உலகம் எங்கும் வாய்ப்புகள்

நேர்காணல் கனகலஷ்மி

ரோஷன் அ.முகமது

CEO – PLANET TUTOR

இன்று என் நாட்டில் என் நகரில் அமர்ந்து
பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

உங்களைப் பற்றி:

என் தந்தை, மணி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு நான் உட்பட நான்கு மகன்கள். என்னைத் தவிர மற்ற மூவரும் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்கள். என் அண்ணன் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றுகிறார். என் முதல் தம்பி அமெரிக்காவில் நியூஸ் சர்ச்.காம் என்ற நிறுவனத்திலும், என் இளைய தம்பி லண்டனில் காக்னிசன்ட் (இர்ஞ்ய்ண்க்ஷ்ஹய்ற்) நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் என் குடும்பத்தில் நான் ஒருவன் மட்டும் கோவையில் சுயதொழில் துவங்கி அதில் வெற்றிகரமாக இயங்கி வருகிறேன்.

ஆரம்ப நாட்கள்:

நான் பொறியியல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றேன். பின்பு இந்தியன் சேம்பர் ஆப் காமெர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். எனக்கு கணினி துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதன் விளைவாக இஇஐப என்ற கணினி பயிற்சி மையத்தில் இணைந்தேன். அங்கே படிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்திற்கே மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் ஆகவும் பணியாற்றினேன். என்னுடைய கடின உழைப்பால் ஓர் ஆண்டிலேயே அந்த நிறுவனத்திற்கு மேனேஜராக உயர முடிந்தது. பின்பு மஸ்கேட் நாட்டில் எனக்கு வேலை கிடைத்து அங்கு ஒரு வருடம் பணியாற்றினேன். எனக்கு அந்த நாட்டில் வேலை செய்வது ஏனோ திருப்தி அளிக்கவில்லை. ஒரு வருடத்திலேயே கோவை திரும்பினேன். இது என் பெற்றோர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இங்கு ‘லோகஸ்’ கர்ஸ்ரீன்ள் என்ற புதிய விளம்பர நிறுவனம் ஒன்றை துவங்கத் திட்டமிட்டேன். இந்த முடிவை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். காரணம், எங்கள் குடும்பத்தில் யாருமே சுய தொழில் செய்தவர்கள் இல்லை. அனைவருமே ஏதோ ஒரு துறையில் நிபுணர்களாகவே இருந்தார்கள். இதனால் சொந்த நிறுவனம் துவங்க வேண்டும் என்ற முடிவை ஏற்க யாரும் முன் வரவில்லை. என்னுடைய திறமையை அவர்களிடம் நிரூபிப்பது பெரிய சவாலாகவே இருந்தது.

பொறியியல் மாணவராக இருக்கிறீர்கள் மற்றும் கணினி கற்பதில் ஆர்வம் இருந்ததாகவும் தெரிவித்தீர்கள். பிறகு எப்படி விளம்பரத் துறையை தேர்வு செய்தீர்கள்?

எனக்கு நன்றாக பேசவும், பொருட்களை எளிதில் விற்பனை செய்யவும் திறமை இருந்தது. நான் பணியாற்றிய இந்தியன் சேம்பர் ஆப் காமெர்ஸ் மற்றும் நிறுவனங்களிலும் விற்பனை சார்ந்த பதவியை வகித்தும் அதில் வெற்றிகரமாக இயங்கியும் வந்தேன். இந்தியன் சேம்பர் ஆப் காமெர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 13 நபர்களில் சிறப்பாக பணியாற்றிய 4 நபர்களில் நானும் ஒருவனாக தேர்வு செய்யப் பட்டேன். இஇஐப நிறுவனத்தில் நான் வேலைக்கு இணைகிறபோது வெறும் 25 நபர்கள் மட்டுமே இருந்தனர். பின்பு என்னுடைய புதுமையான எண்ணங்களும் அதை செயல்முறைப்படுத்திய விதமும் ஒரே ஆண்டில் மொத்தம் 600 மாணவர்கள் இஇஐபயின் கணினி பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் செய்தது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக செயல்பட்டேன். அதில் நான் அடைந்த வெற்றி ஒரு விளம்பர நிறுவனத்தை துவங்குவதற்கு நம்பிக்கை அளித்தது.

சுயதொழில் துவங்குவதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் என்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிற போதும் ஒரு துறையில் நிபுணராக இருக்கிற போதும் இருக்கிற பாதுகாப்பு உணர்வு சுய தொழிலில் இல்லை. குறிப்பாக நான் இயல்பிலேயே மிகவும் சாதுவாகவும் யாரிடமும் அதிகார தோரணையில் பேசுபவனாகவும் இல்லை. இதுபோன்ற நடை முறை சிக்கல்கள்தான் சுயதொழிலில் உள்ளன. இது போன்ற தடைகளை என் நண்பர்களின் உதவியுடனும் என் முயற்சியின் மீதான நம்பிக்கை யாலும் என்னால் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் கடக்க முடிந்தது. ‘லோகஸ்’ என்கிற விளம்பர நிறுவனத்தை சேம்பர் ஆப் காமெர்ஸ் நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய நண்பர்களுடன் இணைந்து துவங்கினேன். 13 ஆண்டுகள் வெற்றிகரமாக இந்தத் தொழிலை செய்து வந்தோம். நாங்கள் புகுத்திய புதுமையான கருத்தாக்கம் எங்கள் வாடிக்கையாளர்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்தது. குறுகிய காலத்திலேயே கோவையின் முன்னணி விளம்பர நிறுவனமாக ‘லோகஸ்’ உயர்ந்தது.

விளம்பரத் துறையை அடுத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவுட் சோர்ஸ் செய்யும் துறையிலும் கால்பதித்து இருக்கிறீர்கள். இதுபோன்ற புதுமையான மாற்றங்கள் வெற்றி அளிக்கக் கூடியதா?

புதுமையான சிந்தனைகள், கருத்தாக்கங்கள் எப்பொழுதுமே எதிர்ப்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் உரியது. நான் ‘லோகஸ்’ நிறுவனத்தில் இருந்தபோது அமெரிக்காவில் உள்ள என் அண்ணன் மூலமாக ஒரு புதுமையான கருத்தாக்கம் ஒன்று கிடைத்தது. அந்தத் துறையின் பெயர் “டெலி ரேடியாலஜி” . இந்தத் துறையில் நல்ல வாய்ப்பு இருப்பதாக என் அண்ணன் தெரிவித்தார். இந்தத் துறையைப் பற்றி அவர் கூறிய விபரங்கள் எனக்குள் ஒருவிதமான ஆர்வத்தை உண்டாக்கியது. அதில் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என்ற முனைப்பை அதிகரிக்கச் செய்தது. நாங்கள் செய்ய வேண்டிய வேலை இதுதான். வெளிநாட்டு மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வோம். அவர்கள் எடுக்கும் எம். ஆர். ஸ்கேன் படங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். எங்களிடம் இருக்கும் ரேடியாலஜி நிபுணர்கள், அந்த படங்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு சமர்ப்பிப்பார்கள். இந்தத் தொழிலை கோவையில் துவங்க என் நண்பர்கள் தயங்கினார்கள். இங்கு சிறந்த ரேடியாலஜி நிபுணர்கள் கிடைப்பது கடினம் என்று தெரிவித்தார்கள். எனக்கு இந்த கருத்தாக்கத்தில் இருந்த நம்பிக்கையும், ஆர்வமும், இந்த தடைகளை எளிதில் கடந்து வர உதவியது. மற்றும் கோவையில் திறமையானவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் யாரும் அடையாளம் காணப்படவில்லை. எனவே இந்தத் தொழிலின் மூலமாக பல திறமையான நிபுணர்களும் பயன் பெறுவார்கள் என்ற உத்வேகத்தில் இந்த தொழிலை துவங்கினேன். அதில் வெற்றியும் பெற்றேன். எனக்கு புதுமையான சிந்தனைகளில் அபார நம்பிக்கையுண்டு. அந்த அடிப்படையில் நான் தற்பொழுது கவனம் செலுத்தி வரும் துறை “ஆன் லைன் டியூட்டரிங் (Online Tutoring)”.

“ஆன்லைன் டியூட்டரிங்” என்றால் என்ன?

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், தேர்வு பெறுவதற்கான சராசரி மதிப்பெண் 80 சதவீதம். எனவே அவர்களுக்கு பள்ளி நேரங்களைத் தவிர கூடுதல் பயிற்சி தேவைப் படுகிறது. மேலை நாடுகளில் நம் நாட்டில் உள்ளது போல் பள்ளிக் குழந்தைகளுக்கான “டியூஷன்” வகுப்புகள் அவ்வளவு எளிமையானது அல்ல. இதை உணர்ந்து மாணவர்கள் இணையதளம் மூலமாக வீட்டிலேயே அமர்ந்து பாடம் கற்கும் முறையை “ஆன்லைன் டியூட்டரிங்” என்கிறோம். இந்த கருத்தாக்கம் எங்களுக்கு புதுமையாக இருந்தது. இதை எப்படி இந்தியாவில் இருந்து செய்வது, அதற்கு தகுதியான நபர்களை எப்படி பணியமர்த்துவது போன்ற பல கேள்விகளும் குழப்பமும் எனக்கு இருந்தது. இருந்தபோதும் இந்த “ஆன்லைன் டியூட்டரிங்” என்ற கருத்தாக்கத்திற்கு அமெரிக்க மக்களிடம் பெரும் வரவேற்பும் தேவையும் இருப்பதை நான் உணர்ந்திருந்தேன். மற்ற தொழில்களில் நான் அடைந்திருந்த வெற்றி இந்தத் துறையிலும் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பை அதிகரிக்கச் செய்தது. அதன் அடிப்படையில் “பிளானட் டியூடர்” Planet Tutor என்ற புதிய ‘ஆன்லைன் டியூட்டரிங்” நிறுவனம் துவங்கினேன்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுடன் வர்த்தகம் மேற் கொள்வதில் உள்ள அடிப்படை சிக்கல்கள் என்ன? நீங்கள் அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்வதில் குறிப்பாக அவுட் சோர்சிங் துறையில் ஈடுபடுவதில் ஏற்படக்கூடிய முதல் அடிப்படை சிக்கல் நம் இந்திய நேரம். நாம் அமெரிக்க நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்கிறபோது இரவு நேரங்களில்தான் அதைச் செய்யமுடியும். அமெரிக்க மாணவர் களுக்கு எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் இணையதளம் மூலம் பாடம் கற்பிப்பார்கள். எனக்கு பல மாணவர்களையும், ஆசிரியர்களையும் கையாள்வது இதுவே முதல் முறை. இந்த நிறுவனத்தில் தற்பொழுது நூறு பேர் பணியாற்றி வருகிறார்கள். அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவது சவாலான செயல். அனைத்து சிக்கல்களையும் எதிர் கொள்வது ஒரு வெற்றியாளராக உருவாக வேண்டும் என்ற ஆர்வம் மூலமாகத்தான்.

“ஆன்லைன் டியூட்டரிங்” என்ற கருத்தாக்கத்திற்கு மற்ற நாடுகளில் எத்தகைய வரவேற்புள்ளது?

நாங்கள் தற்பொழுது இந்த சேவையை மலேசியா, சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளில் செய்துவருகிறோம். தற்போது கிழக்கு இந்தியாவில் இந்த சேவை பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழ் கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் மொழி கற்பதற்கும் கற்பிப்பதற்கும் அதிகமாக தேவை உள்ளது. உதாரணமாக 60 வயது மதிக்கத்தக்க லண்டன்காரர் எங்களைச் சந்தித்தார். அவர் இந்திய வம்சாவழியில் வந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒருமுறை தமிழகம் வந்தபோது அவருடைய தூரத்து உறவினர்களை அடையாளம் கண்டு கொண்டார். அவருடைய கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்கு மொழி ஒரு தடையாக இருந்ததாலும் தமிழை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமுடன் அவர் எங்களை அணுகியது எங்களை ஆச்சரியப்பட வைத்தது. “ஆன்லைன் டியூட்டரிங்” முறைக்கான வரவேற்பும் எங்களை மேலும் உற்சாகமாக செயல்பட வைக்கிறது.

இணையதளம் நன்மைகளைக் காட்டிலும் அதன் தீமைகள் அதிகம். இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி மாணவர்களை பாதிக்காதா?

முந்தைய காலத்தில் சிறு பிள்ளைகள் தொலைக்காட்சி முன் அமர்வது பெரும் குற்றமாக கருதப்பட்டது. இன்று நம் அனைவர் வாழ்விலும் கலந்துவிட்ட அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. அவ்வகையே முந்தைய காலத்தில், செல் ஃபோன் கலாச்சாரம் பெரும் தவறாக கருதப் பட்டது. இன்று செல்ஃபோன் நம்முடன் கலந்து விட்ட ஒரு பொருள். அது போலத்தான் இன்று தவறான கண்ணோட்டத்தில் மாத்திரம் காணப் படும் கணிப்பொறி வெகுவிரைவில் அதன் தேவையை நமக்கு உணர்த்தவிருக்கிறது. இதனுடைய தேவையை இன்று பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொண்டு வரவேற்றிருக் கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகள். எந்த ஒரு கலையையும் தொழில் நுட்பத்தையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோருடைய கண்காணிப்பும், நல்ல சிந்தனைகளும் தீமையை காட்டிலும் நன்மையையே பயக்கும்.

இந்தத் துறையில் உங்கள் போட்டியாளர்களை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்? இதுபோன்ற புதுமை யான சிந்தனையுடன் வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து?

எங்கள் துறையில் போட்டியாளர்கள் ஆசிரியர்கள்தான். பெரும்பாலான பள்ளி ஆசிரியர்கள் இந்த முறையை விரும்புவதில்லை. ஆன்லைன் டியூட்டரிங்கின் தேவை அதிகரித்திருப் பதால் எங்களால் அவர்களை எதிர்கொள்ள முடிகிறது. இன்னும் இதுபோல் பல புதிய சிந்தனையுடன் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு தேவை தங்கள் கருத்தின் மீதான அபார நம்பிக்கை. அதைச் செயல்படுத்துவதில் கவனம்! நான் என் கருத்துகள் எதிர்க்கவும், விமர்சிக்கவும் பட்டபோது சற்றும் மனம் தளர்ந்ததே இல்லை. அந்த துணிச்சல்தான் என்னை வெற்றிபெற செய்திருக்கிறது.

நீங்கள் சாதித்தாக நினைப்பதும் இனி சாதிக்க விரும்புவதும்?

என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் மட்டும் இங்கே எந்த வேலையிலும் இல்லாமல் புதிதாக தொழில் துவங்கி இருக்கிறேன் என்று என் வருங்காலத்தைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட பெற்றோர்கள், இன்று என்னை பெருமையுடன் பார்க்கிறார்கள். நான் ஏதோ ஒரு நாட்டில் பணியாற்றி இருந்தால் அந்த நாட்டில் மட்டும்தான் வேலை செய்திருக்க முடியும். ஆனால் இன்று என் நாட்டில் என் நகரில் அமர்ந்து பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இன்று எத்தனையோ இளைஞர்கள், ரேடியோலஜி நிபுணர்கள் என பலருக்கு வாய்ப்புகள் வழங்கியிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

உங்கள் வருங்கால திட்டம்?

“ஆன்லைன் டியூட்டரிங்” முறையை கிராமப்புற மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தற்பொழுது பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எங்கள் சேவையை வழங்கிவருகிறோம். இது வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும். இந்தியாவின் சிறந்த “ஆன்லைன் டியூட்டரிங்” நிறுவனங்களின் பட்டியலில் “ப்ளானட் டியூட்டர்” முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம் பெறவேண்டும் என்பதே என் வருங்கால திட்டம், என்று கூறி நேர்காணலை முடித்துக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *