– தூரிகா
“முடியாததை
முடிப்பவர்களே
முடிசூடிக் கொள்கிறார்கள்”
பூம்புகார் தையல் நாயகி பள்ளி, அதன் நிறுவனர் நினைவு நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியது. நினைவு நாளை ஒட்டி பேச்சுப்போட்டி ஒன்றை அப்பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ‘பெண் கல்வி’ என்ற தலைப்பில் ஒரு பெண் பேச்சாளர் பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக மின்தடை ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண் பேச்சாளர் உரக்கப்பேசி, அவர் கருத்துக்களை பதிவு செய்த விதம் அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது. அந்தப் பெண் பேச்சாளர் பெயர் சங்கமித்திரை. அப்பொழுது அவர் எல்.கே.ஜி. படித்து வந்தார்.
இன்று, நாகப்பட்டிணத்தில் கலைமகள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சங்கமித்திரை, இலக்கிய உலகில் வளர்ந்து வரும் இளம் பேச்சாளர். எல்.கே.ஜி. வகுப்பு முதல் மேடைகள் பல கண்ட சங்கமித்திரையிடம் சில மேடை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கூறினோம்:
முதன் முதலில் அவர் பேசிய மேடையில் மின்தடை ஏற்பட்டபோது, அந்த மேடையை இவர் கையாண்ட விதம் அதற்கு இவருக்கு கிடைத்த பாராட்டுதல்கள், இவைதான் மேலே குறிப்பிட்டிருந்த சம்பவம். அந்தக் கை தட்டல் சத்தம் சின்ன வயதிலேயே சங்கமித்திரைக்கு பிடித்துப் போய்விட்டதாம். அதை தொடர்ந்து அவர் யூ.கே.ஜி. படிக்கும் சமயத்தில் ‘மலரும் மொட்டும்’ என்ற ஊடக நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றபோது பயமே இல்லாமல் இவர் பேசியதைப் பார்த்து நிகழ்ச்சியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கேமராவை அணைத்துவிட்டு மொத்த யூனிட்டும் கைதட்டி பாராட்டினார்களாம். இந்த பாராட்டுதல்களும் ஊக்கமும் இவரை தொடர்ந்து பேச வைத்துள்ளது.
இன்று தமிழகத்தின் முன்னனி பேச்சாளர்களான சொல்வேந்தர் சுகிசிவம், நாவுக்கரசர் சத்தியசீலன், மரபின் மைந்தன் முத்தையா போன்றவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கும் சங்கமித்திரையிடம் இந்த இலக்கிய தளத்தில் இந்த சிறு வயதிலேயே இத்தனை சாதனைகள் நிகழ்த்த எது காரணமாக இருந்தது என்று கேட்டபோது,
புகழ்பெற்ற தொலைக்காட்சி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பேச்சரங்கில் ஐந்து நாட்கள் வரை பல சுற்றுகளிலும் தேர்வு செய்யப்பட்டு இறுதிநாளில், “நீ ரொம்ப சின்னப் புள்ளையா இருக்க, வேண்டாம்” என்று கூறினார்களாம். அந்த நிராகரிப்பு தான் என்னை வெறியுடன் செயல்பட வைத்தது என்று கூறினார்.
14 வயதான சங்கமித்திரை, இன்று 2000 பேர் மத்தியில் நின்று உரையாற்றும் ‘நம்பிக்கை பேச்சாளர்’. இவர் உரையை கேட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் M.B.A. மாணவர்களுக்கு “How to Win” என்ற தலைப்பில் மாணவர் கருத்தரங்கில் உரையாற்றும் வாய்ப்பை வழங்கியது. இந்த இளம் வயதிலேயே “இலக்கிய சாதனையாளர் விருதை” வழங்கி கௌரவித்துள்ளது இந்தோனேசியா அன்புப் பாலம் அமைப்பு. ஒருமுறை இவர் வாசித்த கவிதையை கேட்ட இறையன்பு ஐ.அ.ந., அவர்கள், தனக்கு வழங்கிய கேடயத்தை சங்கமித்திரைக்கு வழங்கினாராம்.
ஏராளமான பாராட்டுதல்கள், விருதுகளுக்கு இடையே உன்னுடைய வருங்காலக் கனவு என்ன என்று கேட்டபோது, “இதெல்லாம் பத்தாதுங்க. இன்னும் சாதிக்கணும். மனநல நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும் வரணும்”. இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது, சின்னப் பிள்ளையாக இருந்தபோது சங்கமித்திரைக்குள் பதிந்த அந்த நம்பிக்கை வார்த்தைகள்தானாம், “முடியாததை முடிப்பவர்களே முடிசூடிக் கொள்கிறார்கள்”.
மேலும், இனி வரும் காலங்களில் நம்பிக்கை வளர்க்கிற மேடையிலும் ஆன்மீகத்தை வளர்க்கிற மேடைகளிலும் பேச விரும்புவதாக சங்கமித்திரை கூறியபோது நாமும் வியந்து போனோம். இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் கலையும் கலாச்சாரமும் மறைந்து வருவதாக எழுகிற குற்றச் சாட்டுகளுக்கிடையே சங்கமித்திரை போன்ற குழந்தைகள் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இன்றைய குழந்தைகள் தோல்விகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் வருந்துவதே இல்லை. மாறாக தடையை தகர்த்து முன்னேறவே துடிக்கிறார்கள். சங்கமித்திரை போன்ற சின்னவர்களிடம் இருந்து பெரியவர்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பலவும் உள்ளது!!
Leave a Reply