ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

இனிய மாணவ நண்பர்களே !

உங்களில் பலர், தங்களின் முழுத்திறனையும் வெளிக்காட்டுவதே இல்லை. முழுத்திறனையும் வெளிப்படுத்தி உழைப்பதே இல்லை. மேலோட்ட மான முயற்சிகளே செய்கிறீர்கள்.

முழு முயற்சியும் வெளிப்படாததால்தான் பெறவேண்டிய வெற்றியின் அளவு வேறுபடுகிறது. ஆனால் நம் முழுத்திறனையும் வெளிப்படுத்தி நாம் முயற்சிக்கவில்லை என்பதையே மறந்து விட்டு நமக்கு ஏன் வெற்றி கிடைக்கவில்லை என்று மட்டும் வருந்துகிறோம்.

உதாரணத்திற்கு 60 மார்க்தான் வாங்குகிறீர்கள் என்றால் உங்களில் பலர் நமக்கு படிப்பு இவ்வளவுதான் வருகிறது. நம்மால் இவ்வளவுதான் முடியும் என்று நினைத்து விடுகிறீர்கள். இல்லை 60 மார்க் வாங்கினால் 60 சதவீதம்தான் உழைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தமே தவிர உங்களால் 60 மார்க்தான் வாங்க முடியும். நீங்கள் 60 மார்க்குக்குத்தான் லாயக்கு என்று அர்த்தம் இல்லை.

மாணவர்கள் தங்கள் முழுத்திறனை உணர்வதேயில்லை என்பதை விளக்க எங்கள் நிகழ்ச்சியில் சில கேள்விகளை நாங்கள் கேட்பதுண்டு.

உன்னால் எவ்வளவு தூரம் தெளிவாகப் பார்க்க முடியும் ?

ஒரு சிலர் தெரு கடைசி வரை தெளிவாகப் பார்க்க முடியும் என்பார்கள். இன்னும் சிலர் மாடி மீது நின்றால் 1 கிலோமீட்டர் வரை தெளிவாகப் பார்க்க முடியும் என்பார்கள்.

சரி, மற்றவர்கள் பதில்கள் இருக்கட்டும். உங்கள் பதில் என்ன என்று யோசித்துவிட்டு மேலே படியுங்கள்.

உங்களால் ஒரே பார்வையில் எத்தனை வார்த்தைகளை படிக்க முடியும்? இதற்கும் உங்கள் பதில் சொல்லிவிட்டு படியுங்கள்.

சரி, இந்தக்கேள்விகளுக்கான பதிலை பார்ப்போம். உங்களுக்கு 1 கிலோ மீட்டர் வரைதான் தெளிவாகத் தெரியுமா ? இல்லையே நிலவும் வானும் உங்களுக்கு தெளிவாகத்தானே தெரிகிறது. உண்மையில் உங்களால் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தள்ளி உள்ள நிலவை பார்க்க முடியும் என்கிறபோது உங்களால் ஒரு கிலோ மீட்டர் மட்டும்தான் பார்க்க முடியும் என்கிற நினைப்புதான் நம் வெற்றிக்கு தடை.

தன்னால் ஒரே பார்வையில் ஒரு வார்த்தை தான் முடியும் என்ற பையனிடம், ‘ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு’ என்று எழுதப் பட்டிருந்த அட்டையை வேகமாக காட்டிவிட்டு மறைத்தோம். ஆனால் அவனால் அந்த வரியை படிக்க முடிந்தது. ஒரு வார்த்தைதான் படிக்க முடியும் என்ற பையன் ஒரு வரியையை படித்தது ஆச்சரியமில்லை. தன்னுடைய ஆற்றல் உயர்ந்ததை உணராததுதான் ஆச்சரியம்.

இப்போது புரிகிறதா, உங்கள் முழுத்திறனை நீங்கள் உணரவே இல்லை. அதனால் அதை பயன்படுத்தவும் இல்லை.

எனக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு என்னை சந்திக்க சிலர் வருவதுண்டு. உண்மையில் நினைவாற்றல் குறைவு என்பது யாருக்கும் இல்லை. நினைவாற்றலை நாம் பயன்படுத்துவதுதான் குறைவு.

பளுதூக்கும் போட்டியில் பார்வையாள ராக போய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை கூப்பிட்டு அங்குள்ள எடையை தூக்கச்சொன்னால் என்னால் முடியாது என்பீர்கள். அதற்கு அர்த்தம் உங்களால் ஒருநாளும் தூக்கவே முடியாது. அதற்குரிய ஆற்றல் உங்களிடம் இல்லை என்பதல்ல.. பளுதூக்கும் பயிற்சி உங்களுக்கு இல்லை. அதனால் இப்பொழுது முடியாது. ஆனால் பயிற்சி எடுத்துக்கொண்டால் நிச்சயம் உங்களாலும் முடியும்.

இப்போது எதெல்லாம் உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களோ அதிலெல்லாம் நீங்கள் பார்வையாளராக மட்டும் இருந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வெற்றி பார்வையாளருக்கா? பங்கேற் பாளருக்கா ? யோசியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *