வீட்டிற்குள் வெற்றி

உங்கள் குழந்தை ஜெயிக்க தினமும் கொடுக்கிறீர்களா பூஸ்ட்?

முதலிலே சொல்லிவிடுகிறேன் இது பூஸ்ட் என்ற பானத்தை விளம்பரபடுத்துகிற கட்டுரை அல்ல.

பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று என்னிடம் முதலில் சொன்னது கபில்தேவ் தான். என் வெற்றிக்கு காரணம் பூஸ்ட் என்று கபில்தேவ் சொல்லி முடித்ததும் கவாஸ்கர் அதை திருத்துவார். என் வெற்றி அல்ல, எங்கள் வெற்றிக்கு என்று.

இப்போது அந்த வேலையை சச்சினும் டோனியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன். இது பூஸ்ட் கொடுப்பது பற்றிய கட்டுரைதான். ஆனால் பூஸ்டை குடிக்கச் சொல்லுகிற கட்டுரை அல்ல.

குழந்தை நோஞ்சானாக இருந்தால் பார்க்கிறவர்களெல்லாம் கேட்பார்கள். என்ன சாப்பிடறான்? ஏன் ஆள் இப்படி எலும்பும் தோலுமா இருக்கான்? சரியாவே சாப்பிட மாட்டேன்கிறான் என்றால் அடுத்து வருகிற பதில் ஹார்லிக்ஸ் பூஸ்ட் எதாவது தர வேண்டியது தானே.

நம் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. அவன் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே தான் ஹார்லிக்ஸ், பூஸ்ட், காம்ப்ளான் என்று ஏதாவது ஒரு பானத்தை அவர்களுக்கு கொடுக்கிறோம்.

இது உடல் வளர்ச்சிக்கு. ஆனால் மன வளர்ச்சிக்கு ?

உடலைப் போலவே மனதை வலுப் படுத்தவும் நாம் நம் குழந்தைகளுக்கு பூஸ்ட் தர வேண்டியிருக்கிறது. மனம் சிறப்பாக இயங்கவும் முதிர்ச்சி அடையவும் நிறைய ஊட்டச்சத்துகள் தேவை.

ஊட்டச்சத்து என்பது அவர்களின் உடலுக்கு கூடுதல் போஷாக்கு அதாவது உடலுக்கு தரும் கூடுதல் சக்தி. அதுபோல உங்களின் வார்த்தை பூஸ்ட் அவர்கள் மனதிற்கு தரும் எக்ஸ்டிரா எனர்ஜி.

ஒரு வார்த்தை எந்த அளவுக்கு உற்சாகம் தரும் என்பதை நீங்கள் உணர்வதற்காக ஒரு சம்பவம்.

திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் . இல்லை இல்லை நாதஸ்வர சக்ரவர்த்தி. அவருடைய கச்சேரி மதுரை நாயக்கர் மஹாலில் ஏற்பாடாகியிருந்தது. ராஜரத்தினம் அவர்கள் நாதஸ்வரத்தில் ஸ்ருதி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசர் வந்து கொண்டிருக்கிறார்.

அளவு கடந்த கூட்டம் என்பதால் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து ஒரே பேச்சுக் கூச்சல். நாதஸ்வர சக்கரவர்த்தி மூடு-அவுட். அதனால் கச்சேரி செய்ய இயலாமல் நாதஸ்வரத்தை தூக்கி உறைக்குள் வைத்து விட்டார்.

மந்திரி பதறியபடி வந்தார். ‘உங்கள் நிலை எனக்கு புரிகிறது. ஆனால் அரசர் சபைக்கு வந்தாகிவிட்டது. அதனால் மரியாதைக்காக ஒரே ஒரு பாட்டு மட்டும் வாசியுங்கள். அரசரிடம் உங்கள் மனநிலையை நான் விளக்கிவிடுகிறேன்’ என்றார். வேண்டுகோளை ஏற்று நாதஸ்வரச் சக்ரவர்த்தியும் வாசிக்கத் தொடங்கினார். முதல் பாட்டு முடிந்தது. மந்திரி கச்சேரியும் முடிந்தது என்று நினைத்தார். ஆனால் முடியவில்லை. மூன்று மணி நேரம் விடாமல் இசை மழை அங்கே பொழிந்தது.

ஒரே பாட்டோடு கச்சேரி முடியப்போகிற என்று நினைத்திருந்த அரசருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. நாதஸ்வரச் சக்ரவர்த்தியை அழைத்து பொன்னும் பொருளும் நிறைந்த பரிசுத்தட்டை நீட்டினார். ராஜரத்தினம் அவர்கள் அடக்கமாக சொன்னார்கள். ‘அரசே! இது எனக்கு சேர வேண்டியதில்லை. அதோ கூட்டத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கேந்தியபடி நிற்கிறானே அவனுக்குக் கொடுங்கள். இது அவனுக்கு சேர வேண்டியது. ஒரு பாடலோடு நான் நிறைவு செய்ய இருந்தேன். அந்த பாடலின் நிறைவில் அவன் தன்னை மறந்து சபாஷ், அற்புதம் என்றான். அந்த வார்த்தை எனக்கு தந்த சிலிர்ப்பில்தான் இந்தக் கச்சேரி இவ்வளவு சிறப்பாக அமைந்தது. எனவே இது எனக்கு சேரவேண்டியதில்லை. என்னை உற்சாகப்படுத்திய அவனுக்கு சேர வேண்டியது’ என்றார்.

இப்போது யோசித்து பாருங்கள். நாதஸ்வர சக்ரவர்த்தி என்று நிலையில் இருப்பவருக்கே ஒரு சபாஷ் உத்வேத்தை தந்து சிறப்பாக செயல்பட வைக்கிறது என்றால் நம் வீட்டு இளவரசர்களுக்கு எத்தனை சபாஷ் தேவை.

இப்போது புரிகிறதா, வார்த்தை எவ்வளவு பெரிய பூஸ்ட் என்று ?

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளை பாராட்டுவதே இல்லை. பாராட்டினால் அலட்சியம் ஆகிடுவான். ஓவர் கான்பிடன்ஸ் வந்துடும். யாரையும் மதிக்க மாட்டான் என்றெல்லாம் பல காரணங்கள் வைத்திருக்கி றோம்.

பாராட்டாவிட்டாலும் கூட பரவாயில்லை சில பெற்றோர்கள் எதற்கெடுத்தாலும் தங்கள் குழந்தைகளை திட்டிக்கொண்டே இருப்பார்கள். ஊட்டச்சத்தை கொடுக்க வேண்டிய நாமே இருக்கிற கொஞ்ச நஞ்ச ஊட்டத்தையும் குறைத்தால் எப்படி ?

எனவே தினமும் ஒரு முறையாவது பூஸ்ட் கொடுங்கள். பாராட்டுங்கள்.

அதென்ன தினமும் பாராட்டுவது என்று கேட்கிறீர்களா? ஒரு முறை பூஸ்ட் கொடுத்தால் உங்கள் குழந்தையின் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான சக்தி கிடைத்துவிடுமா என்ன ?

பூஸ்டில் உள்ள சத்துக்கள் அன்றைய நாளுக்குத்தான் எனர்ஜி தரும். அடுத்த நாள் எனர்ஜி வேண்டும் என்பதால் தான் அடுத்த நாளும் பூஸ்ட் தருகிறோம். அதனால்தான் சொல்கிறேன், தினமும் பாராட்டுங்கள்.

பாராட்டுகிற மாதிரி எதையாவது செய்தால் தானே என்கிறீர்களா? உங்களுக்காகத்தான் நமது உபநிஷத்தில் சொல்லியிருக்கிறார்கள், ‘ஒருவன் எப்படி இருக்கிறானோ அவனை அப்படி நடத்தினால் அவன் அப்படியே தான் இருப்பான். ஒருவன் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவனை அவ்வாறு நடத்தினால் அவன் அவ்வாறு உயர்கிறான்.’

இதற்கு அர்த்தம் உங்கள் குழந்தை யாரிடமும் சரியாக பேசுவதில்லை. என்றாலும் கலகலப்பான பையன் என்று அவனைப்பற்றி பேசுங்கள். அவனை பாராட்டுங்கள். கலகலப்பான பையனைப்போல நடத்துங்கள். நிச்சயம் அவன் கலகலப்பான பையனாக வருவான்.

நீங்கள் இதை செய்து பாருங்கள் அப்போதுதான் நான் சொல்வது புரியும். கூச்ச சுபாவம் உள்ள உங்கள் குழந்தை வீட்டுக்கு வருகிறவர்களை பார்த்து புன்னகை பூத்தால் கூட போதும். அதையே பெரிதாக்கி பாராட்டுங்கள். உங்க பையன் நல்ல ஸ்மைலிங் ஃபேஸ்னு வந்தவர் சொன்னார் என்று ரசித்து சொல்லுங்கள். சில நாட்களுக்கு பிறகு யார் வந்தாலும் உங்கள் குழந்தை புன்னகை பூக்கும்.

இதைத்தான் ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அவனை அப்படி நடத்தினால் அவன் அப்படி உயர்கிறான் என்கிறது உபநிஷதம்.

பெற்றோர்களுக்காக நான் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெற்றோர்களில் யாராவது ஒரு பெண்மணியை எழுப்பி கேட்பேன். உங்கள் வீட்டிற்கு நான் சாப்பிட வருகிறேன். நீங்கள் ஊற்றிய சாம்பாரை சாப்பிட்டு விட்டு எங்கம்மா நினைவு வருகிறது என்கிறேன். ரசத்தை சாப்பிட்டுவிட்டு டம்ளரில் கொஞ்சம் கொடுங்கள் என்கிறேன். அந்தத்தருணத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள். அடுத்த முறை நான் சாப்பிட வருகிறேன் என்றால் எப்படி சமைப்பீர்கள் ?

இதே, நான் சாம்பாரை சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம் என்கிறேன். ரசத்தை சாப்பிட்டு விட்டு ஒன்றும் பேசாமல் முகம் சுளிக்கிறேன். இப்போது எப்படி இருக்கும் உங்களுக்கு? அடுத்த முறை நான் வீட்டிற்கு வருகிறேன் என்றால் எப்படி சமைப்பீர்கள்? நிச்சயம் டென்ஷனோடுதான் சமைப்பீர்கள். இன்னிக்கு என்ன குறை சொல்வாரோ என்ற எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இல்லையா ?

நூற்றுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறேன். யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். ஆனால் எல்லோரும் ஒரே குரலில் ஒன்றை சொல்வார்கள். சார் நீங்கள் உதாரணத்திற்கு பாராட்டும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் குறை சொல்லும்போது உதாரணத்திற்குத்தான் என்னை சொல்கிறீர்கள் என்று தெரிந்தாலும் வருத்தமாகத்தான் இருந்தது.

உதாரணத்திற்கு திட்டும்போதே வருத்தமாக இருக்கிறதே, உண்மையாகத் திட்டும் போது நம் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அது எந்த அளவிற்கு நம் குழந்தைகளின் செயல்களை முடக்கிவிடும் இதை நாம் உணர்ந்து விட்டால் நம் குழந்தைகளை திட்டமாட்டோம்.

ரசிப்பது கூட பாராட்டுதான்

வார்த்தைகளால்தான் என்றில்லை. நம் குழந்தைகள் செய்யும் காரியங்களைப் பார்த்து ரசிப்பதுகூட அவர்களுக்கு நாம் தரும் பூஸ்ட்தான்.

ரபி என்கிற பதினான்கு வயது சிறுவன் ஒரு கவிதையை எழுதி தன் தந்தையிடம் காண்பித்தான். அதைப் படித்து ரசித்த அவர் தந்தை, ‘இந்த தேசத்தை ஆள்கிறவனுக்கு மட்டும் இதை படிக்கத் தெரிந்திருந்தால் பொன்னும் பொருளும் கிடைத்திருக்கும். ஆனால் உண்மை நிலை அப்படியில்லாததால் நான் உனக்கு பரிசு தருகிறேன்’ என்று சொல்லி 500 ரூபாய் கொடுத்தார். 14 வயதில் கிடைத்த இந்த ஊக்கம் தான் ரபியை ரபிந்திரநாத் தாகூராக இந்தியாவின் தேசியக் கவிஞராக மலர்த்தியது.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். திட்டுவதன் மூலம் உற்சாகத்தை குறைக்கிறோம். பாராட்டு வதின் மூலம் உற்சாகத்தை அதிகரிக்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவெடுங்கள்.

உங்களுக்கும் தேவை பூஸ்ட்

குழந்தை செய்த தவறுகளை நினைக்கும் போது அவர்கள் பற்றிய கவலைகள் பெற்றோர்களுக்கு அதிகரிப்பது இயல்பே. கவலையோடு உள்ள அந்த தருணங்களில் நிச்சயம் நம் குழந்தைகளுக்கு பூஸ்ட் கொடுக்க முடியாது.

எனவே நமக்கும் கொஞ்சம் பூஸ்ட் தேவை.

உங்கள் குழந்தைகளை நினைத்து நீங்களே பெருமைப்பட்ட தருணங்களை அடிக்கடி நினைத்துப்பாருங்கள். குறைகளை மட்டும் பட்டியலிடாமல் கூடவே நிறைகளையும் பட்டியலிடுங்கள்.

பள்ளம் எது மேடு எது என்பதை நடந்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். எனவே உற்சாகப்படுத்தி நடக்க வையுங்கள். விழுவதும் எழுவதும் வாழ்க்கையில் இயல்பே. விழும்போது பதறாதீர்கள். திட்டாதீர்கள். உன்னால் எழ முடியும் என்று நினைவுபடுத்துங்கள்.

ப்ரஷை கையால் இறுக்கி பிடிக்கவே இன்னும் வயது போதவில்லை என்பதை பல நேரங்களில் நாம் மறந்துவிட்டு இன்னும் நம் குழந்தை ஓவியம் வரையவில்லையே என்று கவலைப்படுகிறோம்.

நம் குழந்தைகளுக்கு எது சரி? எது தவறு? எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதெல்லாம் வளர வளரத்தான் புரிபடும். ஆனால் அவர்களை நாம் குழந்தைகள், என்பதை மறந்து விட்டு இந்த வயசில இவ்வளவு கோபம் இந்த வயசில இவ்வளவு பிடிவாதம் என்று முத்திரை குத்திவிடுகிறோம்.

மதுரையில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் நிகழ்ச்சி முடிந்து கைக்குழந்தையோடு வந்த பெண் ஒருவர் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். தன் குழந்தைக்கு கண் மண் தெரியாமல் கோபம் வருவதாகவும் அவளுக்கு நான்தான் கவுன்சிலிங் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் நான் ஸ்பெஷலிஸ்ட். நீங்கள் போய் உங்கள் குழந்தையை அழைத்து வாருங்கள். ஒரு மணி நேரத்தில் நான் மாற்றிவிடுகிறேன் என்றேன் அப்பாவியாக. அவர் தன் கைக்குழந்தையை காட்டி இவளுக்குத்தான் நீங்கள் கவுன்சிலிங் கொடுக்கனும். அநியாயத்துக்கு இவளுக்கு கோபம் வருது என்றார்.

அவர்கள் குழந்தைகள் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டாலே போதும். நம் வீட்டு கரும்புகளில் குறும்புகள் எல்லாம் இனிக்கவே செய்யும். நமக்கும் ஒரு பூஸ்ட் கிடைக்கும்.

ஃப்ளேவர் ரொம்ப முக்கியம்

பூஸ்டாகட்டும் ஹார்லிக்ஸாகட்டும் அதனுடைய ஃப்ளேவர் பிடித்தால் மட்டுமே நம் குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இது நம் வார்த்தை பூஸ்ட்டுக்கும் பொருந்தும். உற்சாகப்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை படுத்திவிடக்கூடாது. காலையில் சாப்பாடு பூஸ்ட் மதிய சாப்பாடு பூஸ்ட் இரவு சாப்பாடும் பூஸ்ட் என்றால் அன்றே அது வெறுத்து விடும். அதனால்தான் சொல்கிறேன், உற்சாகப்படுத்துகிறேன் என்று குழந்தைகளை படுத்தி விடாதீர்கள்.

உங்களுக்கு பிடித்த செயலை செய்யும்போது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பிடித்த செயலை அவர்கள் செய்யும்போதும் பாராட்டுங்கள். கிரிக்கெட் விளையாடிவிட்டு வருகிறார் என்றால் உன்னை பார்க்கும்போது சச்சின் மாதிரியே இருக்கு என்று சொல்லுங்கள். அந்த பாராட்டின் மகிழ்ச்சியில் நிச்சயம் படிக்க உட்காரும்போது சிறப்பாக படிப்பார்கள்.

பூஸ்ட் குடித்தால் வேகமாக ஓடுவார்களா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பூஸ்ட் (உற்சாகம்) கொடுத்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றியாளர்களாக ஓடுவார்கள்.

உங்கள் குழந்தைகளின் வெற்றி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

  1. M.J. SYED ABDULRAHMAN

    Very good
    Thank You good wishes,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *