நீங்கள் எத்தனை வருஷத்து மாடல்

– ஸ்ரீ கிருஷ்ணா

நீங்கள் காரோ, டு வீலரோ வைத்திருந்தால், அதை விற்கப்போகும்போது உங்களிடம் கேட்பார்கள், “இது எந்த வருஷத்து மாடல்?” என்று.

விற்பனைக்கு வந்த வருஷத்தையும் அதன் பயன்பாட்டையும் வைத்துதான் அதற்கு மதிப்பு.

உங்கள் மதிப்பை நீங்கள் அறியவேண்டும். அதனால்தான் உங்களைக் கேட்கிறேன். நீங்கள் எந்த வருஷத்து மாடல்?

கார் விற்பனையான வருடத்தை போல நீங்கள் பிறந்த வருடத்தைச் சொல்விடாதீர்கள். உங்கள் வயதை வைத்து அல்ல உங்களின் வளர்ச்சியை வைத்துதான் மாடலை முடிவு செய்ய வேண்டும்.

மாடலை தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிறீர்களா?

நீங்கள் வைத்திருக்கும் செல்போன் எந்த வருஷத்து மாடல்? நிச்சயம் இரண்டு வருடத்திற்கு முன் வந்த மாடலாக இருக்காது.

முதன் முதல் என்ன செல்போன் வைத்திருந்தீர்கள்? அடுத்து என்ன செல்போன் வாங்கினீர்கள்? என்று கொஞ்சம் யோசித்து பட்டியலிடுங்கள். உடைந்தது, தொலைந்தது என்று என்ன காரத்திற்காக செல் வாங்கினாலும் அதே மாடலை நீங்கள் வாங்கவில்லை. லேட்டஸ்டான ஒன்றைத்தான் வாங்கினீர்கள். ஏன்?

எழுதுகிற எழுத்தை வைத்து இது எந்த நூற்றாண்டு எழுத்து வடிவம் என்று கண்டறிகிறார்கள். அதுபோல உங்கள் செயல்பாடுகளை வைத்து நீங்கள் எந்த வருஷத்து மாடல் என்று கண்டறிந்துவிடலாம். கண்டறிவதைவிடவும் முக்கியம் உங்களை லேட்டஸ்ட் மாடலாக மாற்றிக்கொள்வது.

டு வீலரை மாற்றிக்கொள்கிறோம். செல்போனை மாற்றிக்கொள்கிறோம். ஆடைகளில் கூட லேட்டஸ் டிசைன் களைத்தான் விரும்புகிறோம். நம்மைத்தான் நாம் மாற்றிக் கொள்வதே இல்லை.

பழைய மாடல் காரில் சென்றால் அவரை வித்தியாசமாகப் பார்க்கிறோம். பழைய மாடல் செல்போன் வைத்திருந்தால் அவரை ஏற இறங்கப் பார்க்கிறோம். ஆனால், நம்மை நாம் பழைய மாடலாக வைத்திருப்பதை மட்டும் பெருமையாக நினைக்கிறோம்.

கருவிகள் மட்டுமல்ல அதைப் பயன்படுத்தும் நாமும் லேட்டஸ்டாக இருக்க வேண்டாமா? நம் உடைகள் மட்டும் நவீனமாக இருந்தால் போதாது நம் சிந்தனைகளும் நவீனமாகவும் நம்பிக்கை மிக்கதாவும் இருக்க வேண்டும்.

நீங்களே முடிவு செய்யுங்கள் நீங்கள் எந்தக் காலத்து மாடல் என்று? தாழ்வு மனப்பான்மையும் விரக்தி மனப்பான்மையும் கொண்டவராக இருந்தால் நீங்கள் காலாவதியான, அரதப்பழசான மாடல்.

எதைப் பேசினாலும் என்னால் முடியாது இதெல்லாம் நடக்காது என்று பேசுபவராக இருந்தால் நீங்கள் ரொம்பப் பழைய மாடல்.

மிகப்பிரகாசமான எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளும் உறுதியும் கொண்டவராக செயல்பட்டால் நீங்கள் லேட்டஸ்ட் மாடல்.

உலக அளவில் வெற்றிபெற முயற்சி செய்தால் நீங்கள் ப்யூச்சர் மாடல்.

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எந்த வருஷத்து மாடல், எப்படிப்பட்ட மாடல்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *