திரு. சசிகுமார் நேர்காணல்

கார் வாங்கம் முன்பாக கீச்செயின் வாங்கினேன்

சலியாத உழைப்பு! சரியான முனைப்பு!

திரு. சசிக்குமார், தன்னையும் தன் கனவுகளையும் நம்பி இளைய வயதிலேயே வெற்றியாளராய் வலம் வருபவர். ஐஸ்வர்யா மார்க்கெட்டிங் நிறுவனர். பல்லாயிரம் பேர்களுக்கு வெற்றிச் சூத்திரத்தைப் பரிசளித்து வாழ்வில் வளம் பெருக வழிகாட்டுகிறார். வாருங்கள். சசிகுமாரை சந்திப்போம்….

உங்களைப் பற்றி…..

நான் பிறந்தது, 15 வீடுகள் மட்டுமே இருந்த அரியநல்லூர் கிராமம். இது தாராபுரம் அருகே உள்ளது. சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்கும் பொறுப்பு என்னை சேர்ந்தது. என் தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே நான் கல்லூரியில் சேர்ந்தேன். சிறுவயதில் எங்கள் ஊரில் ஒருவர் நீல கலர் அம்பாசிடர் கார் வைத்திருப்பார். அதை அவர் ஓட்டிச் செல்வதைப் பார்ப்பேன். நாளை நாமும் உயர வேண்டும். சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் விளைய அந்தக் கார் ஒரு காரணம்.

சிறு வயதிலேயே உண்பது, உறங்குவது, பள்ளிக்குச் சென்று பாடம் படிப்பது என்ற தினசரி செயல்களில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. நான் 7ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே சாதனை படைக்க வேண்டும் என்ற தேடல் எனக்குள் ஏற்பட்டது. அந்த வயதிலேயே எங்கள் விவசாய நிலத்தில் விளைந்த பொருட்களை சந்தைப்படுத்துவேன். பின்பு கல்லூரியில் படித்தபோது அருகில் இருந்த ஜெராக்ஸ் கடையில் பகுதிநேர வேலையில் சேர்ந்தேன். அங்கு நான் பெற்ற சம்பளம் “300” ரூபாய். என் கல்லூரிப் பேராசிரியர் திரு. பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டுதல் ஒரு திருப்பு முனையாய் அமைந்து நேரடி விற்பனைத் துறையில் நான் கால்பதிக்க காரணமாய் இருந்தது.

ஆயிரம் கனவுகளை ஆரம்பித்து வைத்த உங்கள் அரும்புப் பருவம் பற்றி இன்னும் விரிவாக சொல்லுங்களேன்….

நான் பிறந்தது நடுத்தர குடும்பம்தான். ஆனால் வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற தேடல் எனக்குள் இருந்தது. என் தந்தை என் செலவுக்காக 2000 ரூபாய் கொடுப்பார். அதன் அருமையை எப்போது உணர்ந்தேன் தெரியுமா? 5 மணி நேரம் தினமும் கடுமையாக உழைத்து வெறும் 300 ரூபாய் சம்பளமாய் வாங்கிய பொழுதுதான். எதை செய்தாலும் புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன் நான். ஒரு பேனாவை வாங்கி கொடுத்தால்கூட அதில் அத்தனை பகுதியையும் பிரித்து மீண்டும் சேர்த்துப் பார்ப்பேன். நான் கல்லூரியில் படித்த காலத்தில்தான் செல்போன் நம் ஊரில் அறிமுகம் ஆனது. சிம் கார்டுகளை கமிஷன் அடிப்படையில் விற்கும் தொழிலை செய்தேன். என் பேராசிரியர்கள் அனைவருக்கும் அதை விற்பனை செய்தேன்.

எந்தப் பொழுதிலும் ஒரு விநாடிகூட நான் 5000 அல்லது 10000 சம்பளம் பெறவேண்டும் என்று கருதியது இல்லை. என்றேனும் ஒருநாள் நான் பிறருக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்றுதான் கருதினேன். அதற்காகவே கடுமையாகவும் சாமர்த்தியமாகவும் என் ஆரம்ப காலத்தில் உழைத்தேன்.

உங்கள் முயற்சிகள் வெற்றிபெற நீங்கள் சந்தித்த போராட்டங்கள் எப்படி இருந்தன?

என் கல்லூரியில் நான் முதலாமாண்டு மாணவனாக சேர்ந்த பொழுது வெறும் 300 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். மூன்றாம் ஆண்டு கல்லூரி முடிக்கும்போது மாருதி காரில் வலம் வந்தேன். இதை சில பேராசிரியர்கள் பாராட்டினார்கள். ஆனால் பலர் எதிர்த்தார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் என்னை கேலியும் கிண்டலும் செய்தவர்களுக்கு நான் இன்று நன்றி சொல்கிறேன். முதலிலேயே கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வசதியில்லை. இருப்பினும் காருக்கான கீச்செயின் வாங்க பணம் இருந்தது. கார் வாங்கும் முன்னே சாவிக்கான கீச்செயின் வாங்கினேன். பலரும் கேலி செய்தார்கள். இன்று என் உறவினர், நண்பர் வட்டத்தில் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவன் நான் தான். என் வேலைக்குத் தேவையான அலுவலகம் அமைக்க முயற்சித்த பொழுது என்னை நம்பி வாடகைக்குக்கூட இடம் கொடுக்க யோசித்தார்கள். இன்று 2 கிளைகள். 30,000 வாடிக்கையாளர்கள். 5 நிறுவன தயாரிப்புகளோடு நின்றுவிடாமல் மேலும் கிளைகள் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளேன்.

பின்னடைவுகள், விமர்சனங்கள் போன்றவற்றை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் எண்ணியதை எட்டிப்பிடிக்க உற்சாகமாய் முயன்றதே என் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

நீங்கள் செய்துவரும் நேரடி விற்பனை (Direct Selling) என்பது என்ன?

நேரடி விற்பனை என்பது பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையிலிருந்து எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பதே ஆகும். உதாரணமாக நீங்கள் ஓர் இடத்தில் ஆடைகள் வாங்குகிறீர்கள் அல்லது உணவு அருந்துகிறீர்கள். உங்களுக்கு திருப்தியாக இருந்தால் அதை மற்ற நபர்களுக்கும் பரிந்துரைக்கிறீர்கள். இந்த பரிந்துரை வெறும் சேவையாக மட்டுமே இருக்கிறது. இதே போல் நாங்கள் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்குகிறோம். இந்த சேவையை அந்த வாடிக்கையாளர் மற்ற வாடிக்கையாளருக்கு பரிந்துரைத்தால், அதனால் ஏற்படும் விற்பனையில் அவருக்கும் லாபத்தில் ஓர் பங்கு வழங்கப்படும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் உலகத்தின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்டாலும் அதை நேரடியாக வாடிக்கையாளருக்கு கொண்டு வந்து சேர்ப்பதே எங்கள் நோக்கம்.

உங்களைப் போல தேடல் உள்ள இளைஞர்கள் எப்படி ஜெயிக்கலாம்?

இளைஞர்களுக்கு முன்னேற வேண்டும் என்ற தேடல் இருக்கிறது. சுயமாக தொழில் தொடங்க மிக முக்கியமாக தேவைப்படுவது மூன்று. (1) முதலீடு (2) நடைமுறை சிக்கல் (3) நஷ்டத்தை எதிர்கொள்வது. இதை மனதில் கொண்டு எங்கள் நிறுவனம் பெரும்பாலான இளைஞர்களுக்கும் இந்த மூன்றையும் ஏற்படுத்தித் தருகிறது. தொழில் துவங்க ஆசையுள்ள இளைஞர்களுக்கு நான் முதலீடு செய்திருக்கிறேன். அவர்கள் செய்யத் தேவையில்லை. நடைமுறைச் சிக்கல்களான அலுவலகம் அமைப்பது, கணக்கு பார்ப்பது என அனைத்தையும் எங்கள் அலுவலகமே செய்யும். வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பும் தேடலும் தான் முக்கியம்.

உங்களை ஊக்கப்படுத்துவது எது? உங்களது வெற்றிக்கு பெரிதும் ஈர்த்த மனிதர்கள் யார்?

இயல்பாகவே எனக்கு மேலாண்மை மிகவும் பிடிக்கும். பள்ளியில் படிக்கும்போது வகுப்பு லீடராக வேண்டும் என்று ஆசைப்பட்டு லீடராக இருந்தேன். கல்லூரியில் NSS லீடராக இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைமைப் பண்போடு இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை ஊக்கப்படுத்தியது. புத்தகங்கள் அதிகமாகப் படிப்பேன். சாதாரண ஹோட்டலில் பென்ச் துடைத்த ஓபராய், பெட்ரோல் கேனை விற்று இன்று முதல் கோடீஸ்வரராக இருக்கும் அம்பானி, சாதாரண சுண்டல் விற்று இன்று சாதனை படைத்திருக்கும் V.G. பன்னீர்தாஸ் என என்னை கவர்ந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அடிப்படை காரணம் ஒன்று தான். இன்று உலகின் சாதனை படைத்தவர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் பரம்பரை பரம்பரையாக சாதனை படைத்தவர்கள் குறைவு. அப்பா உணவுக்கு வழியில்லாமல் இருந்திருப்பார். அவர் மகன் கோடீஸ்வரன் ஆகியிருப்பார். ஒரு தலைமுறைதான் சாதனை படைத்திருக்கிறது. இதைப் பார்க்கிறபொழுது என் தலைமுறையும் சாதனை படைக்க வேண்டும் என்கிற எண்ணம் என்னை மேலும் ஊக்கப் படுத்துகிறது. எந்த சோதனையிலும் நான் துவளாமல் நான் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் எழக் காரணம், எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். என் ஒரு கார் சக்கரம் பழுதடைந்தால் கூட அடுத்த கணம் மீத மூன்றும் நலமாக இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைவேன்.

இளைஞர்கள் எந்த வயதில் வாழ்க்கைக்கான திட்டமிடுதலை துவங்க வேண்டும்?

நான் 7ஆம் வகுப்பு படிக்கும் பொழுது தரமில்லாத அரிசி சமைத்து உண்போம். அப்போதே வாழ்க்கைக்கான திட்டமிடல் துவங்கியது. மாணவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான திட்டமிடுதலை 10 ஆம் வகுப்பு படிக்கிற பொழுதே துவங்க வேண்டும்.

விற்பனை செய்யும் பொருளை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பது எப்படி?

நம் பொருளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நமக்கு முதல் தேவை நம் கோட்பாடு என்னவென்று அவர்களுக்குத் தெளிவாக புரியவைப்பது. அவர்கள் நம் பொருட்களை வாங்குவது கூட இரண்டாம் பட்சம். நம் நோக்கம் அவர்களுக்குப் புரியும் விதமாய் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். இரண்டாவது நம்பிக்கை. அடுத்து அவர்கள் தேவையறிந்து நாம் சேவை செய்ய வேண்டும்.

வருங்கால திட்டம்……

இன்று 2 கிளையாக இருக்கும் என் நிறுவனம் 45 கிளைகளாக பெருக வேண்டும். ஓர் நலமான இல்லத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் உலகின் எந்த மூலையில் தயாரிக்கப்பட்டாலும் அது வாடிக்கையாளரின் கதவு அருகே நேரடியாக கொண்டு சேர வேண்டும். எங்கள் நிறுவனம் சார்பில் தற்பொழுது 5 பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கிறோம். இவை வருங்காலத்தில் 20 பொருட்களாக பெருக வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவே என் பெயர் சொல்லவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *