புதுயுகக் குழந்தைகளுக்கான புதையல்!!!

பாட்டி சொல்லைத் தட்டாதே!

குழந்தைகளே குட்டிப் பாடல்கள்தான். ஒவ்வொரு குழந்தையும் கவிதைத்தாள். குழந்தைகளை வளர்ப்பதாகச் சொல்லி, அந்தக் கவிதைத் தாள்களை பொட்டலம் மடிக்கப் பயன்படுத்துகிறது உலகம். உலகெங்கும் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குள் இருக்கும் படைப்பாளிகளைத் தொட்டு

வெளிக்கொணரத் தூண்டுகோலாய் ஒரு வெளியீடு வந்திருக்கிறது.

தகவல் யுகக் குழந்தைப் பாடல்கள் என்ற பெயருடன், மெல்லினம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதையல், ண் பாட்டி.

ஐபாட் யுகத்தின் தாளத்தில், விறுவிறுப்பான 35 குழந்தைப் பாடல்கள் கொண்ட குறுந்தகடு, மின்னோவியங்கள் மின்னுகிற கண்கவரும் வடிவமைப்பில் அதே பாடல்களின் தொகுப்பு, ஆங்கிலச் சொல்லாக்கத்தில் அதே தமிழ்ப்பாடல்கள், பட அகராதி என்று பலவும் அடங்கிய புதையல் இது.

“ஆக்கல் – மேலாண்மை – ஆளுமைத் திறன்களோடு மாணவர்களை உருவாக்குவது எங்கள் கனவு” என்ற பிரகடனத்தோடு தொடங்கியிருக்கிறார்கள், ‘மெல்லினம்’ நிறுவனத்தை உருவாக்கியிருக்கும் கார்க்கி – நந்தனா தம்பதியர்.

கார்க்கி, கவிப்பேரரசு வைரமுத்துவின் மூத்த மகன். எந்திர அறிவும், மந்திரத் தமிழும் கலந்த கலவையாய் மலர்ந்த இளைஞர்.

அன்றாட வாழ்வின் அம்சங்கள் தொடங்கி, பிரபஞ்ச உண்மைகள் வரை பிள்ளை மொழியில் பேசியிருக்கிறார்.

அஞ்சு பூதம் தெரியுமா?
அஞ்சு பூதம் தெரியுமா?
ஒண்ணு ரெண்டு மூணு நாலு
அஞ்சு பூதம் தெரியுமா?

வானம் ஒரு பூதம் – அதில்
மிதந்திடும் மேகம்
தண்ணி ஒரு பூதம் – அது
தீத்திடுமே தாகம்
நெருப்பு ஒரு பூதம் – அதில்
சமச்சிடுவோம் சாதம்
காத்து ஒரு பூதம் – அது
சிலுசிலுன்னு ஊதும்
பூமி ஒரு பூதம் – அதில்
பதிச்சிடுவோம் பாதம்

என்று பஞ்சு பூதங்களையும் குழந்தைகளின் நண்பர்களாக்கும் பாடல், இதற்கோர் உதாரணம்.

பாட்டின் இசை வடிவத்துடன் போட்டி போடுகிறது புத்தக வடிவமைப்பு. சரவணகுமாரின் ஓவியங்கள் சங்கீதம் பாடுகின்றன. பவானி சங்கரின் வடிவமைப்பு பரதமே ஆடுகிறது.

பாடல்களைக் கேட்டுக்கொண்டே, தமிழிலோ ஆங்கிலத்திலோ படித்துக்கொண்டே ஓவியங்களை ரசித்துக் கொண்டே தங்களுக்கான மாய உலகை குழந்தைகள் இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் தோறும் படைத்துக் கொள்வார்கள்.

ரிஸ்வானின் இசையில், இளம் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். “சுண்டக்கா சுண்டெலி சுண்டல் தின்னும் சுண்டெலி” பாடலின் கற்பனை பிள்ளைகளை பரவசப்படுத்துவது போலவே பெரியவர்களின் இதழ்களிலும் புன்னகையை மலர்த்தும்.

கட்டெறும்பு சித்தெறும்பு கால்பந்தாட்டமாய் போட்டி பற்றிய பாட்டு சாக்குப் போக்கு சொல்லும் மனப்பான்மையை அழகாக சித்தரிக்கிறது.

‘கதை தெரியுமா – உனக்கு
கதை தெரியுமா
குட்டிப்பொண்ணு, குட்டிப்பொண்ணு
கதை தெரியுமா’

என்று ஹெலன் கெல்லர் கதை நம்பிக்கையூட்டுகிறது. பாரதி, சார்லி சாப்ளின், கல்பனா சாவ்லா, விஸ்வநாதன் ஆனந்த், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பல்துறை வெளிச்சங்களும் இதில் பரிமளிக்கின்றனர்.

“குளிருது குளிருது” பாடல், கேள்வி-பதில் பாணியில் அமைந்திருக்கிறது.

“குளிர்காலம் வந்தாச்சு பார்
குருவிக்கெல்லாம் குளிருது பார்
குதிரையெல்லாம் நடுங்குது பார்
என்ன பண்ணலாம்!
குருவிக்கெல்லாம் வெந்நீர் ஊத்திக்
குளிக்க வைக்கலாம்
குதிரைக்கெல்லாம் போர்வை போத்திப்
படுக்க வைக்கலாம்”
என்று குழந்தைகளின் கற்பனைத் தளத்தில் நின்று எழுதியிருக்கிறார் கார்க்கி. மொழியோடும் படைப்பாற்றலோடும் குழந்தைகள் மிக எளிதில் நெருங்கி வருவதற்கு ண் பாட்டி ஒரு அற்புதமான வழி. மற்ற தேசங்களின் குழந்தைகள் போல் தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்கும் முதல் பாடலே முத்திரைப் பாடலாக அமைந்துவிட்டது.

இங்கிஷ் பாப்பா
ஹலோ சொல்லும்
ஸ்பேனிஷ் பாப்பா
ஹோலா சொல்லும்
சைனீஸ் பாப்பா
நீஹாவ் சொல்லும்
இத்தாலிப் பாப்பா
சியாவ் சொல்லும்

ஃபிரெஞ்சுப் பாப்பா
சல்லு சொல்லும்
உருதுப் பாப்பா
சல்லாம் சொல்லும்
காங்கோ பாப்பா
மேம்போ சொல்லும்
ஸ்வாஹிலி பாப்பா
ஜம்போ சொல்லும்

ரெண்டு கைய
ஒண்ணு குவிச்சு
தமிழ்ப் பாப்பாதான்
வணக்கம் சொல்லும்…..

வணக்கம் சொல்வது, தன் பாரம்பரியத்தின் தனி அடையாளம் என்கிற பெருமித உணர்வை பிள்ளைகள் மனதில் ஏற்படுத்தும் இந்த அற்புதமான பாடலை உணர்ந்து பாடியிருக்கிறார் ரிஸ்வான்.

நம் வீட்டுக் குழந்தைகளின் படைப்புத்திறன் மலர, மொழித்திறன் வளர, ண் பாட்டி நல்ல துணை. இல்லங்கள் தோறும் இருக்க வேண்டிய பாட்டி, ண் பாட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *