ஈஸியாக வாங்கலாம்

மாணவர் பகுதி

– சாதனா

ஹலோ ப்ரண்ட்ஸ்!

ஸ்கூல் திறந்தாச்சு. இனி படி படி என்ற வார்த்தை மீண்டும் ஒலிக்கத் தொடங்கிவிடும்.

ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்ததும், பாடப் புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார கால தாமதமானால் அட்வைஸ் மழை ஆரம்பமாகி விடும்.

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் உங்களிடம் படிக்கச் சொல்வார்கள். இப்படி போரடிக்க போரடிக்க அட்வைஸ் மழை பொழிவதன் மர்மம்தான் என்ன? முன் பின் தெரியாதவர்கள்கூட நம்மை நன்றாகப் படிக்கச் சொல்வது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா ?

மலை உச்சியில் இருக்கும் ஓர் இடத்தை அடைய வின்ச்சிலும் போகலாம் . ரோப் காரிலும் போகலாம். படியில் நடந்தும் போகலாம். முதல் இரண்டு பயணமும் ஈஸி. படியில் நடந்து போவது கடினம். படியில் நடந்து மலை உச்சிக்கு போவதே சிரமம் என்றால் படியே இல்லையென்றால் அந்தப் பயணம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

படிக்காமலும் வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால், அது படி இல்லாத மலையில் நடந்து உயரத்திற்குப் போவது போல சிரமமான பயணம். ஆனால் படிப்பால் முன்னேறியவர்கள் வாழ்க்கை ரோப் கார் போல ஈஸியாக மேலே போய்க்கொண்டே இருக்கிறது.

மாணவர்களுக்காக நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பெற்றோர்களிடம் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன ? என்ற கேள்விக்கு படி படின்னு சொல்லக்கூடாது என்பார்கள், பெரும்பாலான மாணவர்கள்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வீரனை பார்த்து சுற்றியிருக்கும் எல்லோரும் “ஓடு! ஓடு” என்றுதானே சொல்வார்கள். அதுபோல கற்பதற்காக ஓடிக்கொண்டிருப்பவர்களை பார்த்து “படி! படி” என்றுதானே சொல்ல முடியும்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்களின் வாழ்க்கைக்கும் கலைக்கல்லூரியில் படிப்பவர்களின் வாழ்க்கைக்கும், மருத்துவம் படித்தவர்களின் வாழ்க்கை நிலைக்கும் வேறுபாடு இருப்பது மாதிரி சராசரியாக 40 மார்க் எடுப்பவர்களின் வாழ்க்கைக்கும் எப்போதும் 90 எடுப்பவர்களின் வாழ்க்கைக்கும் வேறுபாடு இருக்கிறது. அதனால்தான் படி படி என்று எல்லோரும் சொல்கிறார்கள் .

உயர்ந்த இடத்திற்கு போக உயர்ந்த மதிப்பெண் தேவை. இது வருமானத்தில் உயர்ந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல..

ஒன்றை புரிந்து கொள்ளும் விதத்தில், திறம் பட சிந்திப்பதில், முடிவெடுப்பதில் என வாழ்க்கையில் படித்தவர்கள் செயல்படும் விதத்திற்கும் படிக்காதவர்கள் செயல்படும் விதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனவே புத்திசாலியாக வாழ்வதில் உள்ள சந்தோஷத்தை பெறுவதற்காகப் படியுங்கள். சிறப்பாக முடிவெடுத்து சிறப்பான வாழ்க்கை வாழும் பெருமைக்காக படியுங்கள். இதையெல்லாம் உணர்ந்து படித்தால் ஈஸியாக வாங்கலாம் நூற்றுக்கு நூறு.

நூற்றுக்கு நூறு பெற நூறு வழிகள்.

புது மாணவன்

எழுதுவதற்கு புதிய நோட் புக் பேனா, அணிவதற்கு புது யூனிபார்ம் ஷு என எல்லாவற்றையும் புதியதாக எடுத்துச்செல்லும் நீங்கள் உங்களையும் புத்தம் புது மாணவனாக பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். புதிய உத்வேகத்துடன் பள்ளிக்குச் செல்லுங்கள்.

முறையான துவக்கம் முழுமையான வெற்றி

முதல் மாதத் தேர்வில் சென்டம் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். இது சுலபமும் கூட. ஏனெனில் எல்லா சப்ஜெக்டிலும் ஒன்றிரண்டு பாடங்கள் மட்டுமே நடத்தி இருப்பார்கள். முதல் மாதத் தேர்வில் சென்டம் வாங்கி விட்டால் அதே உற்சாகத்தில் எல்லா மாதத்திலும் உழைத்து சென்டம் வாங்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஒவ்வொரு நாளும் வெற்றி

அன்றைய நாளில் செய்யத் திட்டமிட்டதை அன்றே படித்து முடித்தால் அந்த நாள் வெற்றி நாள் என்று அர்த்தம். எனவே அன்றைய பாடங்களை அன்றே படித்து ஒவ்வொரு நாளையும் வெற்றி நாளாக்குங்கள்.

ஒவ்வொரு நாளும் உற்சாகம்

ஆசிரியரிடம் அடி வாங்கியது பெற்றோரிடம் திட்டு வாங்கியது என வருத்தங்களை சேமித்து வைப்பதற்கு பதில் உங்களுக்கு கிடைத்த பாராட்டு, உங்கள் பெற்றோர்கள் உங்களை நினைத்து பெருமைப் பட்ட சம்பவம், போட்டிகளில் கலந்து கொண்டு வாங்கிய பரிசுகள் என உற்சாகமான நினைவுகளை மட்டுமே சுமக்கப் பழகுங்கள். அடிக்கடி வெற்றி நிமிடங்களை நினைத்துப் பாருங்கள். பிறகு ஒவ்வொரு நாளும் உற்சாகம்தான்.

மாதம் 10 மார்க்

நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என்று நீங்கள் உறுதியாக இருந்தால் செய்ய வேண்டியது ஒரே ஒரு வேலைதான். அந்த மாத நடத்தி முடித்த பாடங்களை, அந்த மாத முடிவில் நீங்களே தேர்வு வைத்து தயாராக இருக்கிறீர்களா என்று சோதித்துக்கொள்ளுங்கள். ஆண்டுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்க நீங்கள் 10 மாதங்கள் படிக்க வேண்டும். எனில் இந்த மாதம் நடத்திய பாடங்களில் நீங்கள் தரோவாக இருந்தால் 10 மார்க் இப்போதே போட்டுக் கொள்ளலாம். அடுத்த மாதமும் இதே நிலை என்றால் 20 மார்க். அப்புறமென்ன ஆண்டுத் தேர்வில் நிச்சயம் நூறு மார்க்.

எல்லா இடத்திலும் இலக்கு

உங்கள் கண்ணில் படுகிற இடத்திலெல்லாம் நீங்கள் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள மதிப்பெண்ணை சப்ஜெக்ட் வாரியாக எழுதி ஒட்டி வையுங்கள். உங்கள் சட்டை பாக்கெட்டில் பர்ஸில், நோட்டு அட்டையில், புத்தக உள் அட்டையில் என எல்லா இடங்களிலும் எழுதி ஒட்டிக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் இலக்குக்காக இயங்குவீர்கள்.

கடமையைச் செய். பலனை எதிர்பார்!

தேர்வு நாளுக்கு முதல்நாளே உங்கள் உழைப்பிற்கு மதிப்பெண் போடுங்கள். இந்த மாதம் தினமும் நான் படித்தேன். படித்ததை எழுதிப் பார்த்தேன். என் உழைப்பிற்கு நிச்சயம் 70 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நீங்களே உங்கள் உழைப்பிற்கு மதிப்பெண் கொடுங்கள். படிப்பதற்காக நூறு சதவீதம் உழைத்தால்தான் நூற்றுக்கு நூறு வாங்க முடியும்.

ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவராகுங்கள்.

மதிப்பெண் வாங்கினால்தான் என்றில்லை அதற்காக உழைப்பவர்களைக்கூட ஆசிரியர் களுக்கு பிடிக்கும். ஆசிரியர்களிடம் பணிவுடனும் மரியாதையுடனும் பழகுங்கள். ஆசிரியருக்கு பட்டப்பெயர் வைப்பது, கிண்டலடிப்பது போன்ற செயல்களில் ஈடு படாதீர்கள். இது உங்களின் கற்கும் திறனை நிச்சயம் பாதிக்கும்.

மதிப்பெண்ணை மதிப்பில் வைக்காதீர்கள்.

கடந்த வருடம் வாங்கிய மதிப்பெண்களை மனதில் வைத்துக் கொண்டிருக்காதீர்கள். வடிவேலு பாணியில் அது போன வருஷம். இது இந்த வருஷம் என தில்லாக நில்லுங்கள். 60 மதிப்பெண் வாங்கினோம் என நினைத்துக் கொண்டிருந்தால் அதிலிருந்து சிறிதளவே உயர்வீர்கள்.

எனவே கடந்த வருடம் குறைவாக உழைத்தோம். குறைவான மதிப்பெண் கிடைத்தது. இந்த வருடம் அதிகம் உழைக்கப்போகிறோம் அதிக மதிப்பெண் வாங்கப்போகிறோம் என்றே நினையுங்கள்.

சென்டம் சுரேஷ், சென்டம் ரமேஷ்

சில டியூசன் ஆசிரியர்களை மாணவர்கள் சென்டம் ரமேஷ், சென்டம் சுரேஷ் என்று அழைப்பதுண்டு. அது போல இனி நீங்களும் உங்கள் பெயருடன் சென்டம் என்ற வார்த்தையை இணைத்து சென்டம் கவிதா என்றே சொல்லுங்கள்.

வாங்குவதற்கு துணை நிற்பவர்களுக்கே சென்டம் என்ற வார்த்தை மதிப்பை தருகிறது என்றால் உழைத்து சென்டம் வாங்கப்போகிற உங்களுக்கு நிச்சயம் சென்டம் என்ற அடைமொழி உயர்வைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *