ஈசியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு

மாணவர் பகுதி

– சாதனா

கிளாஸ்ரூமில்
நீங்கள் நடந்து
கொள்ளும்
விதம்தான் உங்கள்
மதிப்பெண்ணாக
மாறுகிறது

வெற்றி வட்டம்
ஹலோ ப்ரெண்ட்ஸ்,

சென்டம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா ?

அதைச் சொல்வதற்கு முன்னால் சில விஷயங்களை சொல்லிவிடுகிறேன்.

கிளாஸ்ரூமில் நீங்கள் நடந்து கொள்ளும் விதம்தான் உங்கள் மதிப்பெண்ணாக மாறுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

அதிக மதிப்பெண் பெற நினைக்கும் மாணவர்கள் கிளாஸ் ரூமில் பாடங்கள் நடத்தப் படும்போது அதிக அக்கறையுடன் கவனிக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.

ஒரு மாணவர் சென்டம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். இன்னொருவர் பாஸானால் போதும் என்று நினைக்கிறார். இதில் கிளாஸ்ரூமில் பாடத்தை யார் நன்கு கவனிப்பார்கள்? நிச்சயம் சென்டம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறவர்தான். எனவே வகுப்பில் என்ன நினைப்போடு உட்கார்ந்திருக் கிறீர்கள்? எப்படி நடந்து கொள்கிறீர்கள்? என்பதை பொறுத்தும் உங்கள் வெற்றி இருக்கிறது.

ஆசிரியர்கள் உங்களுக்கு என்ன மார்க் போடுகிறார்கள் என்பதை ஒரு நிமிடம் மறந்து விடுங்கள். வகுப்பறையில் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கு நீங்கள் என்ன மார்க் போடுவீர்கள் ? அதுதான் உங்கள் மார்க்.

ஆசிரியர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். பல நேரங்களில் உங்களைப் பற்றிய அபிப்ராயம்தான் மதிப்பெண்ணாக மாறுகிறது. உங்கள் பேப்பரை எடுக்கும்போதே இவன் படிப்பில ஆர்வமே இல்லாத பையனாச்சே என்ற எண்ணத்தோடே திருத்தினால் மதிப்பெண் சற்று குறைவாகவே கிடைக்கும்.

கிளாஸ்ரூமில் தேவையற்ற அரட்டைகளை தவிர்த்து விடுங்கள். வகுப்பு நடக்கும் நேரத்தில் கூட உங்களை கட்டுப்படுத்திக் கொண்டு கிளாஸை கவனிக்க முடியாவிட்டால் உங்களால், உங்களை எப்போதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாது.

ஆசிரியர் பாடம் நடத்தும்போது அக்கறையோடும் ஆர்வத்தோடும் கவனியுங்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனிக்காததால்தான் அதிக நேரம் படிப்பதற்காக என்று வீட்டில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

வெற்றி வட்டம்

இதுவரை நீங்கள் வாங்கிய மார்க் என்ன என்பதை மறந்து விடுங்கள். கிளாஸ்ரூமில் ஆர்வத்தோடு அமருங்கள். உங்களையும் அறியாமல் நன்றாக கவனிக்கத்தொடங்குவீர்கள். நன்றாக கவனிப்பதால் நன்றாக புரிய ஆரம்பிக்கும். அதனால் நன்றாக படிக்க ஆரம்பிப்பீர்கள். நன்றாக தேர்வெழுதுவீர்கள். நல்ல மார்க் வாங்குவீர்கள். தேர்வு வெற்றி என்ற வட்டத்தின் தொடக்கம் கிளாஸ்ரூமில்தான் இருக்கிறது.

துவங்கிய இடத்தில் கொண்டு வந்து முடித்தால்தான் வட்டம். அதாவது முழுமை யானால்தான் வட்டம். ஆக முழுமைதான் வெற்றி. அதனால்தான் நூற்றுக்கு 100ல் இரண்டு வட்டங்கள் இருக்கிறது.

சென்டம் என்றால் நீங்கள் செய்யும் செயலை சிறப்பாக அதாவது முழுமையாக செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

நூற்றுக்கு நூறு பெற நூறு வழிகள்

புது மாணவன்

கடந்த வருடம் வாங்கிய மதிப்பெண்ணை மனதில் வைத்துக்கொண்டு கிளாஸ்ரூமிற்குள் நுழையாதீர்கள். எழுதுவதற்கு புதிய நோட், புது யூனிபார்ம் போல புது மாணவனாக பள்ளிக்கு செல்லுங்கள்.

அரை மணிக்கு முன்னால் அமைதி

மனம் அமைதியாக இருந்தால்தான் எதையும் சிறப்பாக கற்க முடியும். எனவே வகுப்பு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பிலிருந்தே அமைதியாக இருந்து பழகுங்கள்.

நிமிர்ந்து உட்காருங்கள்

உண்மையில் நீங்கள் உட்காரும் விதம்கூட உங்களின் கவனிக்கும் திறனை மாற்றிவிடும். உடல் நேராக வளையாமல் இருந்தால் சோர்வின்றி நன்றாக கவனிக்க முடியும்.

பாதியில் உட்காருங்கள்.

கிளாஸ்ரூமில் உட்காரும்போது சேரில் சாய்ந்து உட்காராமல் முன்பாதியில் அமருங்கள். இப்படி அலர்ட்டாக உட்காருவதால் நன்றாக கிளாஸை கவனிக்க முடியும்.

டாக்டராக உட்காருங்கள்.

கிளாஸ்ரூமில் உட்காரும்போது எதிர் காலத்தில் நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்களோ, அந்த நிலையை அடைந்து விட்டது போல கம்பீரமாக உட்காருங்கள். உதாரணத்திற்கு நீங்கள் சையின்டிஸ்டாக வர விரும்புகிறீர்கள் என்றால் கிளாஸ்ரூமில் உட்காரும் போது உங்களை ஒரு மிகப்பெரிய சையின்டிஸ்டாக கற்பனை செய்து கொண்டு உட்காருங்கள். இதனால் உங்கள் மனப் பான்மையில் மாற்றம் வரும். உங்கள் மூளை சிறப்பாக செயல்படும்.

இடைவேளையில் நில்லுங்கள்

உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் சோர்வை போக்கவும் புத்துணர்ச்சி பெறவும் ஒவ்வொரு பிரேக்கிலும் எழுந்து நில்லுங்கள். முடிந்தால் தோப்புக்கரணம் போடுங்கள். இதனால் மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். அடுத்த கிளாஸை சிறப்பாக கவனிக்க முடியும்.

காற்றில் படம் வரையுங்கள்

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போதே கற்றுக்கொண்ட விஷயத்தை காற்றில் வெறும் கைகளால் படம் வரைந்து பாருங்கள். இதன் மூலம் படங்கள் சுலபமாக மனதில் பதியும்.

ரீ-வைண்டு செய்து பாருங்கள்

ஒரு பீரியட் முடிந்து அடுத்த பீரியட் ஆசிரியர் வருவதற்கு முன் உள்ள இடை வேளையில் உங்கள் டீச்சர் உள்ளே நுழைந்ததி லிருந்து பாடம் நடத்தி முடிந்த வரை அனைத்து காட்சிகளையும் வீடியோ படம் போல ரீவைண்டு செய்து பாருங்கள்.

கவனிக்கும் திறன் பயிற்சி

கவனிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள ஒரு பீரியட் முடிந்து அடுத்த பீரியட் துவங்க உள்ள இடைவெளியில் உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்.

இதன் மூலம் உங்கள் கவனிக்கும் திறன் அதிகமாகும்.

மனப்பயிற்சி

கிளாஸ் நடக்கும் நேரத்தில் யாருடனும் பேசாதீர்கள். முழு கவனத்தையும் டீச்சரிடமே இருக்க வேண்டும். இது ஒரு சிறந்த மனக் கட்டுப்பாட்டு பயிற்சி.

உடல் பயிற்சி செய்ய துவங்கிய முதல் சில நாட்களுக்கு நம் கை கால் இணைப்புகளில் வலி எடுக்கும் . பிறகு வலி பழகி உடம்பு பயிற்சிக்கு ஏங்கத் துவங்கும். அது போல மனப்பயிற்சி துவங்கும் முதல் சில நாட்களுக்கு சோர்வாகத்தான் இருக்கும். அதன் பிறகு இடியே விழுந்தாலும் தேவையில்லாத விஷயங்களில் உங்கள் கவனம் போகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *