வீட்டுக்குள் வெற்றி

உங்கள் குழந்தை மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?

உங்கள் குழந்தைகளின் குறைகளை உறவினர்களிடம் நண்பர்களிடம் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை. இதனால் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்கள் மீது ஒரு வெறுப்பும்தான் ஏற்படப்போகிறது

என் முன்னால் அவனை நிர்வாணமாக நிறுத்தியிருந்தார்கள்.

சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் நடத்துகிற மாணவர்களுக்கான ஜாலியாக படிக்கலாம் ஈஸியாக ஜெயிக்கலாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற பெற்றோர்கள் அந்த நிகழ்ச்சி அரங்கிலேயே நாங்கள் வழங்குகிற யோசனைகளால் நம்பிக்கை பெற்று தங்கள் குழந்தைகளிடம் உள்ள குறைகளை என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி தீர்வு பெற விரும்புவதுண்டு. அன்றும் அப்படித்தான் நடந்தது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி முடிந்து பங்கேற்பாளர்களுடன் நான் பேசிக் கொண்டிருக்கையில், உற்சாகமா? வருத்தமா? என என்ன உணர்ச்சி என்றே கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு தந்தை தயங்கியபடிய இருந்த தன் மகனை இழுத்துக்கொண்டு வந்து என் முன் நிறுத்தினார்.

இவன் என் பையன். 10வது படிக்கிறான் என்றவுடன் ஹாய் என்று நான் அவனை உற்சாகமாய் பார்க்க, “ஒன்னுக்கும் லாயக்கில்ல. புக்கை கையில் எடுக்கிறதே இல்லை. எல்லா சப்ஜெக்ட்லையும் ஜஸ்ட் பாஸ். புரோகிராமுக்கு கூட வரமாட்டேன்னு ஒரே அடம். நான்தான் இழுத்துட்டு வந்தேன். இவனை நீங்கதான் ஏதாவது பண்ணணும்” என்று ஆரம்பித்தவர் நான் ஸ்டாப்பாக பேசிக் கொண்டிருந்தார்0 என்னை எதுவும் பேச விடாமல்.. அந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்ள அவகாசம் தராமல்.

முதலில் அவன் சட்டையை கழற்றினார். எங்களை சுற்றி தங்கள் குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தவர்கள் அவரையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி அவர் கொஞ்சமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர் பாட்டிற்கு தொடர்ந்தார். பிறகு குழந்தையின் பனியனை கழட்டினார். இன்னும் சிலர் சில நொடிகளிலேயே தங்கள் குழந்தைகள் பற்றிய அத்தனை குறைகளையும் சொல்லி குழந்தைகளை அம்மாணமாக்கி என் முன் நிறுத்திவிடுவார்கள். அன்றும் அதுதான் நடந்தது. அந்தக் குழந்தையை விட நான் அதிகம் அவமானப்பட்டேன்.

பயிற்சி வகுப்பில் நாங்கள் பங்கேற்பாளர்களோடு ஏற்படுத்திக் கொண்டுள்ள நெருக்கம் கூட இந்த மாதிரியான செயல்களால் அழிந்து விடுகிறது. நல்ல மார்க் எடுக்கனும்னு நினைக்கிறான். இவனுக்கு உங்க வழிகாட்டுதல் வேணும் என்று சொல்லி அறிமுகப்படுத்தலாம்.

என் பையன் புத்திசாலிதான். ஆனால் கொஞ்சம் விளையாட்டுதனமா இருக்கிறான் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் குழந்தைகளை என்னிடம் அறிமுகப்படுத்த விரும்பும் பல பெற்றோர்கள் குழந்தைகளை பற்றி குறையான குறை சொல்லி படுத்திவிடுகிறார்கள்.

இதனாலேயே என்னை சந்திக்க குழந்தைகளோடு வருபவர்களிடம், குழந்தைகள் தனியாகவும் பெற்றோர்களோடு தனியாவும் நான் பேசுவது வழக்கம். கவுன்சிலிங் ரூமில் பெற்றோர்களை சந்தித்துவிட்டு குழந்தைகளை அழைத்தால், பெற்றோர்கள் குறை சொன்னால் குழந்தையின் முகம் எப்படி வாடுமோ அதே வாட்டத்தோடுதான் உள்ளே வருவார்கள். பிறகுதான் புரிந்தது தன் பெற்றோர் தன்னைப்பற்றி யாரிடமும் பாராட்டிப் பேசியதில்லை என்றே பல குழந்தைகள் என் முகத்தில் அறைந்து சொன்னார்கள். இன்னும் நான் செய்யத்தவறிய பணிகளை எனக்கு உணர்த்தினார்கள்.

குழந்தையின் பிரச்சனைகளை அவர்களை விட்டே மனம் விட்டு பேசுகிற அளவிற்கு பேச வைக்க எங்களால் முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லாதபடி பல பெற்றோர்களின் இவ்வகை அறிமுகங்கள் அமைத்து விடுகிறது.

கவுன்சிலிங் என்றால் வரமாட்டார்கள் என்று எதையாவது சொல்லி அழைத்து வந்து திடீரென்று மிரள மிரள என் முன்னாள் உட்கார வைத்து குற்றப்பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அழாத இப்ப என்ன சொல்லிட்டேன் எல்லாம் நடிப்பு சார் என்பவர்களும் உண்டு. இப்படி சிலர் நடந்து கொள்ளும்போது எனக்கு வியட்நாமில் விழுந்த குண்டில் தன் ஆடை எரிந்து கதறியபடி ஓடிவரும் குழந்தையின் காட்சி ஏனோ நினைவுக்கு வரும்.

பெற்றோர்கள் வீசுகீற சில வார்த்தைகள் ஆசிட் முகத்தில் செய்கிற வேலையை குழந்தைகளின் மனதில் செய்துவிடும்.

என்னிடம்தான் என்றில்லை கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் தன் குழந்தைகளைப் பற்றிய குறைகளை சொல்லி தன் மனதில் உள்ள பாரத்தை இறக்கிவிடுவார்கள். குழந்தைகள் மனதில் பாரத்தை ஏற்றிவிடுவார்கள்.

உன்னை நினைச்சுத்தான் உங்கப்பா கவலைப்படறார் என்று வீட்டிற்கு வருபவர்கள் சொன்னதற்கு பிறகுதான் வீட்டில் உள்வர்கள் செய்துள்ள எல்லை தாண்டிய பயங்கரவாதம் தெரியவரும்.

குழந்தை யாரிடம் பிரியமாக இருக்கிறதோ அவர்களிடம்தான் முதலில் சொல்வார்கள். குழந்தை மாமாவிடம் பிரியமாக இருக்கிறது என்றால், மாமா வீட்டிற்குள் நுழையும்போது உன் மருமகன் இன்னிக்கு என்ன செய்தான் தெரியுமா? என்று கச்சேரியை ஆரம்பித்துவிடுவார்கள். அவர் ஏதாவது விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் நீதான் உன் மருமகனை மெச்சிக்கனும் என்று ஆரம்பித்து இன்னும் இரண்டு குறைகளை சொல்லி அவர்களையும் சீக்கிரமே குழந்தையை வெறுக்க வைக்கும் எல்லா முயற்சிகளையும் தொடங்கிவிடுவார்கள்.

சில நேரங்களில் காலாண்டுத் தேர்வில் என்ன மார்க்? என்று கேட்டு வீட்டுக்கு வருபவர்கள் கூட துகில் உரிவதுண்டு. இது கூட ஒருவகை சாடிஸம்தான்.

உறவுக்காரர்களிடம் இப்படி அவமானப்படும் குழந்தைகள் அவர்களிடம் எப்படி பழகும்? யாரோடும் சரியாக பழகுவதில்லை என்று பிறகு குறையும் பட்டுக் கொள்வார்கள்.

மற்றவர்களிடம் சொல்வதுதான் என்றில்லை உடன் பிறந்தவர்களிடம் சொல்வதும் அவர்களோடு ஒப்பிட்டு பேசுவதும் கூட அம்மணப்படுத்துவதுதான்.

சிறுவயதிலிருந்தே அங்கிளுக்கு டான்ஸ் ஆடிக் காமி.. ரைம்ஸ் சொல்லிக்காமி.. என்று பல பெற்றோர்களுக்கு குழந்தைகள் பெருமையடைவதற்கான வழிமுறைகளாக மட்டுமே இருக்கிறார்கள்.

வளர்ந்த பிறகு இவர்கள் காட்டி பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களில் இல்லாமல் வேறு ஏதாவது விஷயங்களில் குழந்தைகள் ஈடுபாடு காட்டினால் அவர்களை துவம்சம் செய்து விடுகிறீர்கள்.

பிதாவே இவர்களை மன்னியும் இவர்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாதிருக்கிறார்கள் என்று விட்டுவிட முடியாது. கொஞ்சம் யோசித்தாலே இதனால் குழந்தைகள் படுகிற வலியை உணர்ந்து விட முடியும்.

உங்கள் கணவரை அவரது உறவினர்களிடம் அல்லது உங்கள் மனைவியை அவரது உறவினர்களிடம் இது போல விட்டுக்கொடுத்து பேசினால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். பிறகு உங்களுக்கே புரியும் இதனால் குழந்தைகள் எந்த அளவிற்கு காயப்பட்டிருப்பார்கள் என்பது.

குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள் என்று ஹோட்டலுக்கு ஹோட்டல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இன்னும் கூடவா நமக்கு புரியவில்லை.

உங்கள் குழந்தைகளின் குறைகளை உறவினர்களிடம் நண்பர்களிடம் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை. இதனால் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்கள் மீது ஒரு வெறுப்பும்தான் ஏற்படப்போகிறது.

இதனால் ஏற்பட்ட இடைவெளியால் உங்களைப்பற்றிய குறையோடு வளர்வார்கள். பிற்காலத்தில் உங்கள் குறைகளை உங்களிடமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். குறை சொல்வதை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்வர்கள்.

உங்க கிளாஸ் அட்டென்ட் பண்ணதுக்கு பிறகும் ஒரு மாற்றமுமில்லை எனறு சிலர் என்னையும் சேர்த்து நெளிய வைப்பதுண்டு.

இத்தகைய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எங்களைப் போன்றவர்கள் வழங்கும் பயிற்சி ஓட்டைப்பானையில் ஊற்றிய தண்ணீராகிவிடுகிறது. நாங்கள் என்னதான் உலகையே வெல்ல முடியும் என்று நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும் வழக்கம்போல இந்த கிளாஸுக்கு கட்டின பீசும் தண்டம்தான் என்று ஒரே வார்த்தையில் குழந்தைகளின் உற்சாகத்தை வடித்துவிடுவார்கள்.

நீங்கள் மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்கிற எல்லாம் மனம் விட்டு பேசினால் நீங்களே சரி செய்து விடுகிற விஷயங்கள்தான். பல நேரங்களில் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் குழந்தைகள் மனதில் இருக்கும் காயங்கள் அவர்களை செய்ய விடுவதில்லை.

உண்மையிலேயே உங்களுக்கு குழந்தைமேல் அக்கறை இருந்தால் தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் ஆடைகளைக் களையாதீர்கள்.

உங்கள் குழந்தைகளை நீங்கள் நேசித்தால் மற்றவர்களிட உங்கள் குழந்தைகளின் சிறப்புகளை மட்டுமே பேசுங்கள். இது நீங்கள் வீட்டிற்குள் பெற்றே ஆக வேண்டிய வெற்றி
வீட்டிற்குள் வெற்றி பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள… kvideaplus@yahoo.co.in

6 Responses

  1. bhuvana pudukkottai

    HIIIIIIIIIIIIIIIIII RAJA ANNA YOUR BOOKS ARE VERY SUPER.PLSSSSSSS WRITE MORE BOOKS FOR STUDENTS.ALL THE BEST

  2. udhayakkrishna

    Hi uncle ur books r so nice to read. Please write many books

  3. prasannanivas

    hi sir, see your books very suuuuuuuuuuuuuper.

  4. Balaji

    i read ur books. they r good. thanks and plz continue to change the hrts of parents and kids. thnks.!!!

  5. smythli

    neengal solvadhu 100 ku 100 unmai, kandipa edhu sirandha ariurai than, yaar medho ulla kovathai kuzhandhaikalidam katta kudadhu, naama edhir pakum ellathaum avargal seiyanumnu ninaikardhu kandipa ariyamai thanu sollanum, namaku edhu thevayo adhai mattum pesinal podhum nu ninaika arambithale namaku vendiyadhai kozhaindhaigaligam peralam.

  6. P.Anbarasan

    Sir,
    Recently i read your book.Nootrukku Nooru. This book really wonderful. This book should read not only by students.Many parents also should read. You given very good examples for each and every book. i really congralaute you sir.

    P.ANBARASAN
    VELLORE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *