“அன்று கலாமுக்கு காரோட்டி! இன்று மாணவர்களுக்கு வழிகாட்டி!!”

– தூரிகா

பத்தாம் வகுப்பு தோல்வியடைந்து, பட்டங்கள் எல்லாம் எதற்காக என்று பட்டாளத்தில் சேர்ந்த இளைஞர் கதிரேசன், ராணுவத்தில் பணியாற்றுகிற போது இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளார். அப்படி ஹைதராபாத் வந்த

கதிரேசனுக்கு DRDL (Defence Research Development Laboratory) இன் இயக்குனருக்கு கார் ஓட்டும் வேலை. நம் அனைவரையும் கனவு காணச் சொல்லி, ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையும் நம் பக்கம் ஈர்த்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் DRDL -ன் இயக்குனர். இந்த மாபெரும் சாதனை மனிதனுக்கு கார் ஓட்டப் போகிறோம் என்பதை கனவிலும் அறிந்திருக்கவில்லை கதிரேசன். தன் முதுகுக்குப் பின்னால் வருங்கால இந்தியாவின் நம்பிக்கையை அமர்த்தி 6 ஆண்டுகள் நகர்வலம் வந்தவர்.

அன்று, இவர் கலாமிற்கு கார் ஓட்டுநர்! இன்று? கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியர்!

விருதுநகர் சங்கரபாண்டியபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ய.கதிரேசன். சிறு வயது முதலே தோல்விகள் இவரை விரட்ட ஆரம்பித்தன. இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவுடன், படிப்பை புறம் தள்ளி பட்டாளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வரலாற்று சிறப்புமிக்க மனிதருக்கு கார் ஓட்டுநராக பணியாற்றி இன்று அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுப் பாடம் நடத்தும் உதவி பேராசிரியரானது எப்படி?

கலாம் அவர்கள் DRDL இயக்குனராக இருந்த காலத்தில் அங்கே பணியாற்றுபவர் களிடையே கூட்டங்கள் அமைத்து எழுச்சிமிகு கருத்துகளை எடுத்துரைப்பாராம். அப்பொழுது தூரத்தில் இருந்து அம்பு எய்யும் கலையை துரோணரிடம் இருந்து கற்றுக்கொண்ட ஏகலைவன் போல், கலாம் சொன்ன நம்பிக்கை மந்திரங்களை தொலைவில் இருந்தே உள்வாங்கிக் கொண்டார் கதிரேசன்.

படிப்பை உதறிவிட்டு பட்டாளம் வந்த கதிரேசனுக்கு கலாமின் வார்த்தைகள் நம்பிக்கை ஊட்டின. கல்வியின் முக்கியத்துவத்தை கலாம் அவர்கள் எடுத்துரைத்தபோது பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடர்ந்தார். இன்று இவர் பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., எம்.ஃபில் என்று பல பட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கலாம் அவர்களிடம் பணியாற்றுகிறபோது பரிட்சை என்று சொன்னால் எந்த நாளும் விடுமுறை உறுதி தானாம். ஒருமுறை தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்பட்டபோது விமான டிக்கட் எடுத்துக் கொடுத்து தேர்வெழுத அனுப்பிவைத்த தன் மேல் அதிகாரி கலாம் அவர்களை இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறார் கதிரேசன்.

இன்று வடசென்னையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று உதவிப் பேராசிரியராக விளங்கும் கதிரேசன், கடந்து வந்த பாதைகள் முழுவதும் நிரம்பி கிடப்பது தளராத மனம், கடின உழைப்பு. ராணுவத்தில் பணி ஓய்வு பெற்றபின் TRB (Training Recruitment Board)இல் பயிற்சி அலுவலராக தன் பணியை துவக்கினார். அன்று ஸ்டெயரிங் பிடித்த கைகள் பின்னாளில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ்கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறது. பிறகு, கயத்தாறு வட்டார வளமையம் மேற் பார்வையாளராக இருந்து இன்று பேராசிரியராய் உயர்ந்துள்ளார்.
பத்தாம் வகுப்பில் இவர் தோல்வியுற்ற பாடம் ஆங்கிலம். ஆனால் இன்று இவர் ஆங்கிலத்தில் எழுதிய, ‘Zamindari system in Tirunelveli district’ என்ற நூல், இன்று பலராலும் பாராட்டப் பட்டுள்ளது.

விருதுகளும் பாராட்டுகளும் இவருக்கு குவிந்தபோதும் கதிரேசன் உள்ளம் குளிர்ந்த விருது “கலாம் அவர்களிடம் பணியாற்றிய பொழுது அவர் வழங்கிய சிறந்த கடின உழைப்பாளி என்ற விருதும் 250 ரூபாய் பணமும் தானாம்”. ஊக்கமும் உற்சாகமும் கார் ஓட்டுநரை கல்லூரி பேராசிரியராக்கி இருக்கிறது!
கூட்டங்களில் கேட்கும் கருத்துக்களை கைதட்டி ரசித்து மகிழ்வோர் மத்தியில் அதனை உள்வாங்கி சாதனை படைத்து இன்று பலரும் கைதட்டி வாழ்த்தும் வண்ணம் வளர்ந்துள்ள இவரின் வருங்காலக் கனவு, யாருடைய பேச்சுக்களை மேடையில் கேட்டு எழுச்சி கொண்டாரோ, அந்த மாமனிதர் அப்துல் கலாமுடன் பெங்களூர் IIT மாணவர்கள் மத்தியில் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளார்.அந்த நாளிற்காக காத்திருக்கிறார் கதிரேசன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *