நலிவிலிருந்து மீண்ட நம்பிக்கை குரல்

– தூரிகா

குரலை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. அந்த நபரிடம் சிகிச்சைக்கு முன் உங்களுக்கு பேச்சு வேண்டுமா? மூச்சு வேண்டுமா என்று மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மனிதர் தனக்கு பேச்சுதான் வேண்டும் எனக்கூறி அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு சுயநினைவு வர வேண்டி தட்டி

எழுப்பி உங்கள் பெயரென்ன என்று வினவினார் மருத்துவர். “என் பெயரை ஒரு வார்த்தையில் சொல்லவா? ஒரு வரியில் சொல்லவா? அல்லது ஒன்பது வரிகளில் சொல்லவா” என்று கேட்டு மருத்துவர்களையே அசரவைத்த நம்பிக்கை மனிதர் திரு. செங்குட்டுவன்.

பல தடைகள் தாண்டி வெற்றி பெற்ற செங்குட்டுவன் அவர் குரலை இழந்தது எவ்வாறு?

பல வருடங்களாக தன்னை ஆசிரியர் பணியில் கரைத்துக்கொண்ட செங்குட்டுவனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தொலைபேசியில் யாருடனாவது பேசும்போது, திடீரென்று ஒலிக்கும் பெண் குரல் யாருடையது என்று எதிர்முனையில் இருப்பவர்கள் வினவுவார் களாம். பிறகுதான் இவர் குரல் பெண்களின் குரல் போல் மென்மையடைந்து வருவதை உணர்ந்திருக்கிறார். சிறிதும் மனம் தளராமல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட செங்குட்டு வனுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சுத்தமாக குரலை இழந்து பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். வேதியியல், இயற்பியல், கணிதம் என அனைத்து பாடங்களையும் சிறப்புற நடத்துபவர் செங்குட்டுவன். அவருக்கு அவர் குரலை இழந்ததுகூட வாழ்க்கைப் பாடமாகத்தான் தோன்றியது. இவர் சில காலம் சென்னையில் தங்க நேர்ந்தது. எந்த இடத்தில் இருந்தாலும் இவருக்கு கற்றுக்கொள்ளும் தாகம் மட்டும் குறையவே இல்லை. கன்னிமாரா நூலகத்தில் பல பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என அறிந்து பயிற்சிகளில் பங்கேற்றார். பட்டியலிடப்பட்ட பல பயிற்சிகளில் மாயாஜாலம் கற்றுக்கொள்வது என முடிவு செய்தார்.

மாயாஜாலக் கலையை கற்று முடித்தபின், இவர் செய்த வித்தையில் அசந்துபோன பலரில் குறிப்பிடத்தக்கவர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மோகன் காமேஸ்வரன் அவர்கள். நிலையறிந்து இவருக்கு உதவ முன்வந்தார். செங்குட்டுவனை முழுவதும் பரிசோதித்துப் பின் மருத்துவருக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே எழுந்த உரையாடல்தான் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட சம்பவம். பொதுவாகவே அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சைக்குப் பின் என சில விளம்பரங்களை கண்டிருக்கிறோம். ஆனால் செங்குட்டுவனைப் பொறுத்த வரையில் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நம்பிக்கை நிறைந்த அசாத்திய மனிதராகவே இருந்துவருகிறார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த செங்குட்டுவன், 21 வயதில் ஆசிரியராகப் பொறுப் பேற்று பின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார். அமைதியாக மேற்கொள்ளவேண்டிய ஆசிரியர் பணியை அதிரடியும் அன்பும் கலந்து மேற்கொள்வது செங்குட்டுவன் ஸ்டைல். ஆசிரியர் பணியில் இவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை “டியூஷன்”.

“பெற்றோர்கள் சத்தான உணவை கொடுத்தால் பிள்ளைகள் அடுத்த வீட்டில் கை ஏந்துமா என்ன? அப்படித்தான் டியூஷனும்.” என்று ஆசிரியருக்கே உரித்தான கோபம் அவர் வார்த்தைகளில்.

குடும்பத்தில் ஆண் படித்தவராக இருப்பதைக் காட்டிலும் ஒரு பெண் படித்தவராக இருக்கும்போது எத்தனை நன்மைகள் விளையும் என்பதற்கு என் தாயார் சிறந்த உதாரணம். கண்டிப்பான தந்தை. தந்தையிடம் கற்றுக் கொண்ட ஒழுக்கமும், நேரம் தவறாமை, தாயின் பரிவும், அனைத்தையும் தாண்டி ஆசிரியர் பணியில் அடைந்த அளவற்ற மகிழ்ச்சி. இவையே, பல தடைகளை தகர்த்தெறிந்து இன்று என்னை வெற்றியாளன் ஆக்கியிருக்கிறது” என்கிறார் செங்குட்டுவன்.

குரலை இழந்து மீண்டும் பெற்றவர் மட்டுமல்ல, வாழ்வை இழந்து மீண்டும் பெற்றவர், வெற்றியும் பெற்றவர் திரு. செங்குட்டுவன்.

  1. ashok kumar

    Remarkable sir………………….wellsaid…thank you..ashok

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *