ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு

– சாதனா

ஹலோ ப்ரெண்ட்ஸ்!

அடுத்த கல்வியாண்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா ?

சுதந்திரா ஹாலிடே ஸ்கூலின் சென்டம் கேம்பில் என்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு மாணவன் சொன்னான். படிக்க உட்காரும்போது இன்ட்ரஸ்டாத்தான் இருக்கு. ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்கு பிறகுதான் போராடிக்க ஆரம்பிக்குது. ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் இப்படித் தான் நடக்கிறது.

மேலும் பல நண்பர்களோடு பேசிய பிறகு தான் புரிந்தது. பாடங்கள் மனதில் சுலபமாக பதிவதில்லை. அதனால்தான் படிப்பில் ஆர்வம் குறைந்து விடுகிறது என்று.

எந்த தகவல் மூளையில் சுலபமாக பதியும்? என்று ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள். எது நம் வாழ்க்கைக்கு முக்கியம் என்று நினைக்கிறோமோ, அதைத்தான் நம் மூளை சிறப்பாக பதிவு செய்து வைத்துக்கொள்கிறது.

ஓர் உதாரணம். யுத்த காலத்தில் போர் வீரர்களிடம் ஒரு நகரின் மேப்பை காண்பித்து நாம் இப்படித்தான் செல்ல வேண்டும் இந்த இடத்தில்தான் எதிரிகளை தாக்க வேண்டும். இந்த வழியாக வெளியேறவேண்டும் என்று விளக்கியிருக்கிறார்கள். அந்த மேப் யாருக்கும் மறக்கவேயில்லை.

சில வருடங்களுக்கு பிறகு யுத்தம் நடந்த இடம் சுற்றுலா இடமாக மாறிவிட அங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு மேப்பை காண்பித்து இந்த வழியாக உள்ளே சென்று இந்த வழியாக நீங்கள் வெளியே வர வேண்டும் என்று விளக்கியிருக்கிறார்கள். பெரும்பாலானவர்களால் அந்த மேப்பை நினைவில் வைத்துக்கொண்டு வழி கண்டுபிடித்து வந்து சேர முடியவில்லை. இதை வைத்து நாமும் புரிந்துகொள்ளலாம். ஒரு தகவலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்துத்தான் அது தற்காலிக நினைவகத்திலோ நிரந்தர நினைவகத்திலோ பதிகிறது.

நாளை நடக்கிற டெஸ்டுக்கு பயன்படும் என்று படித்தால் அது தற்காலிக நினைவகத்தில் தான் பதியும். அதனால் டெஸ்ட் முடிந்தவுடன் மறந்துவிடும். என் வாழ்நாள் முழுவதும் பயன் படப் போகிற விஷயத்தை நான் கற்கப் போகிறேன் என்று முடிவு செய்து படித்தால் அது நிரந்தர நினைவகத்தில் பதிகிறது. எப்போதும் மறக்காது.

இன்னொரு உதாரணமும் பார்ப்போம். பஸ்ஸில் செல்கிறீர்கள். டிக்கெட் எடுக்கும்போது கன்டக்டர் மிச்ச சில்லறையையும் டிக்கெட்டும் தருகிறார். டிக்கெட்டை சட்டைப் பாக்கெட்டில் வைப்போம். சில்லறையை பர்ஸில் வைப்போம். பஸ்ஸை விட்டு இறங்கியதும், இனி தேவையில்லை என்பதால் டிக்கெட்டை கசக்கி வீசிவிடுவோம். சில்லறையை அப்படியே பர்ஸில் பாதுகாப்போம்.

நாளை எக்ஸாம். அதற்கு படிக்க வேண்டும் என்று நினைத்து படித்தால் மூளை நாளை எக்ஸாம் முடிந்தவுடன் இனி தேவையில்லை என முடிவு செய்து நாம் படித்த விஷயங்களை மறக்கத் துவங்கிவிடும்.

நாம் கற்கப்போகிற பாடங்களால் நம் வாழ்க்கை எப்படி மேம்படப்போகிறது ? என்பதை நன்றாக யோசித்து உணருங்கள். அந்த உணர்வோடு படியுங்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் படித்த பாடங்கள் மறக்காது.

பாடங்கள் மறக்காது என்றால் நூற்றுக்கு நூறு ஈஸியாக வாங்கலாம்தானே ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *