அவர்கள் இருவர்

– சிநேகலதா

கார் ஓட்ட ஆளில்லாத நேரங்களில், ஆட்டோவில் போவார் அவர். காலை நேரங்களில் அவர் அலுவலகம் புறப்படும் நேரத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்றிருப்பார்கள். ஆகவே, வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஆட்டோ ஸ்டேண்டில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லாத ஆட்டோ ஓட்டுநர்கள் யாரென்று விசாரித்தபோது இரண்டு பேர் கிடைத்தனர்.

இருவருக்குமே தனது செல்ஃபோன் எண்ணைத் தந்திருந்தார் அவர். முதல் நாள் முதல் டிரைவரை அழைத்தார். இரண்டு மூன்று முறை அழைத்தும் எடுக்கவில்லை. மூன்றாவது முறை அழைத்தபோது, “ஹலோ! யாருங்க பேசறது'' என்று ஆறுமுறை கேட்டார். “இப்போ டீ சாப்பிட்டுகிட்டிருக்கேங்க! வர அரை மணி நேரம் ஆகும் பரவாயில்லீங்களா?'' என்றார்.

அடுத்த டிரைவரை அழைத்தார் இந்தப் பிரமுகர். “சார்! சொல்லுங்க சார்! நல்லா இருக்கீங்களா சார்? எத்தனை மணிக்கு வரணுங்க சார்?'' கேட்டுவிட்டு சொன்ன நேரத்திற்கு சரியாக வீட்டு வாசலில் வந்து நின்றார்.

இரண்டு பேருக்கும் ஒரே தொழில். இரண்டு பேருக்கும் ஒரே தொடர்பு கிடைத்தது. கையில் இருக்கும் செல்ஃபோன் என்னும் கருவியையும், தொடர்புகளையும் கையாளத் தெரிந்தவர் வாடிக்கையாளரின் நல்லெண்ணத்தையும் தொடர் ஆதரவையும் பெற்றார்.

வேலை நேரத்தில் வாடிக்கையாளர் அழைப்பைவிட தேநீர் அருந்த செலவிடும் அரை மணி நேரமே முக்கியம் என்று நினைத்தவர் வாய்ப்பை இழந்தார்.

இந்த அனுபவத்தை நண்பர் ஒருவர் சொன்னபோது அமெரிக்காவில் வாடகை டாக்ஸியில் ஏறிய இருவரின் அனுபவங்களை இணையத்தில் படித்தது, ஞாபகம் வந்தது. கை நீட்டியபோது வந்து நின்ற வாடகை டாக்ஸி, பளபளவென்று மின்னியது. வழக்கத்திற்கு மாறாக ஓட்டுநர் இறங்கி வந்து வணங்கினார்.

உங்கள் பெட்டிகளை இரண்டு நிமிடங்களில் காரில் ஏற்றுகிறேன். அதன்முன் என் கொள்கை வாசகத்தைப் படியுங்கள் என்று லேமினேட் செய்யப்பட்ட அட்டை ஒன்றை நீட்டினார்.

“நட்புமிக்க சூழலில், என் வாடிக்கையாளர் களை, அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்தில் சிக்கனமாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு சேர்ப்பதே என் இலட்சியம்'' என்று எழுதப்பட்டிருந்தது.

காருக்குள் வாடிக்கையாளர் விரும்பும் இசையைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் சேனல் விபரம் கொண்ட அட்டைகளும் இருந்தன. கார் உள்ளும் புறமும் தூய்மையாய் இருந்தது.

ஓட்டுநரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “போதிய பணம் கிடைப்பதில்லை என்று நானும் புலம்பிக் கொண்டிருந்தேன். புலம்புவதையும் புகார் சொல்வதையும்விட, புதுமையாக எதையாவது செய்தால் வாடிக்கையாளரால் விரும்பப்படுவோம் என்பதை உணர்ந்தேன். அதிலிருந்து இந்தத் தொழிலை மனப்பூர்வமாக நேசித்து புதுமைகளைப் புகுத்துகிறேன்'' என்றார்.

புதுமையான அணுகுமுறைக்கு அருமை யான வெகுமதியுடன் காலம் காத்திருக்கிறது… உங்களுக்காக!

zp8497586rq