– தூரிகா
“ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்ற பாரதியின் வரிகளுக்கு ஓடி ஓடி பெருமை சேர்ப்பவர் அர்ச்சனா. இவரே இன்றைய சின்னவர் ஆனால் பெரியவர் பகுதியின் நாயகி. பத்தாம் வகுப்பு மாநில அளவிலான பொதுத் தேர்வில் தன்னை நிரூபிக்கக் காத்திருக்கும் அர்ச்சனா இன்று உலக அளவில் தன்னை நிரூபித்துக் காட்டி நம் நாட்டிற்கே பெருமை தேடித் தந்திருக்கிறார். பதினாறு வயதுக்கு உட்பட்டவருக்கான நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் அர்ச்சனா. இளம் வயதில் இந்த சாதனை எப்படி சாத்தியமானது என்ற நம் கேள்விக்கு சாதனை மாணவி அர்ச்சனாவின் பதில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சக்சஸ் டிப்ஸ்.
எங்கள் ஊர் மதுரையை அடுத்த திருவாதவூர். சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே என் அப்பா எனக்கு யோகா செய்ய கற்றுக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக தினமும் அதிகாலை நானும் என் அப்பாவும் எங்கள் ஊர் வழியே ஓடி ஓடி பயிற்சி செய்வோம். நான் ஏழாம் வகுப்பு படிக்கிறபோது அனைத்து பள்ளிகளுக்கு இடையேயான ஓட்டப் பந்தய போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களில் முதலாவதாக தேர்வு செய்யப்படும் நபர்தான் அடுத்த கட்ட போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். அந்த போட்டியில்தான் எனக்குள் இருக்கும் திறமையை கண்டு கொண்டேன். என்னால் இரண்டாம் இடத்தை தான் பிடிக்க முடிந்தது. அந்த போட்டியின் தோல்வியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என் தந்தையிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அன்று அவர் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அடுத்த போட்டியிலேயே என்னை வெற்றி பெறச் செய்தது. மாநில அளவில், இந்திய அளவில் முதல் இடம் பிடித்தேன் என்று அவர் வெற்றிப் பாதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
உங்கள் வருங்கால கனவு என்ன? அதை சாதிக்க நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் என்ன என்று கேட்டபோது, நம்பிக்கை தொனிக்க தன் பதில்களைச் சொன்னார் அர்ச்சனா. ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் நம் நாட்டுக்கு வெற்றி தேடித் தரவேண்டும் என்பதே இந்த குட்டிப் பெண்ணின் கனவாம். வெறும் கனவுகளோடு தன் ஆசையை நிறுத்திக் கொள்ளவில்லை அர்ச்சனா. அவர் திறமைக்கு உத்வேகம் அளிக்கும் களமான “விளையாட்டு விடுதியில்” சென்று சேர விண்ணப்பித்து அதில் தேர்வும் பெற்று இன்று ஈரோடு விளையாட்டு விடுதியில் தங்கி திரு. லக்ஷ்மி நாராயணன் என்ற பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.
அர்ச்சனாவின் சாதனைகளையும் அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் அவர் பயிற்சியாளர் திரு. லக்ஷ்மி நாராயணன் நம்மிடம் கூறுகையில், தமிழகத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் “விளையாட்டு விடுதிகள்” (ள்ல்ர்ழ்ற்ள் ட்ர்ள்ற்ங்ப்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக 2 விளையாட்டு விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஈரோடு விளையாட்டு விடுதி முதல் இடம் வகிப்பதற்கு அர்ச்சனாவின் சாதனைகள் முக்கிய காரணம் என்று பெருமை பொங்கக் கூறினார். திறமைகள் இரண்டு வகையாக அறியப்படலாம். ஒன்று, பயிற்சி மூலமும் ஊக்கத்தின் மூலமும் திறமையை அதிகரிக்கச் செய்வது. மற்றொன்று இயற்கையாகவே திறமைகள் நிறைந்து இருப்பது. அதில் அர்ச்சனா இரண்டாம் வகை. இயற்கையிலேயே திறமைகள் நிறைந்த இந்த பெண் உலகத் தர வரிசையில் இடம் பெறும் சாத்தியக் கூறுகள் பல உண்டு என்றும் சமீபத்தில் இலங்கையில் நடந்த உலக அளவிலான தடகள போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்திருப்பதாகவும் திரு. லக்ஷ்மி நாராயணன் கூறினார்.
இந்த இளம் வயதிலேயே ஆலுக்காஸ் நிறுவனத்தின் “சிறந்த சாதனையாளர்” விருது, ஒஇந சேம்பர்ஸ் அமைப்பின் “சாதனையாளர் விருது” மதுரை மாவட்டத்தின் சிறந்த தடகள வீராங்கனை விருது மற்றும் நமது நம்பிக்கை சிகரம் அமைப்பின் சார்பில் சாதனைப் பெண்களுக்கு வழங்கப்படும் “நித்திலா விருது” என்று கழுத்து நிறைய பதக்கங்களும் கை நிறைய விருதுகளுமாக உயர்ந்து நிற்கிறாள் அர்ச்சனா.
இன்று வயதில் பெரியவர்கள்கூட தோல்வியைக் கண்டு துவண்டு போகிற நேரத்தில் அர்ச்சனாவின் முதல் தோல்வி அவருக்கு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பை மட்டுமே ஏற்படுத்தி இருப்பது ஆச்சரியமானது. மிக விரைவில் ஒலிம்பிக்ஸ் தடகளப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பதக்கப் பட்டியலில் அர்ச்சனாவின் பெயர் இடம்பெற நம் வாழ்த்துக்கள்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிற நற்பழக்கங்கள்கூட அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் என்பதற்கு அர்ச்சனாவின் சாதனை ஒரு எடுத்துக்காட்டு. இன்றைய தலைமுறை குழந்தைகளை உயர்த்துவதற்கு எந்த வித கூடுதல் முயற்சிகளும் தேவையில்லை. அடிப்படை செயல்களான பெற்றோரின் சிறந்த பராமரிப்பும் நல்ல வழிகாட்டுதல்களும் நம் இல்லத்திலும் அர்ச்சனா போன்று வயதில் சின்னவர்களாக இருந்தாலும் சாதனையில் பெரியவர்களை நிச்சயம் உருவாக்கும்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிற நற்பழக்கங்கள்கூட அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் என்பதற்கு அர்ச்சனாவின் சாதனை ஒரு எடுத்துக்காட்டு.
Leave a Reply