நீங்களும் ஜீனியஸ்தான்

மாணவர் பகுதி

– அத்வைத் சதானந்த்

அறிவாளிகள் ஒன்பது வகை.  அதில் நீங்கள் எந்த வகை ?

வீட்டிற்குள் உள்ள விலங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு பள்ளி துவங்கியது. ஸ்கூல் என்றால் சாதாரண ஸ்கூல் இல்லை. அது ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல்.

எல்லோரும் எல்லா திறமைகளையும் பெற வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட அந்தப்பள்ளியில் மரம் ஏறுதல், நீந்துதல், ஓடுதல், பறத்தல், பாடுதல் என பல பயிற்சிகள் வழங்கப் பட்டது.

பீஸை பற்றி கவலைப்படாமல் பறவைகள் மீன்கள் மற்றும் நாய்கள் முயல்கள் என விலங்கு களும் பெற்றோர்களுடன் வந்து வரிசையில் நின்று அட்மிஷன் பெற்றுச்சென்றன.

பள்ளியில் பயிற்சிகள் தொடங்கியது. பறவைகள் பாடும் வகுப்புகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியது. ஆனால் நீச்சல் வகுப்பிலும் மரம் ஏறுதலிலும் சொல்லிக் கொள்ளும்படி மதிப்பெண் இல்லை.

அணில்கள் அழகாக மரம் ஏறி அவ்வகுப்பில் கிளாஸ் பர்ஸ்ட் வந்தது. ஓடும் பயிற்சியிலும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. ஆனால் மற்றவற்றில் நிலைமை தலைகீழ். மீன்கள் நீந்தும் பயிற்சியில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. ஆனால் தரையில் நடக்கும் மற்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் வகுப்புகளை கட் அடித்தே வந்தது.

ஆக, எல்லோரும் தங்களை திறமையற்றவர் களாக தாழ்வாகவே கருதி படித்து வந்தார்கள்.

காட்டிற்குள் உள்ள இந்த பள்ளிக்கும், நாட்டிற்குள் உள்ள பள்ளிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லோரையும் எல்லா வற்றிலும் திறமைசாலிகளாக்குகிறேன் என்று இங்கேயும் கூட இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் எல்லா விஷயங்களிலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை முன் வைத்ததுடன் அறிவாற்றலையும் பலவகையாக பிரித்து அறிவித்தார் டாக்டர் ஹோவர்டு கார்டனர்.

மேலும் எல்லோருமே ஜீனியஸ்தான். ஆனால் வேவ்வேறு துறைகளில்  என்கிறார் அதற்கான ஆதாரத்துடன்.

புத்திசாலித்தனத்தை அளவிட இன்றுவரை பலராலும் அறியப்பட்ட முறை ஐக்யூ டெஸ்ட். 9 விதமான அறிவு வகைகளில் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்கும் இம்முறையால் உண்மையில் ஒருவரை முழுமையாக மதிப்பிட்டு விடவே முடியாது.

டாக்டர் ஹோவர்டு கார்டனர் மனிதர்களின் தனித்தன்மைகளை ஆராய்ந்து அறிவாற்றலை 7 பிரிவுகளாக பிரித்து அறிவித்தார். பிறகு மேலும் இரண்டு பிரிவுகளை இணைத்தார். ஆக, மனிதர்களை 9 விதங்களுக்குள் அடக்கலாம்.

1. மொழி அறிவு : Linguistic Intelligence

மொழியை பயன்படுத்துவதில் ஆற்றல் மிக்கவர்கள். இத்தகைய திறமை பெற்றவர்கள் பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் மலர் கிறார்கள். மொழித்திறன் உள்ளவர்கள் குறுக்கெழுத்துப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர்களாக கவிதை எழுதுபவர்களாக எதையும் சுவாரஸ்யமாக மற்றவர்களுடன் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். பேரறிஞர் அண்ணா, கவியரசர் கண்ணதாசன், எழுத்துச் சித்தர் பாலகுமாரன், சுஜாதா  போன்றவர்கள் இவ்வகை ஜீனியஸ்களே.

பெரும்பாலும் கேள்விகளால் வேள்வி நடத்துபவர்களாகவும், பேச்சில் ஈடுபாடு உடையவர்களாகவும், புத்தகப்பிரியர்களாகவும், வார்த்தைகளில் விளையாடி ஜெயிப்பதில் ஆற்றல் மிக்கவர்களாகவும், தன்னை அறிந்தவர்களாகவும், மற்றவர்களை புரிந்துகொள்பவர்களாகவும், புதிய மொழிகளையும் வார்த்தைகளையும் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வமுடையவர்களாகவும் நீங்கள் இருந்ததால் நீங்கள் மொழி அறிவுலகில் ஜீனியஸ்.

2.காரண மற்றும் கணித அறிவு : Logical-Mathematical Intelligence

இவர்கள் கணிதத்தில் வல்லுனர்கள். எதையும் ஆழ யோசிப்பது இவர்களது பழக்கம். கணித வல்லுனர் களாக விஞ்ஞானிகளாக துப்பறியும் நிபுணர்களாக இவர்கள் பிரகாசிக்கிறார்கள். ராமானுஜம், சர்.சி.வி ராமன், செஸ் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள்.

3. இசை அறிவு : Musical Intelligence

இசையில் அசைக்க முடியாத ஈடுபாடுள்ளவர்கள். அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் திறம்பட அறிந்தவர்கள். இவ்வறிவில் மேம்பட்டவர்கள் இசையமைப் பாளர்களாக, இசைக் கலைஞர்களாக, பாடகர்களாக பரிணாமம் பெறுகிறார்கள். இளையாராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகி போன்றவர்கள் இவ்வகையினரில் சிலர்.

4. இயற்கை அறிவு : Naturalist Intelligence

இவர்கள் இயற்கை விரும்பிகள். காடுகள் விலங்குகள் இவற்றில் ஆர்வம் கொண்டவர்கள். இயற்கையை ஆராய்வதிலும் அவற்றை பாதுகாப்பதிலும் ஈடுபாடு கொண்டவர்கள். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்களை இத்துறை மேதைகளுக்கு உதாரணமாக சொல்லலாம்.

5.தொடர்புத்திறன் அறிவு : Interpersonal Intelligence

யாரையும் எளிதாக தன் வசப் படுத்துபவர்கள். சுலபமாக மற்றவர்களை புரிந்து கொள்பவர் களாக எளிதில் பழகுபவர்களாக இவர்கள் இருப்பார்கள்.  ஆசிரியர்கள், நடிகர்கள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இப்பிரிவினரே. மற்றவர்களின் திறன் அறிந்து அதற்கேற்றாற் போல் பேசவும் பழகவும் கூடியவர்களாக இருப்பார்கள்.

6. உடலியல் அறிவு : Bodily-Kinesthetic Intelligence

உடலை சிறப்பாக கையாள தெரிந்தவர்கள். விளையாட்டு வீரர்கள், யோகா கலைஞர்கள், உடற்பயிற்சி தரும் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், நடன கலைஞர்கள் ஆகியோர் இவ்வகையை சேர்ந்தவர்களே.

7.தன்னையறியும் அறிவு : Intrapersonal Intelligence

தன்னை தன் சிந்தனைகளை நன்கு உணர்ந்தவர்கள். தான் தன்னை உணரவும் மற்றவர்கள் தங்களை உணரவும் உதவும் ஆன்மிகவாதிகள், மனநல நிபுணர்கள், தத்துவ வாதிகள், சிந்தனையாளர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள். ரமணர், ஜகி வாசுதேவ் போன்றவர்கள் இத்துறை ஜீனியஸ்கள்.

8.கற்பனை அறிவு : Spatial Intelligence

முப்பரிணாம சிந்தனை கொண்டவர்கள். அதாவது மாறுபட்டு சிந்திக்கும் (lateral thinking) திறனுடையவர்கள். எந்த விஷயத்திலும் புதுமையை புகுத்தி தங்களை தனித் தன்மையுடன் திகழச் செய்பவர்கள். ஓவியர்கள், சிற்பிகள், கட்டிட வடிவமைப்பாளர்கள் இவ்வறிவில் சிறந்து விளங்குபவர்கள்.

9.வாழ்வியல் அறிவு : Existential Intelligence

அதிகமாக கேள்வி கேட்பவர் களாகவும், வாழ்க்கை குறித்த ஆய்வுகள் நடத்துபவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். பிரபஞ்சம் பற்றிய கடவுள் பற்றிய கேள்விகள் அதிகம் உள்ளவர்களை இவ்வகைப் படுத்தலாம்.

ஆக அறிவாளிகள் 9 வகை. அதில் நீங்கள் எந்த வகை ?

கல்வியில் மேம்பட்ட வர்கள் மட்டும்தான் அறிவாளிகள் என்றில்லை. மேற்கண்ட எந்த திறன் உங்களுக்கு இருந்தாலும் அதில் உயர்நிலையை  நீங்கள் அடைய முடியும். அப்படி அடைந்தால் நீங்களும் ஜீனியஸ்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *