ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் அப்துல் கலாம் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் அப்போதைய தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான், எஸ்.எல்.வி.3 எனும் செயற்கைக் கோளை உருவாக்கும் பொறுப்பை கலாமிடம் கொடுத்திருந்தார். ரோகிணி விண்கலத்திற்கு துணையாக விண் சுற்றில் இயங்க
வடிவமைக்கப்பட்டது இந்த செயற்கைக்கோள். ஆனால் 1979 ஆகஸ்ட் 10ம் நாள் செயற்கைக்கோள் ஏவப்பட்டு நன்கு செயல்பட்டாலும் ரோகிணி வங்கக் கடலில் விழுந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. திட்ட இயக்குநர் என்ற முறையில் கலாமையும் அதற்கு அழைத்துச் சென்றார் சதீஷ் தவான். ஆனால் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, இந்தத் தோல்விக்குத் தான் பொறுப் பேற்பதாக அறிவித்தார் சதீஷ் தவான்.
காலம் மாறியது. காட்சிகளும் மாறின. 1980ல் ஜுலை மாதம் எஸ்.எல்.வி. வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போது நடந்த செய்தியாளர் கூட்டத்தில் விண்ணில் ஏவிய வெற்றிக் கதையை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை, கலாமுக்கு வழங்கினார் சதீஷ் தவான். ஒரு செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதன் வெற்றிக்கான வெளிச்சத்தை வழங்குவதும், தவறுகள் ஏற்பட்டால் அவற்றுக்காகத் தானே பொறுப்பேற்பதும் தலைமைக்கு அழகு என்பதை சதீஷ் தவானின் செயல் மூலம் உணர்ந்தார் அப்துல் கலாம்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த மாநாடொன்றில் இத்தகவலைப் பகிர்ந்து கொண்ட கலாம், நல்ல தலைவருக்கான இலக்கணங்கள் என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார்.
1. தலைவர்களுக்கு ஒரு கனவு இருக்க வேண்டும்.
2. அந்தக் கனவை செயல்படுத்தும் தாகமும் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.
3. யாரும் பயன்படுத்தாத புதிய பாதைகளில் ……..புகுந்து பார்க்கும் ஆர்வமும் வேகமும் தலைவர்களுக்கு வேண்டும்.
4. வெற்றியையும் தோல்வியையும் எப்படி கையாள்வதென்று தலைவர்களுக்குத் தெரியவேண்டும்.
5. முடிவு எடுக்கும் துணிவு தலைவர்களுக்கு வேண்டும்.
6. நிர்வாகம் செய்வதில் பெருந்தன்மை வேண்டும்.
7. தலைவர்களின் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
8. தலைவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக ஜெயிக்க வேண்டும்.
Leave a Reply