– கே.ஆர்.நல்லுசாமி
அது என்னங்க ரோஷம், கோபம்? நமது வாழ்க்கையை வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்கின்ற வண்டிக்கு எரிபொருள் தாங்க இந்த கோபமும், ரோஷமும்.
ஓர் இளைஞர் சில ஆண்டுகளுக்கு முன் என்னை சந்திக்க வந்தார். தனது தந்தை தனது தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாகவும் அதனால் சொந்தக்காரர்களும், கடன்காரர்களும், மிக மோசமாக பேசுவதாகவும், சொல்லி ஆலோசனை கேட்டார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி கடனை கட்ட வேண்டும் என்று நீ நினைக்கிறாயா? என்பதுதான். ஆம் என்றார். அவருடைய நாணயத்தின் மீதும் நம்பிக்கையின் மீதும் நம்பிக்கை வைத்து சில சொத்துக்களை விற்பனை செய்து கடன்களை கட்டுவதற்கு உதவி செய்தேன். இருக்கின்ற வியாபாரத்தை பார்த்துக்கொண்டே L.I.C. முகவர் ஆகும்படியும் அறிவுரை கூறினேன்.
ஏன் தெரியுமா? தன்னைப் பற்றியே சிந்தித்து வருகின்றவர்களுக்கு அடுத்தவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும்போது அறிவுப் பசிக்கு உணவு கிட்டும். அதனால் எந்த அவமானத்தையும் தாங்கி வெற்றி பெறமுடியும் என்ற எண்ணம் ஓங்கி நிற்கும்.
அவரால் சில ஆண்டுகளுக்குப் பின் L.I.C. யில் நல்ல பாலிசிதாரர்களை அறிமுகப் படுத்தியதிலும் L.I.C. குழுமத்தின் பயிற்சியையும் பாராட்டையும் நல்ல வருமானத்தையும் பெற முடிந்தது. அத்துடன் சில ஆண்டுகளுக்கு முன் இழந்த சொத்தை திரும்ப வாங்கியதோடு மேலும் பல சொத்துக்களை வாங்கவும் முடிந்தது. இன்று மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை அந்த இளைஞர் வாழ்கிறார்.
அன்றைய கடன் இவரால் ஏற்பட்டதில்லை. ஆனால் கடன்காரர்கள் கேட்ட கேள்வி களெல்லாம் ரோஷத்தை ஏற்படுத்தியது. கடன் கட்டினார், இன்று ஒரு வெற்றியாளனாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றார். மாறாக கடனை திருப்பிக் கொடுக்க முடியாது என்று கோபப் பட்டிருந்தால் இவர் கடன்காரராகவே இருந்திருப்பார். யாரும் இவருக்கு உதவியிருக்கவும் மாட்டார்கள். உண்மையான உழைப்பாளியாகவும் ஆகியிருக்க முடியாது.
இன்னொரு சம்பவம்:
எனது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் கொடுத்துவிட்டு பொருள் தயாராகிக் கொண்டிருக்கும்போது நேரடி பரிசோதனைக்காக வந்திருந்தார். அப்பொழுது முழுமையடையாத பொருள்களை பார்த்து பல குறைகளை கூறினார்கள். அந்த நேரத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் பலமுறை வாக்கு வாதம் வந்து கொண்டே இருந்தது. என்ன கூறியும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
பொருள் முழுமையடைந்த பிறகு பரிசோதனை செய்து பாருங்கள் என்று கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை. பல உதாரணங்கள் கூறி அவர்களை ஒத்துக்கொள்ள வைத்தோம். அவற்றில் சில:-
தாங்கள் உணவு விடுதிக்குச் சென்று உணவு அருந்த விரும்பினால் Dining Hall- p AUokÕ order செய்தால் ருசியான உணவு பரிமாறப்படும். மாறாக உணவு விடுதிக்குள் புகுந்து அடுப்பங்கரை சென்று பார்த்தால் உணவு அருந்த முடியுமா?
அவர் கேட்ட கேள்விகள் எல்லாம் எங்களுக்குள் ரோஷத்தை ஏற்படுத்தியது. நாம் செய்யவில்லை என்றால் யார் செய்வது. இப்பொழுது செய்யவில்லை என்றால் எப்பொழுது செய்வது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அனைவரும் கடுமையான முயற்சி எடுத்தோம். மீண்டும் அவர்களின் பரிசோதனையின்போது வெற்றி பெற்றோம். பாராட்டையும் பெற்றோம். புதிய ஆர்டர்களையும் பெற்றோம்.
வாக்கு வாதத்தால் ரோஷப்பட்டோம். பாடு பட்டோம். வெற்றி பெற்றோம். கோபப் பட்டிருந்தால் வேலையில்லாமல் அனைவரும் படாத பாடுபட்டிருப்போம். பல நேரங்களில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத காரணத்தால் அவதிப்படுகிறோம்.
எந்த விவாதங்களாக இருந்தாலும் வியாபாரங்களாக இருந்தாலும் பிறர் நமது குறைகள் சுட்டி காண்பிப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டு அதன் விடைக்கான தேடல்களை அதிகப்படுத்தி வெற்றி பெறவைப்பதே ரோஷம். இவர்கள் யார், நம்மை நன்றாக செய்யவில்லை என்று கூறுவதற்கு என்று அவர்கள் மீது கோபப் படும்போது குறைகளை சுட்டிக் காண்பிக்கும் ஒரு நல்ல வழிகாட்டியை இழக்கிறோம். வளர்ச்சி தடைபடுகிறது. எந்த சூழ்நிலையிலும் கோபத்தை தவிர்த்து ரோஷப் படுவோம், வெற்றி பெறுவோம்.
v.chandrasekar
super sir i know the difference between