற்றை முடிக்க முடியாமல் திண்டாடுவார்கள். இதற்குக் காரணம் தங்கள் வேலைகளைத் திட்டமிடாமல், எதை முதலில் தொடங்குவது, அதையும் எங்கே தொடங்குவது எப்படி முடிப்பது என்று தெரியாமல் திண்டாடுவதுதான்.

கையில் இருக்கும் வேலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரத்தின் துவக்கத்தையும் திட்டமிட்டு, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தினால் வேலைகள் பற்றிய தெளிவான புரிதல் நம்மிடம் இருக்கும். எந்தத் தேதியில் – எந்த நேரத்தில் ஒன்றைத் தொடங்கி, எப்போது முடிப்பது என்பது பற்றிய மானசீக வரைபடம் உள்ளே உருவாகி இருக்கும். வேலைகளை ஏற்றுக் கொள்கிற போதே அவற்றை செய்து முடிப்பதற்கான நேரத்தையும் திட்டமிட்டுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் நாகேஷ் நடித்துக் காட்டிய உதாரணம், ஒழுங்கின்மையின் அடையாளம். பொருட்களை உரிய இடங்களில் வைக்காமல் சம்பந்தமே இல்லாத இடங்களில் வைப்பதும், தேடுவதிலேயே நேரத்தை செலவிடுவதும் நேரம் வீணாவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

ஒவ்வொரு பொருளுக்கும் உரிய இடத்தை நிர்ணயிப்பதும், விழிப்புணர்வுடன் அவற்றை உரிய இடங்களில் வைப்பதும், நீங்கள் எதிர்பார்ப்பதைவிடவும் அதிக அளவு நேரத்தை மிச்சப்படுத்தக் கூடியவை.

மூன்றாவதுதான் தள்ளிப் போடுகிறபழக்கம். சில வேலைகள் உட்கார்ந்தால் ஒரே மூச்சில் முடியும். சிலவேலைகளை சிறிது சிறிதாகத்தான் செய்ய முடியும். ஒரு வேலையைத் தொடங்கும் முன்னால், அது ஒரே மூச்சில் முடியக் கூடிய வேலையா, சிறிது சிறிதாக செய்ய வேண்டிய வேலையா என்பதை ஆராய்ந்து வகைப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரே மூச்சில் முடியக் கூடிய வேலையா….?உடனே முடியுங்கள்! சிறிது சிறிதாக செய்ய வேண்டிய வேலையா…? உடனே தொடங்குங்கள்!

அடுத்தது, அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள். இவர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம். எல்லோரிடமும் நல்ல பேர் எடுப்பது எப்போதும் முடியாது. குறிப்பிட்ட நேரத்தில், முன்னனுமதியுடன்தான் யாரையும் சந்திப்பது என்பதில் உறுதியாக இருங்கள். இது சிலருக்கு முதலில் கசக்கும். ஆனால் பழகப் பழக வருவதுதான் பழக்கம். சந்திப்புகளைத் திட்டமிடுவதன் மூலம் உங்களுக்கு மட்டுமின்றி சந்திக்க வருபவர்களுக்கும் நேரம் மிச்சமாகிறது என்பதை அவர்கள் விரைவிலேயே உணர்வார்கள்.

செல்ஃபோன் ஒரு வகையில் வரம். இன்னொரு வகையில் சாபம். முன்பெல்லாம் தொலைபேசியில் அழைப்பதென்றால், ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசவேண்டும். எனவே விரைவில் பேசி முடித்துவிடுவோம். இன்று செல்ஃபோன், நாம் போகிற இடமெல்லாம் நம்முடைய வினைப்பயன்போல் நம்மோடு வருகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் செல்ஃபோனை மிகச் சரியாகப் பயன்படுத்துவார். செல்ஃபோனைப் பாக்கெட்டுக்குள் வைக்க மாட்டார். மேசையில் தன்னருகே வைத்திருப்பார். பயணங்களில் காரில் இருக்கைமீது வைத்திருப்பார். இரண்டாவதாக அவருடைய செல்ஃபோனில் யாராவது அழைத்தால் ஒரேயொரு ‘பீப்’ ஒலிமட்டும்தான் வரும், எடுத்துப் பார்ப்பார். முக்கியமான அழைப்பென்றால் பேசுவார். இல்லையென்றால் விட்டு விடுவார். அதே போல பேசுகிறபோதும் சுருக்கமாகப் பேசுவார். ‘நல்லாயிருக்கீங்களா’ என்பதைத்தாண்டி உபரியாய் ஒருவார்த்தைகூட வராது. விஷயத்துக்கு நேராக வந்துவிடுவார். செல்ஃபோனை மிகச் சரியாகப் பயன்படுத்துகிற மிகச்சிலரில் இவர் ஒருவர்.

ஈமெயிலுக்கும் இதே அணுகுமுறை பொருந்தும். இவற்றை விழிப்புணர்வோடு கடைப்பிடித்து நேரத்தை சரியாகக் கையாள்வதால் என்ன கிடைக்கும் என்கிறீர்களா? நினைத்ததையெல்லாம் செய்வதற்குப் போதிய அவகாசம் இருக்கும். போதிய நேரம் இருப்பதால் உங்கள் வளர்ச்சி பலமடங்கு பெருகும். போதிய நேரம் இருப்பதால் பதட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. போதிய நேரம் இருக்கும்போது இன்னும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *