நிர்வாகி

நம்பிக்கை யூனிவர்சிட்டி

இனி நீங்களும் MBA தான்

சுவாரசியமான கதை வடிவில் ஒரு பாடம்

– கிருஷ்ணன் நம்பி

நான் எல்லா இதழ்களிலும் எழுதுவதுண்டு, படிக்காதவர்கள் மிகப் பெரிய நிறுவனங்களை நடத்துகிறார்கள். அதில் படித்தவர்கள் வேலை செய்கிறார்கள் என்று.

இப்படி நான் எழுதுவதை, படிக்காததால் தான் அவர்களால் நிறுவனம் தொடங்க முடிந்தது என்றோ படித்தால் வேலைக்குத்தான் போக வேண்டும் என்றோ புரிந்துகொண்டு விடக் கூடாது.

கல்வியின்றி அவர்கள் முன்னேற பட்ட பாடுகளே அவர்களை தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது அல்லது படிப்பு போதாதால் அதிக வருமானம் உள்ள வேலைக்கு செல்ல முடியாது என்ற காரணம் அவர்களை தொழில் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். எது எப்படியோ, நான் அடிக்கடி நினைப்பேன், படிக்காமலே இவ்வளவு சாதனைகளை செய்ய முடிந்திருக்கிறதே, படித்திருந்தால்?
நிர்வாகவியல் படிக்காமலே சுய சிந்தனையில் இவ்வளவு சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்கள். இவர்கள் நிர்வாகவியலும் படித்திருந்தால் உலகத்திற்கே பாடம் சொல்லித் தரும் அளவிற்கு இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்கள்.

இன்று மிகப்பெரிய நிறுவனங்களாக இருப்பவர்கள் சற்றே வளர்ந்த பிறகு எம்.பி.ஏ. படித்தவர்களை வேலைக்கு அமர்த்தி செய்த வணிக உத்திகளை அவர்களுக்கு முன்பு தெரிந்து செய்திருந்தால் இன்னும் சீக்கிரத்திலே உயரத்தை அடைந்திருப்பார்கள் இல்லையா?

எம்.பி.ஏ. படித்தவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வது வளர்ந்த நிறுவனங்களுக்கு சரி. நடுநிலை அல்லது துவக்க நிலையில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு இது கூடுதல் செலவு இல்லையா? ஏன் எம்.பி.ஏ. ஆட்களை தேடிக் கொண்டு இருக்க வேண்டும்? நீங்களே நேரடியாக எம்.பி.ஏ. படிக்க உங்களுக்கு உதவப்போகிறது நமது நம்பிக்கை யூனிவர்சிட்டி.

இங்கே எக்ஸாம் கிடையாது. எனவே, டென்ஷன் கிடையாது. எதையும் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. எனவே, டைம் இருக்குமா? என்ற கவலையும் கிடையாது.

அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்து போரடிக்கப் போவதில்லை. தேவையான அடிப்படைத் தகவல்களும் இன்றைய நவீன கருத்துக்களும் கதை வடிவில் தரப்போவதால் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமிருக்கப்போவதில்லை.

என்ன..? நான் எம்.பி.ஏ. என்று நீங்கள் சொல்லிக்கொள்ள முடியாது. ஆனால், உங்களை மாஸ்டர் ஆப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்று ஊரே சொல்லும்.

எம்.பி.ஏ படிப்பை சீக்கிரமே கற்றுத் தேர்ந்து மிகச்சிறந்த நிர்வாகியாக வாழ்த்துக்கள்.

தாசிவத்திற்கு ஏஸியிலும் வியர்த்துக் கொட்டியது. தூக்கமும் வராமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தார், காரணம் அந்தக் கேள்வி.

சதாசிவத்தை அது என்னவோ செய்து கொண்டே இருந்தது. தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தார். எவ்வளவு முயற்சித்தும் தூங்க முடியவில்லை. எடுக்க முடியாத முள்ளாய் அந்தக்கேள்வி அவர் மனதை தைத்திருந்தது.

காலையில் நடந்த சிறுதொழில் அதிபர்கள் சங்க கூட்டத்திற்கு அவர் வேண்டா வெறுப்பாகத் தான் சென்றார். பெரும்பாலான கூட்டங்களுக்கு அவர் செல்வதில்லை. அன்று தலைவர், செயலாளர் என எல்லோரிடமிருந்தும் அழைப்பும், நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.ஸும் வந்த வண்ணம் இருந்ததால் மரியாதை கருதித்தான் அந்தக் கூட்டத்திற்கு சென்றார். அங்குதான் அவரை சங்கடப்படுத்திய அந்தக் கேள்வியை சந்தித்தார்.

இதுபோன்ற கூட்டங்களில் எல்லாம் கலந்துகொள்ள உண்மையில் அவருக்கு நேரம் இல்லை. விழித்திருக்கிற நேரமெல்லாம் அவர் நடத்துகிற தொழிற்சாலையில்தான் இருப்பார்.

தூக்கம் வந்தால்தான் வீட்டிற்கு. சாப்பாடு கூட தொழிற்சாலைக்கே வந்துவிடும். 80 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்தான் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்.

அன்று நடந்தது போன்ற ஒரு மீட்டிங்கில் அவர் வாழ்நாளில் கலந்து கொண்டதில்லை. புதுவிதமான மீட்டிங்காய் இருந்தது. இதற்கு முன்னால் ஓரிரு முறை சங்கக் கூட்டத்திற்கு அவர் சென்றிருக்கிறார். அப்பொழுதெல்லாம் பேசுகிற வர்கள் மேடையில் நின்றபடி பேசிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்பார்கள். வழக்கமாக கேள்வி கேட்கிற ஓரிருவர்தான் எப்பவும் எழுந்து எதையாவது கேட்பார்கள்.

ஆனால், அன்று நடந்த மீட்டிங் அப்படியில்லை. மேடையில் பேசியவர், பேச்சை துவங்கியபோது மட்டும்தான் மேடையில் இருந்தார். அதன் பிறகு கூட்டத்திற்குள் நுழைந்து விட்டார். யாரும் அவரைக் கேள்வி கேட்கவில்லை. அவர்தான் அனைவரையும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்படி ஒவ்வொருவராய் எழுப்பி கேள்வி கேட்டபோதுதான் சதாசிவத்திற்கு அந்தக் கேள்வி வந்தது. சதாசிவத்திற்கு ஆரம்பத்தில் இப்படி ஒவ்வொருவராய் எழுப்பி கேள்வி கேட்டது பிடிக்கவில்லை. அவர் உட்கார்ந்தே பதில் சொல்லச் சொன்னாலும் எல்லோரும் எழுந்து தான் பதில் சொன்னார்கள்.

அவர் ஏதோ கல்லூரிப் பேராசிரியராம். இதற்குப் பெயர் மேனேஜ்மென்ட் டிரைனிங்காம். என்ன டிரைனிங்கோ? என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அந்தப் பேராசிரியர் சதாசிவத்தைக் கேட்டார், ‘உங்கள் நிறுவனத்தில் நீங்கள் நிர்வாகியா? அல்லது தினக்கூலியா?’

சதாசிவத்திற்கு சட்டென்று கோபம் வந்து விட்டது. இது சிறுதொழில் அதிபர்கள் சங்க கூட்டம். இங்கே நிர்வாகிகள்தான் வருவார்கள். எந்தக் கான்ட்ராக்ட் லேபரும் வரமாட்டார்கள். இதுகூடத் தெரியாமல் இந்த ஆள் கிளாஸ் எடுக்க வந்திருக்கிறார் என்று உள்ளூர எரிச்சல்தான். ஆனால், அவர் எதையும் காட்டிக்கொள்ளாமல் வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு, ‘நான் நிர்வாகி’ என்றார்.

பேராசிரியர், எல்லோரையும் கைதட்டச் சொல்லி சதாசிவம் சொன்ன பதிலுக்கு பாராட்டச் சொன்னார். எல்லோருடைய கைதட்டலைக் கேட்டதும்தான், சதாசிவத்திற்கு ஆசுவாசப் பட்டது.

கைதட்டல் அடங்கிய பிறகு பேராசிரியர் பேசினார், ‘நீங்கள் நினைத்திருக்கலாம், என்னடா இது சிறுதொழில் அதிபர்கள் சங்கத்தில் வந்து நீங்கள் நிர்வாகியா? இல்லை தினக்கூலியா? என்று கேட்கிறாரே… இதுகூடத் தெரியாமலா டிரைனிங்கிற்கு வந்தார் ‘என்று.

சதாசிவம் அதிர்ந்தார். என்னடா இந்த ஆசாமி வில்லங்கமானவராக இருப்பார் போலிருக்கிறதே…

பேராசிரியர் தொடர்ந்தார், ‘என் கேள்விக்கு நேரடியாக அர்த்தம் கொண்டுவிடக் கூடாது. நீங்கள் இருந்தால்தான் உங்கள் நிறுவனம் இன்று நடக்கும் என்றால் உங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை நீங்கள் தினக்கூலிதான். நீங்கள் இன்று இல்லாவிட்டாலும் உங்கள் நிறுவனம் எந்த மாற்றமும் இல்லாமல் அன்றாடப் பணிகளில் எந்தத் தடையும் இல்லாமல் நடக்கும் என்றால்தான் நீங்கள் நிர்வாகி. இப்போது சொல்லுங்கள். நீங்கள் நிர்வாகியா? தினக்கூலியா?’

அந்தக் கேள்வி இன்னும் சதாசிவத்தின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து தண்ணீர் குடித்தார். மணி இரண்டு. மனநிலையைப் பார்த்தால் இன்று நிச்சயம் தூக்கம் வரப்போவதில்லை என்றே அவருக்குத் தோன்றியது.

உண்மையில் சதாசிவம் அவர் தொழிற் சாலையைப் பொறுத்தவரை தினக்கூலிதான். அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது. கல்யாணம் காதுகுத்து என்று எதற்கும் அவர் வெளியூர் செல்வதில்லை. தவிர்க்க முடியாமல் எங்காவது சென்றால் கூட பேக்டரியில் இருந்து அவருக்கு போன் வந்துகொண்டே இருக்கும். இதற்கு நீங்கள் வராமலேயே இருந்திருக்கலாம் என்று அருகில் உள்ளவர்கள் முணு முணுப்பார்கள்.

பத்து நிமிடம் இல்லையென்றால், இருபது தலைவலிகள் புதிதாக உருவாகிவிடும். கூட்டத்தில் நான் நிர்வாகி என்றபோது எல்லோரும் கைதட்டியதை எண்ணியபோது இப்போது அவருக்கு கசப்பாக இருந்தது. ‘இல்லை, நான் தினக்கூலி.’

இத்தனைக்கும் அவர் தொழிற்சாலையில் திறமையான ஆட்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இருந்தும் அவரின் தேவை அங்கே குறையவே இல்லை. 5 பேரோடு நிறுவனத்தை துவங்கும் போது எப்படி உழைத்தாரோ, அதுபோலத்தான் இன்று 80 பேர்களாக வளர்ந்த பிறகும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

சதாசிவம் எழுந்தபோது அவர் தூங்கியதேகூட அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் அந்தக் கேள்வி ஞாபகம் வந்தது. கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது முக்கியமில்லை. அந்தக் கேள்விக்கான தீர்வை கண்டுபிடிப்பதுதான் முக்கியம். அந்தப் பேராசிரியரிடமே பேசிவிட வேண்டியதுதான் என்று முடிவுசெய்தார்.

கூட்டம் முடிந்ததும், வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று பேராசிரியரின் நம்பரைச் சொன்னார்கள். யாரோ சிலர் ஆர்வமாக குறித்துக் கொண்டார்கள். குறித்துக்கொண்டிருப் பவர்களைப் பார்த்து சிலர் கேலி செய்ததால் சதாசிவம் குறித்துக்கொள்ளவில்லை.

சிறுதொழில் அதிபர்கள் சங்க செயலாளருக்கு போன் செய்து பேராசிரியரின் நம்பரை வாங்கினார். பேசினார். தன்னுடைய தொழிற்சாலைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ‘நீங்கள் சொன்னபடி நான் தினக்கூலிதான்’ என்றும் ‘நிர்வாகியாவது எப்படி?’ என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னார்.

அவரின் வருத்தத்தை புரிந்துகொண்ட பேராசிரியர் போனிலேயே உற்சாகப்படுத்தினார். ஒரு கதையைச் சொன்னார். “சீக்கிரமே உங்கள் நிறுவனத்திற்கு வருகிறேன். அதற்குள் இந்தக் கதை சொல்லும் நீதி என்ன என்பதை கண்டுபிடித்து வையுங்கள்” என்றார். கதை கேட்ட சதாசிவத்திற்கு சிரிப்பாக வந்தது. ஆனால் அதில் சிந்திக்க நிறைய இருப்பதை எண்ணி சிந்திக்கத் துவங்கினார், பேராசிரியரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தபடி…

பேராசிரியர் சொன்ன கதை

ஒரு காகம் மரத்தின் மேல் ஓய்வாக உட்கார்ந்திருந்தது. அது ஒன்றுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பதை ரொம்ப நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முயல் கேட்டது, “உன்னைப்போல் நானும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கலாமா?”

காகம், “ஏன் தாராளமாக நீயும் என்னைப் போல் ஓய்வெடுக்கலாமே” என்றது. உற்சாகமடைந்த முயல் மரத்தின் வேரில் கால்மேல் கால் போட்டபடி சாய்ந்து அமர்ந்துகொண்டு கண்களை மூடி ஓய்வெடுத்தது. அந்தநேரம் அங்கே ஒரு நரி வந்தது, அசந்திருந்த முயலை ஒரே அடியில் வீழ்த்தி உணவுக்காக அதை அள்ளிச்சென்றது.

கதை இதுதான். நீதி? நீங்களும் யோசியுங்கள்.

பேரா. விசாகமூர்த்தி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேலாண்மை

கல்லூரியில் பேராசிரியராக

பணியாற்றி வரும் இவர் கற்பித்தல்

பணியில் 12 ஆண்டு அனுபவம்

உள்ளவர். புகழ்பெற்ற பல வணிக

நிறுவனங்களின் ஆலோசகர்.

ஆயிரக்கணக்கான எம்.பி.ஏக்களை

உருவாக்கிய இவரின் அனுபவப்

பதிவுகளை இத்தொடர் முழுக்க

நீங்கள் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *